இந்த உலகத்திலேயே தன் நிழல் தரையில் விழாத ஒரு புல்லோ, செடியோ, மரமோ, கட்டிடமோ இருக்கிறதா? ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஒன்றுதான் நிழல் தரையில் விழாத ஒரே அதிசயக் கட்டிடம். அது எப்பேர்ப்பட்ட தமிழர்களின் அறிவியல் தொழில்நுட்பம்! இல்லையா?’ என்று சமீபத்தில், ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இப்படித்தான், இன்னும் பல விசயங்கள் ரொம்பக் காலமாக நம்மிடையே சுற்றிக் கொண்டிருக்கின்றன. சட்டென நினைவுக்கு வரக்கூடியவை என்று பார்த்தால்,
1. ஸ்ரீரங்கம் கோவில் கோபுரக்கலசம், மிகத்துல்லியமாக பூமியின் மையப்புள்ளியில் அமைந்துள்ளது.
2. எம்ஜியார் சமாதியில் அவரது வாட்ச் இன்னும் டிக்டிக் என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது.
3. தஞ்சைக் கோவில் வாசலிலிருக்கும், நந்தியின் கற்சிற்பம் ஒவ்வொரு ஆண்டும் 1 மிமீ வளர்ந்து வருகிறது.
4. திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே சாட்டிலைட் எல்லாம் ஒரு விநாடி செயலிழந்து, பிறகு ரீஸ்டார்ட் ஆகிக் கடந்து போகின்றன.
5. நேபாளத்தின் கண்டகி நதியில் விளையும் கற்களுக்குள் விஷ்ணுவே வஜ்ரகிரீடம் வடிவெடுத்துப் புகுந்து சாளக்கிராமக் கற்களை உருவாக்குகிறார்.
6. ஓம் எனும் மந்திரத்தை உச்சாடனம் செய்தால், நம் டிஎன்ஏவில் மாற்றம் நிகழ்ந்து, இந்த யூனிவர்ஸிலிருக்கும் பாஸிடிவ் எனர்ஜியெல்லாம் நம் நரம்புகள் வழியாக ஈர்க்கப்படும்.
ஒரு காலத்தில் Ph.D படிப்பது என்றால் படிப்பில் பல வருடத் தீவிரம், நூலகங்களில் தூங்காமல் கழிக்கும் இரவுகள், ஆய்வுக்கட்டுரைகளை எத்தனை முறை திருத்தி எடுத்துச் சென்றாலும், அத்தனை முறையும், “இன்னும் சரி இல்லை” என்று சொல்லியனுப்பும் கைடு பேராசிரியரின் நிரந்தர வசனம்- இவையெல்லாம் சேர்ந்துதான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று?
“ஹார்வர்டு ரிசர்ச் என்ன சொல்கிறது என்றால்…”
“NASA விஞ்ஞானிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்…”
“ஜெர்மனியில் இப்போது இப்படித்தான்…”
“அப்துல்கலாம் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்த போது..”
இப்படியான வரிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும், அந்தச் செய்தி உண்மைதான் என்று நம்பிவிடுகிறோம். கூடுதலாக, ’உண்மையான தமிழர்களாக இருந்தால்…’ என்ற மிரட்டல் வார்த்தைகளும் இருந்துவிட்டால், குறைந்தபட்சம் நம்புவதற்கும், பார்வெர்டு செய்வதற்குமான கட்டாயம் நம்மீது திணிக்கப்படுவதாக உணர்கிறோம்.
இதுதான் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியின் அட்ராசிட்டி! இந்த யூனிவர்சிட்டிக்கு அட்மிஷன் தேவையில்லை, சிலபஸ் கிடையாது, தேர்வுகள் எதுவும் இல்லை, ஆனால், இது உருவாக்கும் முனைவர்கள் மட்டும் ஏராளம்!
ஒரு மெசேஜை இரண்டு முறை படித்தாலே ஒருவர் ’நான் இதை ஆராய்ந்தேன்’ என்ற நிலைக்கு வந்துவிடுகிறார். மூன்று குழுக்களில் அவர் அதை share செய்து, நான்கு லைக்ஸ் வாங்கிவிட்டால், அவர் தன்னை ’இந்த டாப்பிக்கில் தான் கரைகண்டுவிட்டதாக’ உணர ஆரம்பித்துவிடுகிறார். இப்படிக் கண்ட கருமாந்திரங்களையும் தொடர்ச்சியாக forward-செய்து அதற்கு எந்த எதிர்ப்பும் வராவிட்டால் மூன்றே மாதத்தில் அவர் Ph.D தகுதியை அடைந்துவிடுகிறார்.
அதன் பின் அதே விசயங்களைப் பாதுகாக்கவும், பல்வேறு வழிகளில் பரப்பவும், அவற்றுக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களை எதிர்த்துப் போராடவும் அவருக்கு சக்தி கிடைத்துவிடுகிறது.
வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியின் முக்கியமான அடிப்படை என்ன தெரியுமா? எந்தச் செய்திகளுக்குமே Source கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால்,
‘பறவையிடம் பாஸ்போர்ட் கேட்பாயா?’
‘கரண்டைக் கண்ணால் பார்க்க முடியுமா?’
‘இசையை மூக்கால் உணரமுடியுமா?’
என்றெல்லாம் அதி உன்னதமான Pseudo -intellectual தாக்குதல் தொடங்கிவிடும். ’ஆயிரம் அறிவாளிகளோடு போராடிவிடலாம், ஆனால் ஒரு முட்டாளோடு போராட முடியாது’ என்ற பெரியாரின் பொன்மொழி உங்களுக்கு ஞாபகம் வந்து அந்த இடத்திலிருந்து தெறித்து ஓடி வந்துவிடுவீர்கள். ஆனால், அவர்களோ, உங்களை வீழ்த்திய வெற்றிக் கொண்டாட்டத்திலிருப்பார்கள்.
இவர்களெல்லாம் பெரும்பாலும் பள்ளிகளில் பாடப்புத்தகத்தை போரிங் என்று தூக்கிப் போட்டவர்களாக இருப்பார்கள், ஆனால் ஒரு WhatsApp forward-ஐ மட்டும் ஏன் இப்படி கண்மூடித் தனமாக நம்புகிறார்கள்? ஏனென்றால், இங்கே உழைப்பு தேவையில்லை, படிக்க வேண்டாம், சிந்திக்க வேண்டாம், எதையும் சரிபார்க்க வேண்டாம். சிம்பிள்!
அறிவு என்பது கேள்வி கேட்பதில் தொடங்க வேண்டும். ஆனால், வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில், கேள்வி கேட்பதே முதல் குற்றமாகயிருக்கிறது. அவ்வளவுதான் அதன் பெருவெற்றிக்குக் காரணமே!