இந்த வீட்டுக்கு வந்து 2 வருடங்கள் ஆகிறது. காலை மணி 7.30 ஆகும்போது சரியாக காலிங் பெல் ஒலியைக் கேட்க முடியும். எங்கள் வீட்டு பால்காரரின் டைமிங் அது. ஒரே ஒரு நாள் கூட அவர் தவறியதில்லை. ஆனால், இன்று காலிங் பெல் அடிக்கவில்லை. ஆச்சரியமாகிப் போய் உட்கார்ந்திருந்தால், 8.10க்கு ஒரு புதியவர் வந்து பாலைக் கொடுத்துவிட்டுப் போனார். ‘அண்ணன் காலையில் பைக் ஸ்கிட்டாகி விழுந்துட்டார். அதனால் வேறு பால் ஏற்பாடு செய்து, என்னை கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். அதனால்தான் தாமதம் ஆகிவிட்டது, ஸாரி சொல்லச் சொன்னார்!’
‘முதல்ல அவர் எப்படி இருக்கார்னு சொல்லுங்க’
‘பயப்பட ஒண்ணுமில்ல, கால்ல லேசா அடி. நாளைக்கு ரெகுலராக வந்துடுவார்’ என்று அவர் சொல்லிவிட்டுக் கிளம்பினார். இது எனக்கு முதலில் வியப்பைத்தான் ஏற்படுத்தியது. நாள் தவறாத, நேரம் தவறாத சேவை. ஓர் இன்னல் வந்த போதும், அதற்கு மாற்றை நாம் ஏற்பாடு செய்து கொடுத்தாக வேண்டும் எனும் முனைப்பு. அதுவும் வேறு பாலை ஏற்பாடு செய்வதும், புதிய ஆளுக்கு ஒவ்வொரு வீட்டின் சரியான அடையாளங்களையும் சொல்லி அனுப்புவது அத்தனை எளிதானதா என்ன? அடிபட்ட வலியிலும், மற்றவர்களைப் பற்றி அவரால் எப்படி யோசிக்க முடிந்திருக்கிறது?
நானெல்லாம் ‘ஒரு நாள் பால் இல்லைன்னா என்ன? கடையில வாங்கிக் குடிக்க மாட்டானுங்களாமா?’ என்று முதலில் எனக்கு மருத்துவம் செய்துகொள்வதில்தான் கவனமாக இருந்திருப்பேன்.
வீடு வீடாக பால் கொடுப்பது என்பது ஒரு ரொட்டீன் வேலை! இதுபோல பஸ் கண்டக்டர், புரோட்டா மாஸ்டர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், பேப்பர்காரர், ஆட்டோ டிரைவர், ஏடிஎம் செக்யூரிடி, பெட்ரோல் பங்க் ஊழியர், அசெம்பிளி லைன் பணியாளர், சினிமா டிக்கெட் கொடுப்பவர், வங்கிக் கேஷியர் என விதம் விதமான, சின்னதும் பெரிதுமான ரொட்டீன் வேலைகள் இருக்கின்றன. வங்கி கேஷியர் போன்ற பெரிய புரஃபைல் வேலைகளைத் தவிர்த்துவிட்டு, பெரும்பாலும் நாம் இந்த ரொட்டீன் வேலைகளைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இதில் கிரியேடிவான வேலையில்லை, புதுமையாக சிந்தித்து செயலாற்றிட இங்கு ஒன்றுமில்லை என்று நினைக்கிறோம்.
உள்ளூர் பஸ் கண்டக்டர் ஒருவரைப் பார்த்திருக்கிறேன். ஓடும் பஸ்ஸில் நின்று கொண்டே ஸ்டேஜ் குளோசிங் எழுதுவார். உள்ளங்கைக்குள் மடித்து வைத்திருக்கும் பேப்பரில் சரசரவென்று முத்து முத்தாக எழுதுவதைப் பார்த்தால் எப்படி இவரால் இது முடிகிறது என்று தோன்றும். ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால் கிடைக்கும் அனுபவமும், வேகமும், துல்லியமும் இவர்களைத் தனித்துவமானவர்களாக ஆக்குகிறது.
மறுபுறம், கிரியேட்டிவான வேலைகளாகக் எழுத்தாளர், வக்கீல், மருத்துவர், எஞ்சினியர், சினிமா இயக்குநர், பத்திரிகையாளர், ஆய்வாளர், ஆர்கிடெக்ட், ஸாஃப்ட்வேர் டெவலப்பர், கிராஃபிக் டிசைனர் போன்ற ஏராளமான துறைகளைக் கருதுகிறோம். உண்மைதான்! ஆனால், இந்த வேலைகளையும் விதிகளுக்குள் இயங்கும் ரொட்டீன் வேலைகளாக்கி வைத்திருப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். மாறாக, எங்கள் வீட்டுப் பால்காரரைப் போல எடுத்துக்கொண்ட வேலை ரொட்டீன் ஆனாலுமே கூட, அதைத் தனது தனித்துவமான அணுகுமுறையால் செம்மைபடச் செய்வோரும் உள்ளனர்.
ரொட்டீன் வேலைகள் ஒரு விதத்தில் சாந்தமானவை. தினமும் ஒரே மாதிரியான தொடக்கம், வரையறுக்கப்பட்ட விதிகளுக்குள் இயக்கம், கிட்டத்தட்ட ஆட்டோபைலட் மாதிரியான பணி ஒழுங்கு! கொஞ்சம் போரடிக்கக்கூடும், ஆனால், எந்த ரிஸ்க்கும் இல்லை. ஆனால், கிரியேடிவ் வேலைகளில், தினமும் புதிது புதிதாக யோசிக்க வேண்டிய சூழல். ஒவ்வொரு நாளும் புதிதான ஒன்றைச் சந்திப்பார்கள், சிந்திப்பார்கள். இது எக்ஸைட்டிங் ஆனதுதான், ஆனால் தீவிரச் சிந்தனை, சீக்கிரமே நம்மைச் சக்தியை உறிஞ்சிவிடும்.
ரொட்டீன் வேலைக்கு ஒழுக்கம் (discipline) முக்கியமானது, கிரியேடிவ் வேலைக்கு ஆர்வம் (curiosity) முக்கியமானது.
கிரியேட்டிவ் வேலைகள், இவ்வுலகினை ஓர் எஞ்சினைப் போல முன்னே இழுத்துக்கொண்டு போனாலும், பின்னால் ஓடிவரும் ஏராளமான பெட்டிகள்தான் ஆட்களையோ, பொருட்களையோ சுமந்துகொண்டு போகும் ரயிலின் ஆதார நோக்கத்தை முழுமைப் படுத்துகின்றன. இவர்கள் இணைந்து இயக்குவதால்தான் இந்த உலகம் உயிர்த்திருக்க முடிகிறது.