உலகில் இன்று பல இன்ஜீனியரிங் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இருக்கலாம். ஸ்டேன்ஃபோர்டு, ஐஐடி, மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழங்கள் உலகளவில் பெயர் பெற்று விளங்கலாம். ரேங்கிங்கிலும் முதலிடத்தை பிடிக்கலாம். ஆனால், இவற்றுக்கு எல்லாம் வித்திட்ட கல்லூரிதான் Estates Engineering School. உலகிலேயே மிகப் பழமையான இன்ஜீனியரிங் கல்லூரி இதுதான். கி.பி 1700ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் பல இடங்களில் போர்கள் நடந்து கொண்டிருந்தன. இதனால், புதிய தொழில்நுட்பங்கள் , கண்டுபிடிப்புகள் அவசியமாக இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில் 1707 ஆம் ஆண்டில், அப்போது ஹாப்ஸ்பர்க் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பிராகாவில், மன்னர் முதலாம் ஜோசப் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டதுதான் இந்த கல்லூரி. முதலில் Estates Engineering School என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது , 'செக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்' (CTU) என்று இது அழைக்கப்படுகிறது. இந்தக் கல்லூரி 1707ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. இந்தக் கல்லூரி உருவான வரலாறு என்ன?
கடந்த 1705ம் ஆண்டு கோட்டைகளை நிர்மாணிப்பதில் திறமை மிகுந்த கிறிஸ்டியன் ஜோசப் வில்லன்பர்க் என்பவர் மாணவர்களுக்கு இன்ஜீனியரிங் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுக்க அனுமதி கேட்டு, மன்னர் முதலாம் ஜோசப்பை அணுகினார். குறிப்பாக ராணுவத்துக்கான கோட்டைகள் அமைப்பதற்கு இந்தக் கல்வி உதவியாக இருக்கும் என்றும் மன்னரிடத்தில் விளக்கிக் கூறினார் உடனே, மன்னர் அனுமதி அளிக்கவே இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. உலகில் இன்ஜீனியரிங் படிப்புகளுக்கு வித்திட்ட முதல் மனிதராக கிறிஸ்டியன் ஜோசப் வில்லன்பர்க் மாறினார். இங்கு, மாணவர்கள் சர்வே செய்வது, வரைபடம் தயாரிப்பது, கழிவுநீர் கால்வாய்கள் அமைப்பது, சாலைகள், பாலங்கள் அமைப்பது போன்ற பயிற்சியைப் பெற்றனர். பிற்காலத்தில், பிரகாவில் வில்லன்பர்க்கின் மாணவர்கள் பல கோட்டைகளை நிர்மாணித்தனர்.
காலப்போக்கில் இயந்திர பொறியியல், தொழில்நுட்ப வேதியியல் , நீர் மேலாண்மை மற்றும் சாலைக் கட்டுமானம் போன்ற துறைகள் தோன்றின. தொழில்துறை புரட்சி ஏற்பட்ட காலக்கட்டத்தில், தொழில்நுட்பக் கல்விக்கான தேவை அதிகரித்தது. இதனால், புதுப்புது துறைகள் உருவாகின. பொறியியல் துறை படிப்படியாக ராணுவ பயன்பாட்டிலிருந்து தொழில்துறை தேவைக்கான படிப்பாக மாறத் தொடங்கியது. 300 ஆண்டுகளாக இயங்கி வரும் செக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் ,ரோபாட்டிக்ஸ், உயிரி மருத்துவம் என 100 க்கும் மேற்பட்ட துறைகள் இயங்குகின்றன. இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை வழங்கப்படுகிறது.
செக் குடியரரின் Estates Engineering School- ஐ தொடர்ந்து ஜெர்மனியில் 1745ம் ஆண்டு TU Braunschweig இன்ஜீனியரிங் கல்லூரி உருவானது. இப்படி, படிப்படியாக ஐரோப்பாவில் இன்ஜீனியரிங் கல்லூரிகள் பரவலாக உருவாகத் தொடங்கின. ஐரோப்பாவில் இன்ஜீனியரிங் படிப்பு தொடங்கப்பட்டு , 150 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1847ம் ஆண்டு - இந்தியாவில் ஒடிசாவிலுள்ள ரூர்க்கியில் பொறியியல் கல்லூரி நிறுவப்பட்டது. தொடக்கத்தில் இந்தியாவில், நீர்ப்பாசனம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சிவில் இன்ஜீனியரிங் படிப்பு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. 1854ம் ஆண்டு 'தாம்ப்ஸன் சிவில் இன்ஜீனியரிங் கல்லூரி' என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. 2001ம் ஆண்டு இதுவே ஐஐடி ரூர்க்கி என தரம் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கிண்டி இன்ஜீனியரிங் கல்லூரிதான் முதன்முதலில் - 1794ம் ஆண்டு - தொடங்கப்பட்டது. School of Survey என்ற பெயரில் புனித. ஜார்ஜ் கோட்டை அருகே மைக்கேல் டாப்பிங் என்பவரால் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் 8 மாணவர்கள் பயின்றனர். 1920ம் ஆண்டு தற்போது செயல்பட்டு வரும் கிண்டி கேம்பசுக்கு இந்த கல்லூரி மாறியது. 1925ம் ஆண்டு ராவ்பகதூர் ராஜரத்தினம் ஐயர் என்பவர் இந்த கல்லூரியில் முதல்வரான முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 1946ம் ஆண்டு பேராசிரியர் சுகுமாரன் என்பவர் இந்தக் கல்லூரியில் இருந்து முதல் டாக்டரேட் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.
பிராகாவில் கோட்டைகள் கட்டுவது முதல் பிரிட்டிஷ் இந்தியாவில் நீர்ப்பாசன கால்வாய்கள் அமைப்பது வரை, பொறியியல் கல்வி காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. இப்போது , விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு என இன்ஜீனியரிங் படிப்பு வேறு நிலைகளை தொட்டுள்ளது.