போட்டியாளர்கள் வீட்டுக்குள் போனபின், பிக் பாஸின் ஸ்மால் பாஸ் விஜய் சேதுபதி அவர்களுடன் தொடர்புகொள்ளும் முதல் வாரத்தின் இரண்டாவது நாள்.
முதல் இடைவேளையின் போது, கனியும், விக்ரமும் பாருவை டீலக்ஸ் அறைக்குள் அனுப்பலாமா,வேண்டாமா என்று தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அதைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் எஃப்ஜே, ஆதிரையை நெருக்கி உட்கார்ந்தபடி, கனியின் மடியில் படுத்துக்கொண்டிருந்தார். ஆதிரையும் அவரது கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தார். இது எங்கே போய் முடியப்போகிறதோ தெரியவில்லை.
முதல் டாஸ்க்காக நாட்டாமை விசே, யாருக்கு பாலோயர்ஸ் அதிகரித்திருப்பார்கள், யாருக்கு ஹேட்டர்ஸ் அதிகரித்திருப்பார்கள் என்று சொல்லச் சொன்னார். ஆளாளுக்கு பாலோயர்ஸ் அதிகரித்திருப்பார்கள் என்று யாரை யாரையோ சொல்லிவிட்டு, ஹேட்டர்ஸ் அதிகரித்திருப்பார்கள் என்று பலரும் பாருவைக் கைகாட்டினார்கள். நேற்றையை எபிஸோடின் தொடர் தாக்கம்! அப்போதும் பூசணி ஸ்டார் எழுந்து, பாருவுக்கு பாலோயர்ஸ் அதிகரித்திருப்பார்கள் என்று நட்பை விட்டுக்கொடுக்காமல் சொன்னார். அதோடு நான் நடிப்பைப் போலவே கணிப்பதிலும், எடைபோடுவதிலும் வல்லவன் என்று சொல்லிக் கொண்டார்.
தர்பீஸ் நாயக்: "நான் நல்லா ஜட்ஜ்மெண்ட் பண்ணுவேன் சார்..."
விஜய் சேதுபதி: "ஒருத்தருக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குன்றத விட, அதெல்லாம் தெரிஞ்சிருக்குன்னும் தெரிஞ்சிருக்கு பாருங்க!"
இது கலாய் என்றறியாமல் லேடீஸ் மணிபர்ஸ் ஜிப் திறப்பது போன்றதொரு ஈஈஈஈஈஈ-யை வெளிப்படுத்தினார் தர்பூஸ் நாயகன்.
கேப்டன் டாஸ்க் விதிப்படி மொரட்டு பிரவீனே யூனிபார்மை போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்திருக்க, ’நாம் முகமூடியை வீசிவிட்டு வந்து உட்கார்ந்திருக்கிறோமே, இதை ஒரு பஞ்சாயத்தாக்கி நம்மை பஞ்சராக்கிவிடுவார்களோ’ என்ற பீதியிலேயே ஆதிரை உட்கார்ந்திருந்தார்.
அடுத்து எவிக்ஷன். ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கணிக்க, அதிகமாக அப்சராவும், பூமர் காந்தியும் கணிக்கப்பட்டனர். விசேவும் அதிக பில்டப் இல்லாமல் பிரவீண் காந்தியின் அட்டையைக் காண்பித்து வெளியே வரச்சொன்னார்.
பூமர் காந்தி இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அப்பட்டமாக அவரது நடவடிக்கைகளிலிருந்தே தெரிந்தது. ‘சார், ஒரு அழுவாச்சி சீனாவது போட்டுவிட்டுப் போங்க’ என்று யாரோ சொன்னதுக்கு கூட, ‘நோ சீன்ஸ்!’ என்று சொல்லிவிட்டு, ஒருத்தரிடமும் முகம் கூட கொடுக்காமல் வெளியே போகத் தயாரானார் பிரவீண் காந்தி.
பூமர்கள், பூமர்த்தனம் என்பது தெரியாமலே செய்கிற ஒரு விஷயத்தை வெளியேற்றத்தின்போது செய்தார் பிரவீண் காந்தி. 'நான் தோக்கல. என்னை யாராலும் தோக்கடிக்க முடியாது. இப்படிலாம் நிக்காதீங்க. என்னமோ நான் தோத்த மாதிரி ஃபீல் தராதீங்க' என்று நெருங்கிவந்த போட்டியாளர்களைக் கடிந்து கொண்டார். இந்த வெளியேற்றத்தினால் தான் பாதிக்கவே படவில்லை என்பதான தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு உடல்மொழியை வலிந்து மேற்கொண்டார். பார்க்கும் நமக்கு அவருக்குள் இருந்த ஏமாற்றம் பப்பரப்பே என்று தெரிகிற விதமாய் அது இருந்தது.
மேடைக்கு வந்தபின்பும், ‘இப்போதாவது நண்பர்களுக்கு ஒரு பை சொல்லுங்க’ என்று விசே கேட்டதற்கு, பெரிய கிருஷ்ணபரமாத்மா மாதிரி ‘நான் எங்கும் இருப்பேன், நான் தோற்கவே இல்லை, வெளியே போகவே இல்லை, எதற்கு பை சொல்ல வேண்டும்?’ என்று உளறினார். அதற்கு விசே, ‘அப்ப உள்ளயும்தானே இருப்பீங்க’ என்று அவரது மண்டையைக் கழுவி, சக போட்டியாளர்களோடு பேச வைத்து அனுப்பிவைத்தார்.
நினைத்தபடியே ஆதிரையின் முகமூடி பஞ்சாயத்தை எடுத்த விசே ‘விதிமுறை, விளையாட்டு, கட்டுப்பாடு’ என்று எதை எதையோ சொல்லி, ‘இதுக்கு நான் முகமூடியே போட்டுக்குறேன்’ என்று ஆதிரையை நினைத்துக்கொள்ள வைத்துவிட்டுக் கிளம்பினார்.
விக்ரமும், கனியும், சபரியும் சேர்ந்து அவருக்கு முகமூடியைப் போட்டுவிட்டார்கள். ’கண்ணு தெரியவில்லை, மூச்சு விடமுடியவில்லை, முகத்தில் நிக்க மாட்டேங்குது’ என்று என்னென்னவெல்லாமோ காரணம் சொல்லிக்கொண்டிருந்தார். இதெல்லாம் கேப்டன் டாஸ்க் நடக்கும்போது தோன்றவில்லை போலிருக்கிறது.
அடுத்து கொடுத்தனுப்பப்பட்ட இரவு உணவை, வழக்கம் போல கப்பில் அளவெடுத்து எல்லோருக்கும் சபரி கொடுக்க ஆரம்பித்தார். முந்திக்கொண்டு பந்தா பாரு, அவருக்கு மட்டும் தனியே போட்டுக்கொண்டு போக, அது பஞ்சாயத்தானது. கப் அளவை விட குறைவாகத்தான் எடுத்தேன் என்று பிடித்தபிடியில் அவர் நிற்க, வேறு யார் சொல்ல வந்ததையும் கேட்கத் தயாராக இல்லை. வழக்கம்போல அவரது அடிப்பொடி தர்பூசணி மட்டும் ’சாப்பிட வந்த பிள்ளையை சாப்பிட விடாம தொறத்துறீங்களேடா’ என்று சப்போர்ட்டுக்கு வர எல்லோரும் கடுப்பானார்கள். ஆனால், பூசணியின் டயலாக்குக்கு மாறாக தனியே போய் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார் பாரு.
தேவையே இல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு பாருவிடம் ‘சாரி’ சொல்லப்போன சபரியை பக்கத்திலிருந்த பூசணி, ‘சாப்பிட வந்த பிள்ளையை சாப்பிடவிடாமல் பண்ணிட்டியேடா’ டயலாக்கைச் சொல்லி கடுப்பேற்றினார். பாருவும் நான்லாம் சாப்டேனே என்று சொல்லாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் துதிபாடிகளை டீல் செய்யும் ரேஞ்சுக்கு தர்பீஸை டீல் செய்து கொண்டிருந்தார். தூக்கிப் போட்டு மிதிக்கலாமா என்று சபரிக்குத் தோன்றியிருக்கலாம், ஆனால், செய்யவில்லை!
இன்றைய ஆச்சர்ய அதிர்ச்சி:
தண்ணீர் பிடிக்கிற டாஸ்க்கை வைத்து இன்னும் இரண்டு வாரமாவது ஓட்டுவார்கள் என்று கடுப்பில் இருந்த நமக்கும், போட்டியாளர்களுக்கும் அதை நீக்கி, வயிற்றில் பாலை வார்த்தது.