நாகம் மற்றும் விரியன் பாம்புகளின் பற்களில் உள்ள வித்தியாசம்
அறிவோம்

ஆபத்தான நான்கு வகைப்பாம்புகள் எவை தெரியுமா? #summer #vipers

கோடைக்காலம் தொடங்குகிறது. வெப்பம் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் நுழையலாம். எனவே, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

எம். குமரேசன்

இந்தியாவில் அதிக அளவில் பாம்புகள் வசிக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் பல லட்சம் மக்கள் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர். சர்வதேச அளவில் பாம்புக்கடியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகம். உலக அளவில் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில், பாதியளவு இந்தியாவில்தான் நிகழ்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஊனம் அடைகின்றனர். நாட்டிலேயே உத்தரபிரதேசம், பிஹார் , மத்திய பிரதேசம் , ஒடிசா , ஜார்கண்ட், ஆந்திர மாநிலங்களில்தான் பாம்புக் கடியால் அதிகளவில் உயிரிழப்பு நடக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 3,100 பேர் பாம்புக் கடியால் இறக்கின்றனர்.

தற்போது, பருவநிலை மாற்றத்தால் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாட்டில் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் வெயிலின் அளவு கூடும்போது, பாம்புக்கடி சம்பவங்களும் அதிகரிக்கின்றன. தற்போது, கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குள் பாம்புகள் வர வாய்ப்புகள் அதிகம் உருவாகியுள்ளது. வீடுகளுக்குள்ளும் பாம்புகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

பாம்பு கடித்தால், என்ன செய்ய வேண்டும்? என்கிற அறியாமையால் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் அதிகம் நிகழ்வதாக கூறப்படுகிறது.

விரியன் ரக பாம்புகள்

இந்தியாவில் பிக் - 4 என்று சொல்லப்படும் 4 விஷப்பாம்கள் கடியால்தான் அதிக உயிரிழப்புகள் நடக்கிறது . அதாவது, நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய பாம்புகளால்தான் அதிக மக்கள் கொல்லப்படுகின்றனர். விரியன் ரக பாம்புகளின் தலை டைமண்ட் போல முக்கோணமாக காணப்படும். இதுதான் அவற்றின் முக்கிய அடையாளம். ராஜநாகம் அதிக விஷம் கொண்ட பாம்பாக இருந்தாலும் அடர்ந்த வனப்பகுதியில்தான் அவை கூடு கட்டி வசிக்கும். கூச்ச சுபாவம் கொண்டவை. இதனால், இந்த ரக பாம்புளால் உயிரிழப்பு எப்போதாவதுதான் நிகழ்கிறது

பொதுவாக விஷப்பாம்புகளில் விரியன் ரக பாம்புகளின் பற்கள்தான் மிக நீளமாக கூர்மையாக இருக்கும். பாம்புகளின் தலையில் அவற்றின் கோரை பற்கள் அமைந்துள்ள பகுதிக்கு மேலும் கண்களுக்கு கீழ் பகுதியில் விஷப்பை அமைந்துள்ளது. விரியன் ரக பாம்புகள் வேகமாக அட்டாக் செய்பவை. பற்கள் மிக கூர்மையானவை. தாக்கிய இடத்தில் ஊசி போல பற்களை இறக்கி அதிகமான விஷத்தை உடலுக்குள் செலுத்தி விடும். இதனால், மின்னல்வேகத்தில் பாம்பின் விஷம் ரத்தத்தில் கலந்துவிடும்.

பொதுவாக, விஷப்பாம்புகள் கடித்த இடத்தில் ஒரு பல்லின் தடம் அல்லது இரு பல்லின் தடம் மட்டுமே காணப்படும். அப்படியென்றால், விரியன் ரக பாம்பு நம்மை கடித்துள்ளதாக உறுதியாக நம்பலாம். நாகப்பாம்புக்கு விரியன் ரக பாம்புகளை விட பற்களின் நீளம் குறைவானது. கூர்மைத்தன்மையும் சற்று குறைவு. இதனால், நாகப்பாம்புகள் கடித்தால் அதிகளவில் விஷம் நமது உடலில் இறங்காது. அதே வேளையில், விஷமற்ற பாம்புகள் கடித்தால் பல பற்களின் தடம் கடிபட்ட இடத்தில் காணப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தின் அருகே கயிறு கொண்டு ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு எல்லாம் கட்டக்கூடாது. கடிபட்ட இடத்தின் அருகே மோதிரம் அல்லது வேறு ஏதாவது அணிந்திருந்தால் உடனே கழற்றி விட வேண்டும். இயன்றவரை உடலில் அசைவு இல்லாமல் இருப்பது நல்லது. கடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க கூடாது. சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவ கூடாது. பதற்றப்படாமல் அமைதியாக மிக விரைவாக மருத்துவமனைக்குச் சென்றால், உடனடி சிகிச்சை பெற்றுவிட முடியும். பாம்புக்கடிக்கு பாம்பின் விஷத்தில் இருந்தே விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக காணப்படும் விஷப்பாம்புகளுக்காக ஒட்டு மொத்தமாகவும் விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. தனிப்பட்ட விஷ முறிவு மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது.

எனவே, பாம்பு கடித்தால் இனி அவ்வளவுதான் என்று பதற்றப்பட வேண்டாம். விரைவாக, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதுதான் ஒரே தீர்வு.