"கிச்சன் பக்கமே இனி வராத, ஓடிரு!" #Biggboss9 - Day 9

'கும்ப லக்கன, கும்ப லக்கன கும்பல கும்பாலே’ என்று பாட்டுப் பாடிக்கொண்டு ரொம்ப சீரியஸாக தர்பூசணிக்கு சோசியம் பார்த்துக்கொண்டிருந்தார் கானா வினோத்,
Housemates getting ready for task
Housemates getting ready for task@jiohotstar
Published on

கிச்சனில் இருந்த ஒரு பீங்கான் கோப்பையை யாரோ இரண்டாக உடைத்திருக்கிறார்கள் போல! பந்தா பாருவின் மீது சந்தேகம் கொண்ட தல, அவரை ’கிச்சன் பக்கமே இனி வராத, ஓடிரு’ என்று எச்சரித்தார். எச்சரித்தார் என்றால், நாம் எழுதியதுபோல காட்டமாகக்கூட இல்லை. 'இந்த சைடு வராதீங்க.. கிச்சனுக்குள்ள வேலை செய்யறவங்க மட்டும் இருக்கட்டும்' என்று தல துஷார் சொல்ல, தன் கிரீடம் இறங்கிவிட்டதாக உணர்ந்து சப்பாத்தி உருட்டும் கிச்சன் மேடை மீது ஏறி உட்கார்ந்துகொண்டு, வெளியே போகவே மாட்டேன் என்று அட்டூழியம் செய்துகொண்டிருந்தார் பாரு. 'இது சப்பாத்தி மாவெல்லாம் போட்டு பிசையற இடம், இப்படி இது மேல உக்காந்தா என்ன அர்த்தம்?' என்று பேசிப்பார்த்தார்கள். ம்ஹும். என்ன செய்வதென தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்த துஷாருக்கு வக்கீலாக உள்ளே வந்த கனி சரியான வாதங்களை அவர் மண்டையில் உறைக்கிற மாதிரி சொல்லிவிட்டு, ‘ஒண்ணுமில்லாத விசயத்துக்கு இப்படி மூச்சைத் தொலைக்க வைக்கிறியே, உனக்கு மண்டையில் ஏதாவது இருக்கா? உன்கிட்ட பேசறதுக்கு நாலு எருமை மாட்டுக்கிட்ட பேசி புரிய வைச்சிடலாம்’ என்று - நம் மனதில் இருந்ததையெல்ல்லாம் சொல்வது போலவே - திட்டிவிட்டுப்போனார்.

அப்படியும் இடத்தைக் காலி செய்யாமல் எல்லாவனையும் ரொம்ப நேரமாக வெறுப்பேற்றி, வேலை செய்யவிடாமல் ஆக்கிவிட்டு, பின்னர் ’எனக்கு சாப்பாடு வேண்டாம்’ எழுந்து போனார். ‘அப்பாடி, நீ சாப்பிட்டா என்ன சாப்பிடலன்னா என்ன? முதல்ல போய்ச்சேரு’ என்று கைதட்டி ஆரவாரம் செய்தார் அரோரா.

Vj Paaru argues with tushaar
Vj Paaru argues with tushaar@jiohotstar

பஞ்சாயத்து பேச வந்த டீலக்ஸ் அறை ஆட்களிடம் பிரச்சினையை காண்டாக எடுத்துச்சொல்லிக் கொண்டிருந்தார் தல. ’என்கிட்ட ஏண்டா கோவப்படுற? நாங்களே எங்க தலையில இந்த பாரெழவைக் கட்டிவிட்டுட்டீங்களே, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார் சுபி. ‘அம்மா தாயே, நீங்களாவது காது கொடுத்துக் கேட்கிறீங்க, போய் அவகிட்டச் சொல்லுங்கன்னுதான்னு உங்ககிட்ட சொல்றேன்’ என்று சொல்லவும், ‘நாங்க சொன்னா மட்டும் கிளுக்குன்னு கேட்டுரப் போறாளா அவ?’ என்று புலம்பினார் சுபி.

எல்லோரையும் குரங்காக்கி விட்டுப் போய்ப் படுக்கையில் படுத்துக்கொண்டு ‘இந்த ஊரு உலகமே எனக்கு எதிரா இருக்குது’ என்ற அவரது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார் பாரு. சர்வைவர் நிகழ்ச்சியில், அந்த நிகழ்ச்சியின் இயக்குநர்கள், அதை நடத்திய அர்ஜுன், போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் அவருக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று அணுகுண்டை தூக்கி வீசியவர்தான் இந்தப் பாரு என்பது வரலாறு.

‘அவ சாப்பிடுறா சாப்பிடலை அது பிரச்சினை இல்ல இப்போ. பண்ணின அட்டகாசத்துக்கு முதல்ல மன்னிப்புக் கேட்டாதான் சமைக்க முடியும்!’ என்று கனிவான கனி, காட்டமாகச் சொன்னார்.

‘ஐய்யய்யோ, இதைச் செய்யறதைவிட காளைமாட்டுல பால் கறந்துடலாமே, என்னை ஏண்டா தலயாக்குனீங்க?’ என்று சகல நாடிகளும் ஒடுங்கிப்போன தல துஷார், வேறு வழியில்லாமல் துணைக்கு வினோத்தையும், ஜெனிபாப்பாவையும் கூட்டிக்கொண்டு போய் அந்த முயற்சியில் இறங்கினார். மொரட்டு பிரவீனையே வந்து பார் என்பார் பாரு. ஜெனிபாப்பாவின் கொஞ்சலான, ‘ஹக்கா, நீங்க மன்ப்பு கேக்லனா யாரும் ஷாப்ட முடியாதுல’ என்று சொல்வதா அவரிடம் எடுபடப்போகிறது? மூவரையும் விரட்டியடித்துவிட்டார்.

அடுத்து வந்த கமருதீன், ‘வெளியே மக்கள் ஏதும் உங்களை தப்பா நினைச்சிடுவாங்க பாரு, வந்து பிரச்சினையை ஒரு ஸாரி கேட்டு முடிச்சி வைங்க’ என்றார். பாருவின் பக்கத்திலேயே உருண்டுகொண்டிருந்த தர்பூசணி, பாருவை இன்னும் உருவேற்றி விட்டுக் கொண்டிருந்தார். இவர் நடந்துகொள்வதையெல்லாம் பார்த்தால், இந்தாள் பிக்பாஸுக்குள் விளையாட வந்தவர் மாதிரி தெரியவில்லை, வெளியே யாரும் பெண் தரமாட்டேன் என்கிறார்கள், இங்கேயாவது கல்யாணத்துக்கு யாரையாவது தேற்ற முடியுமா என்று பார்க்க வந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அவரைப் பார்த்து, ‘யோவ் வாட்டர்மெலன், பக்கத்துலயே இருக்கியே, நாலு கடா வயசாகுதில்ல, அந்தம்மாவுக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல மாட்டியா?’ என வாட்டர்மெலனுக்கு ஒரு குத்து விட்டார் கமருதீன். கமருதீனின் நோக்கம் சரியானதுதான், ஆனால் அவருக்குப் பேசத் தெரியவில்லை, எளிதாகக் கோபப்படும் அதே நேரம் வார்த்தைகளையும் விட்டுவிடுகிறார். பதிலுக்குத் திட்டிய வாட்டர்மெலனை, அதே ஃப்ளோவில், ‘போடா உருண்டை!’ என்று பாடிஷேமிங் செய்துவிட்டார். இது கமருக்கு ஆபத்தாகவே முடியப்போகிறது.

கடைசியில் மற்றவர்களும் சாப்பிட முடியாமல் சூழ்நிலை நெருக்கியதால் பாரு வேறு வழியில்லாமல் மன்னிப்புக் கேட்டார். ஆனால், அது உள்ளிருக்கும் போட்டியாளர்களின் காதுகளுக்கும், பார்வையாளர்கள் நமது காதுகளுக்கும் நல்லதில்லை என்று அப்போது யாருக்குமே தெரியவில்லை.

நினைத்தது போலவே ஒரு ஸாரியைக் கேட்டுவிட்டு பெரிய ‘நம்மவர்’ கமல்ஹாஸன் மாதிரி, ‘நீங்கள் எல்லாம் சாப்பிடுவதற்காக நான் கேட்ட ஸாரி என்று வைத்துக்கொள்ளலாம், உங்களையெல்லாம் கொல்லாமல் விட்டதற்காக நான் கேட்ட ஸாரி என்று வைத்துக்கொள்ளலாம். இந்த ஸாரி எல்லாம் மக்கள் மத்தியில் என் செல்வாக்கை சரித்துவிடாது’ என்று பார்க்கிற ஆட்களிடமெல்லாம் புலம்பித் தள்ளிக்கொண்டிருந்தார்.

Subi discussing with Vj Paaru
Subi discussing with Vj Paaru@jiohotstar

இதெல்லாம் போதாதென இன்னொரு பக்கம், பதுங்குகுழி அரோரா, துஷாரைக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு,

‘கமரை எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா..’

’பிடிச்சிருக்குன்னா எப்படி? ஃபிரண்டாத்தானே?’ என்று பாதியிலேயே குறுக்கிட்டு உறுதி செய்துகொண்டார் தல.

‘ஆமா பிரண்டாத்தான், ஆனா அவன் என்னை லவ் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு’

’அதெல்லாம் ஆனா பாத்துக்கலாம், ஏன் இப்பவே கற்பனைக்கோட்டை கட்டிக்கிட்டிருக்கிற, இப்போதைக்கு நம்ம கமிட்மெண்டைப் பார்ப்போம்’ என்று பேச்சைத் திசைமாற்றினார் தல.

அடுத்தும் அதே தலயைக் கூட்டி வைத்துக்கொண்டு, ’எஃப்ஜேவை நான் ஏன் லவ் பண்றேன்னா…’ என்று தன்நிலை விளக்கத்தை யாரும் கேட்காமலேயே, சொல்லிக்கொண்டிருந்தார் ஆதிரை, அவர் பங்குக்கு!

அடுத்து வந்தது டெரர் டாஸ்க்கான பொம்மை பொம்மை! இந்த டாஸ்க்கில் நல்ல பிளேயர்களே அடிதடி, கடிபுடி என களேபரம் செய்வார்கள். இந்த குழு என்னென்ன செய்யக் காத்திருக்கிறார்களோ என்ற பயம் நமக்கு இயல்பாகவே ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை! அதை மாஸ்க் டாஸ்க்காக பெயர் மாற்றி சின்ன வித்தியாசம் காண்பித்திருந்தார்கள். நினைத்தது போலவே அடிதடிகள் நடந்தன. பாருவின் புராணமும் தொடர்ந்தது. ஒரு தடவை வாட்டர்மெலன் அவரது போட்டோவையே எடுத்து வைத்தபோது, ‘தூ’வென துப்பி மீண்டும் சிக்கலுக்குள் தலையை விட்டுக்கொண்டார் கமருதீன்!

சாதா வீட்டினர், வேறு யாருடையாவதைத்தான் எடுக்க வேண்டும். ஆனால் டீலக்ஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் அவரவர்கள் போட்டோவையே வைத்துக்கொள்ளலாம் என்பது விதி. அது சரிதான், ஆனால் வாட்டர்மெலன் திவாகர் பிக்பாஸிடம் சொல்லும்போதுகூட 'என்னோட போட்டோவ எடுத்தேன் பிக்பாஸ்' என்று சொல்லாமல், 'பிக்பாஸ் நான் வாட்டர்மெலன் ஸ்டார், என்னோடது எடுத்தேன்' என்று அவரே அவரைச் சொல்லிக்கொண்டதெல்லலாம் அருவருப்பாகத்தான் இருந்தது. சரி, அவர் அப்படிப் பேசவில்லையென்றால்தான் ஆச்சர்யம்.

முதல் ரவுண்டில் எஃப்ஜேவின் பின்னாலேயே போய் அவரை வெறுப்பேற்றிய பாரு, இரண்டாவது ரவுண்டில் வெளியேற்றப்பட்டதும், துஷாரைப் பிடித்துக்கொண்டு வன்மத்தை முழுதும் அவர் மீது இறக்கி டீஸிங் செய்துகொண்டிருந்தார். துஷாரும் தேமேயென்று வாங்கிக் கட்டிக்கொண்டார்.

Vikaram and Ramya doing the task
Vikaram and Ramya doing the task@jiohotstar

24x7 கிளிப்பிங்கில் காணக் கிடைத்த சில ஸ்பெஷல் காமெடிகள்:

காமெடி 1:

பந்தா பாரு, சபரியைக் கெஞ்சி, டார்ச்சர் பண்ணி, ஒரு கப் நூடுல்ஸைச் செய்து வாங்கி சாப்பிட்டுவிட்டு, ‘நூடுல்ஸ்ஸெல்லாம் செஞ்சு கொடுத்து என்னை இம்ப்ரெஸ் செய்யப்பார்க்கிறான்’ என்று சொன்னதுதான் நம் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது.

காமெடி 2:

’கும்ப லக்கன, கும்ப லக்கன கும்பல கும்பாலே’ என்று பாட்டுப் பாடிக்கொண்டு ரொம்ப சீரியஸாக தர்பூசணிக்கு சோசியம் பார்த்துக்கொண்டிருந்தார் கானா வினோத்! தர்பூசணியும் அது ஒரு சினிமா பாட்டு என்று கூட தெரியாமல், ‘சினிமா வாய்ப்பு கிடைக்குமா? சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பேனா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? குழந்தை குட்டி எப்படி?’ என்றெல்லாம் குறி கேட்டுக்கொண்டிருந்தார். பார்க்க சிரிப்பாக இருந்தாலும், ஒருவரின் அறியாமை மற்றும் சோசிய கான்செப்ட் என்பதால் இதை டெய்லி எபிசோடிலிருந்து தூக்கிவிட்டார்கள் போலிருக்கிறது. 

Puthuyugam
www.puthuyugam.com