Mankanahalli Ridge Point  Google Maps
அறிவோம்

இயற்கையின் ஆச்சர்யம்! #MankanahalliRidgePoint

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்த ரிட்ஜ் பாயிண்டின் முக்கியத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு ஒரு கல்வெட்டையும், சிறிய கண்காணிப்பு கோபுரத்தையும் அமைத்திருக்கிறார்கள். இன்றும் அங்குள்ள பழைய அடையாளக்கல்....

ஆதி தாமிரா

இயற்கை தனக்குள் ஏராளமான அதிசயங்களை வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். சிலவற்றை நாம் அறிந்திருக்கிறோம், பலவும் நம் அறிதலுக்கு வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருக்கலாம். அதிசயங்கள் ஒருபுறமிருக்க, சின்னச்சின்ன சுவாரசியங்களையும், விளையாட்டுகளையும் கூட இயற்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில், கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மங்கனஹள்ளி ரிட்ஜ் பாயிண்ட் (Mankanahalli Ridge Point) எனும் இடமும் ஒன்று. இது, ’ஆசியாவின் நீர்ப்பிரிப்பு கோடு’ (The Great Watershed Ridge of Asia) என்று அழைக்கப்படும் ஓர் அபூர்வமான இடமாகும்.

இந்த ரிட்ஜ் பாயிண்டின் மிக முக்கியமான சுவாரசியம் அதன் புவியியல் அமைப்புதான். இந்த இடத்தில் விழும் ஒரு மழைத்துளி நீர், நேத்ராவதி ஆறாக மாறி மேற்கு நோக்கிப் பாய்ந்து மங்களூரு வழியாக அரபிக் கடலை அடைகிறது. அதற்குச் ஒரு சில அங்குலங்கள் தள்ளி விழும் மற்றொரு மழைத்துளி நீர், ஹேமாவதி ஆறாக மாறி கிழக்கு நோக்கிப் பாய்ந்து காவிரியுடன் இணைந்து பலநூறு கிலோமீட்டர்கள் பயணித்து, வங்காள விரிகுடாவை அடைகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்த ரிட்ஜ் பாயிண்டின் முக்கியத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு ஒரு கல்வெட்டையும், சிறிய கண்காணிப்பு கோபுரத்தையும் அமைத்திருக்கிறார்கள். இன்றும் அங்குள்ள பழைய அடையாளக்கல் இந்த நீர்ப்பிரிப்புக் கோட்டின் எல்லையைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த இடம் அமைந்துள்ள பிஸ்லே காட் (Bisle Ghat) மலைச்சாலை என்பது ஒரு காலத்தில், கேரளக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து மைசூர் சமவெளிக்குச் சரக்குகளைக் கொண்டு செல்லும், ரகசியப் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு இது அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் அந்நியப் படைகள் இங்கு நுழைய அஞ்சியிருக்கின்றன.

புவியியல் ஆய்வாளர்கள் இந்த ஹசன் ரிட்ஜ் பாயிண்டை "The Great Continental Divide" என்று அழைக்கிறார்கள். இது வட அமெரிக்காவின் ராக்கி மலைத்தொடரில் இருப்பதைப் போன்ற ஒரு அமைப்பாகும். உலகெங்குமே இப்படியான இடங்கள் இருக்கின்றன என்றாலும், இவ்வளவு துல்லியமான நீர்ப்பிரிப்புக் கோடுகள் மிகவும் அரிதானதாக் கருதப்படுகிறது. 

Mankanahalli Ridge Point

ஒரு சிறிய மலைச்சிகரத்தின் ஓரிடத்தில் விழுந்து, அங்கிருந்து பிரியும் நீர், இரு வேறு திசைகளில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து வெவ்வேறு கடல்களில் சங்கமிப்பது இந்த ரிட்ஜ் பாயிண்டை ஒரு சுவாரசியமான இடமாக்குகிறது. அதனால், இது கர்நாடகாவின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலாத் தலமாகவும் கருதப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த இடம் மட்டுமின்றி, இதனருகே இருக்கும் மேலும் சில இடங்களையும் கவனத்தில் கொள்ளலாம்.

ரிட்ஜ் பாயிண்டிற்கு அருகே அமைந்துள்ள பிஸ்லே வியூ பாயிண்ட்டிலிருந்து, பனிமூட்டத்துக்கிடையே, வரிசையாகத் தோற்றம் தரும் புஷ்பகிரி, குமாரபர்வதம், யேனிகல்லு எனும் மூன்று மலைத்தொடர்களின் அழகை ரசிக்கலாம்.

யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் மிக முக்கியமான 18 உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட பகுதிகளில் (Biodiversity Hotspots) இதுவும் ஒன்றாகும். இங்கு மட்டுமே காணப்படக்கூடிய அபூர்வமான மூலிகைகள், வண்ணத்துப்பூச்சிகள், நூற்றுக்கணக்கான தவளை இனங்கள் மற்றும் மர அணில்கள் இந்தப்பகுதியின் சிறப்பு. மழைக்காலங்களில் இந்த இடம் பச்சைக் கம்பளம் போர்த்தியது போல காட்சியளிக்கும்.

ரிட்ஜ் பாயிண்டிற்குச் செல்லும் வழியில், ஹேமாவதி ஆற்றங்கரையில் ஷெட்டிஹள்ளி ஜெபமாலை மாதா தேவாலயம் உள்ளது. இது மழைக்காலத்தில் ஹேமாவதி அணையில் நீர் நிரம்பும்போது முழுவதுமாக நீருக்குள் மூழ்கிவிடும். கோடைக்காலத்தில் நீர் வற்றும்போது மீண்டும் வெளியே தெரியும். இதனால் இது 'மூழ்கும் தேவாலயம்' (The Submerged Church) என்ற பெயரில் புகழ்பெற்றிருக்கிறது.

ஹசன் ரிட்ஜ் பாயிண்டிற்குச் செல்லும் பாதையே ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளையும், பாதையின் இருபுறமும் இருக்கும் அடர்ந்த காடுகளையும் கொண்ட ரம்யமான பயணத்தைத் தரும். குறிப்பாக ட்ரெக்கிங் (Trekking) செல்பவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த இடமாகும்.

ஹாசன் ரிட்ஜ் பாயிண்ட் என்பது வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல, அது இயற்கையின் நுணுக்கமான சமநிலையை நமக்குக் காட்டும் ஒரு பகுதி. இந்தியாவின் இரண்டு பெரும் கடல் பரப்புகளை ஒரு சிறிய மலைச்சிகரம் இணைக்கும் விந்தை, இயற்கையின் விளையாட்டுகள் எத்தனை சுவாரசியமானவை மற்றும் இயற்கை, எவ்வளவு வலிமையானது என்பதற்கான சான்று.