எதிர்பாரா முதல் எவிக்‌ஷன்? #Biggboss 9 - Day 5

அவரை தல என்று வேறு கூப்பிட வேண்டுமாம், இதுதான் கொஞ்சம் இரிடேட்டிங்காக இருக்கிறது. செலக்ட் செய்யப்பட்ட துஷார் வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டு பேசலாம்
Pravin , Aathirai and Tushaar competing for Captaincy task
Pravin , Aathirai and Tushaar competing for Captaincy task@jiohotstar
Published on

வேறு வழியில்லாமல், தண்ணீர் வரும் குழாய்க்கு முகம் காட்டியபடி அதற்கு அடியில் சின்சியர் சபரி படுத்துறங்கியதால், தவறவிடாமல் தண்ணீரைப் பிடித்துக்கொண்டார்கள். இனி இந்த ஐடியாவில் மண்ணள்ளிப் போட பிக்பாஸ்தான் வேறு எதையாவது ரூம் போட்டு யோசிக்கவேண்டும். 

டீலக்ஸ் ரூமில் கடைசி ஆளும் எழுந்தால்தான் சமைக்க, Gas வரும், ஒருவாய் காபி கூட குடிக்க முடியும் என்பதால், கடைசி ஆளாக எழுந்திருக்க முடியாமல் நெளிந்து கொண்டிருந்த சுபியின் காலில் விழாத குறையாக கனியும், வினோத்தும் எழுப்பினார்கள். பந்தா பாரு, நேற்று நடந்த மல்யுத்தத்தில் தான் பெற்ற விழுப்புண்களை அனைவரிடமும் காட்டிக் கொந்தளித்தபடி கெமியின் மீது முழு வன்மத்தையும் இறக்கிக் கொண்டிருந்தார். ‘நீயும்தானே பண்ணினே’ என்று ஒரு பக்கியும் அவரை பதிலுக்குக் கேட்கவில்லை. யோசித்தால், "இவகிட்ட கேட்டு ஒண்ணும் ஆகப்போறதில்ல. புரிஞ்சுக்கவும் மாட்டா. பேசிட்டேதான் இருப்பா. நமக்குத்தான் காது பஞ்சாராகும்' என்றே அனைவரும் அதைப் பேசாமல் விட்டிருப்பார்கள் என்று தோன்றியது.

அடுத்து சிறை கட்டி வைச்சு அஞ்சாறு நாளா சும்மாதான் கிடக்குது, அதுக்குள்ளே தள்ள இரண்டு பேரை போட்டுக் கொடுக்கச் சொன்னார் பிக்பாஸ். எல்லோரும் சேர்ந்து, கானா வினோத்தையும், ஜெனி பாப்பா வியானாவையும் போட்டுக் கொடுத்தார்கள். ஜெயிலுக்குள் போகாவிட்டாலும், தன்னைச் சொன்ன காரணத்துக்காக வினோத்தைப் போட்டு வறுத்துக்கொண்டிருந்தார் ஆதிரை. 

டீலக்ஸ்வாசிகள், சாதாவாசிகளுக்கு சாப்பாடு இருக்கா என்றுகூட பார்ப்பதில்லை என்ற கடுப்பில், கனி, மொரட்டு பிரவீன், விக்கல் மூவரும் சேர்ந்து திட்டமிட்டுப் பழிவாங்க, சிக்கனில் உப்பைக் கொட்டி வைத்தார்கள். இதில் கனிவான கனியும் இருந்ததுதான் ஆச்சரியம். வீக்கெண்டில் அவருக்கு ஆப்பு இருக்கிறது.

Scene of Subi sleeping while housemates waiting
Scene of Subi sleeping while housemates waiting @jiohotstar

வீட்டு கேப்டன் இந்த சீசன் முதல் தல என்று அழைக்கப்படுவார் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். அந்த 'தல' போட்டிக்கான தேர்வான துஷார், ஆதிரை, பிரவீண் மூவரும் உள்ளறையில் உள்ள டாஸ்கில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும், அதில் யார் தேர்வு அதிக ரிஸ்கானது என்று டீலக்ஸ் வாசிகள் முடிவு செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருந்தார் பிக்பாஸ்.

அதில் ஒன்று 'இனி எதுவுமே பேசமாட்டேன். வாய்மூடி இருப்பேன்' என்ற தேர்வு. அதை துஷார் எடுத்து, இருந்த ஒரு துண்டை வைத்து வாயை முழுதும் கட்டிக்கொண்டார்.

அடுத்து 'முகமூடி அணிந்து கொண்டேதான் இருப்பேன்' - இதை ஆதிரை எடுத்துக்கொண்டு இருந்த ஒரு முகமூடியை எடுத்தார்.

அடுத்தது, 'எப்போதும் யூனிஃபார்மில் இருப்பேன்' - இதை பிரவீண் எடுத்துக்கொண்டார்.

இதில் பாதி முகம் மறைக்கும் வாய்க்கட்டோடு, முகமும் தெரியாமல் பேசவும் முடியாமல் இருக்கும் துஷார் எடுத்ததுதான் ரிஸ்கான ஆப்ஷன் என்று பிரவீண் காந்தி சொல்ல அதையே பலரும் வழிமொழிந்து அவரை கேப்டன் ஆக்கினார்கள். சர்ப்ரைஸாக துஷார் வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டு பேசலாம் என்று சொல்லிவிட்டு செலக்ட் செய்யப்படாத ஆதிரை முகமூடியோடும், பிரவீன் யுனிபார்மோடும் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் பிக்பாஸ். கேப்டன் போட்டிக்காக தியாகம் செய்யத் தயாரான நமக்கு அதே கட்டுப்பாடு தொடரும், ஆனால் துஷார் பேசலாம் என்றதில் கடுப்பான ஆதிரை, முகமூடியை கழற்றி வீசிவிட்டு பிக்பாஸோடேயே நேரடி போராட்டத்தில் இறங்கினார். தவிரவும் பிக்பாஸ் கொடுத்த அந்த துண்டால் முழுதும் முகம் மறைத்தது ரூல்ஸா? அப்படி ஒரு பெரிய துணியை பிக்பாஸ் கொடுக்கலாமா என்றெல்லாம் புலம்பித்தள்ளிக்கொண்டே இருந்தார்.

'நான் ரூல்ப்ரேக் செய்ததைப் பார்த்து, தானும் ரூல்பிரேக் செய்கிறார் ஆதிரை' என்றும், தான் தலையாகாத கடுப்பு என்றும் விதவிதமாக கருத்தாக்கம் செய்து கொண்டிருந்தார் பந்தா பாரு. பக்கத்திலிருந்த கிரிஞ்சு கலையும் அதற்கு மண்டையை ஆட்டினார்.

ஏற்கனவே முடிவு செய்தபடி கானா வினோத்தையும், ஜெனிபாப்பா வியானாவையும் ஜெயிலில் தூக்கிப் போட்டார்கள். அதற்குள் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை, நந்தினி கத்திக்கூப்பாடு போட்டு அத்தனை பேரையும் அதிர்ச்சியாக்கி, ஆடாமல் அசையாமல் ஆக்கி வைத்திருந்தார். நிஜத்திலேயே இந்த விளையாட்டுக்கு ஏற்றவராகத் தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல், பர்சனல் ட்ராமா உள்ளவராகத் தோன்றுகிறார். ’அப்படி என்னடா கண்டெண்ட் பசியெடுத்து அலையுறீங்க!’ என்று போட்டியாளர்களை ஒரு காட்டு காட்டினார். அது போட்டியாளர்களை மட்டுமல்ல, பிக்பாஸையும், பார்வையாளர்களான நம்மையுமே பார்த்துக் கேட்டது போலிருந்தது. ஆனால், கடைசியில் கிரிஞ்சு கலையரசனைப் பார்த்து ’உன்கிட்ட ஒரு சக்தி இருக்குடா, நீ ஜெயிப்பே’ன்னு ஆரூடம் சொன்னதுதான் ஒரு நல்ல படத்துக்கு கிரிஞ்சு கிளைமாக்ஸ் மாதிரி இருந்தது. மைக்கை கழட்டி விட்டு வந்து அவர் கத்திப் பேசினதுகூட மற்றவர்கள் மைக்கில் பதிவாகி தெளிவாகக் கேட்டது. அவ்வளவு சத்தமாகக் கத்தினார். மைக்கைக் கழட்டியவர் மாட்டிக்கொள்ளாமல், உட்கார்ந்து கொண்டு, 'நான் வெளில போறேன். அதான் எல்லாருக்கும் நல்லது. பிக்பாஸ் என்னைக் கூப்டட்டும்' என்று உட்கார்ந்தார். நந்தினி விரைவிலேயே வெளியேறுவார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே நந்தினியை கன்பெஷன் அறைக்கு அழைத்தார் பிக்பாஸ்.

Nandhini Confessing about her to Big Boss
Nandhini Confessing about her to Big Boss@jiohotstar

வழக்கமாக இது போன்ற சூழல்களில் போட்டியாளர்களைச் சமாதானப்படுத்தும் பிக்பாஸ், ‘இவரிடம் நம் பருப்பு வேகாது, இவர் இங்கிருப்பது நமக்கும் நல்லதல்ல’ என்று உணர்ந்து நந்தினியின் வேண்டுகோளை ஏற்று உடனேயே வெளியே அனுப்பிவைத்தார்! முதல் வெளியேற்றம் நந்தினி என்று தோன்றுகிறது. இல்லை எதும் டிராமா செய்து சனிக்கிழமை ட்விஸ்ட் இருக்குமா, இல்லை போன சில சீசன்கள் போல தனி ரூம் கொடுத்தார்களா என்பதெல்லாம் இன்று தெரியும்.

இன்றைய ரசனை: ஜெயிலில் இருந்தபடி வினோத், கிரிஞ்சு கலையிடம், ‘பார்க்க டம்மி பீஸா இருக்க ஆனா அதுக்குள்ள எப்படிடா 25 வயசுல,கல்யாணம், மூணு பிள்ளைங்க, காசி, அருள்வாக்கு, கிராமிய நடனம், இந்தியாவெங்கும் அதற்கான போராட்டம், ஜெயில் வாழ்க்கை, பத்மவிபூஷன்னு எப்படிடா இவ்ளோ வேலையைப் பார்த்து வைச்சிருக்க?’ என்று நமக்கிருந்த அதே சந்தேகத்தைக் கேட்டது!

இன்றைய காமெடி: பந்தா பாரு, நம்ம வேலையெல்லாம் பத்திரகாளியான நந்தினியிடம் வேலைக்காகாது என்று உணர்ந்து, அவர் காலில் விழுந்து சரண்டராகி, ‘நீ நல்லவதான்’ என்ற டேக் வாங்கியது.

Puthuyugam
www.puthuyugam.com