Goverment Jobs AI GENERATED
அறிவோம்

அரசு வேலை என்பது சுகவாசிகளின் இலக்கா?

முதலில் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நிரந்தரமான பணி, நல்ல சம்பளம், பென்ஷன், பாதுகாப்பான எதிர்காலம்! இதெல்லாம் சேர்ந்துதான் அரசு வேலைகள் மீது மக்களுக்கு ஒரு பெரும் ஈர்ப்பை உருவாக்குகிறது.

ஆதி தாமிரா

சமீபத்தில், நகைக்கடன் வாங்குவதற்காக ஓர் அரசு வங்கிக்குச் சென்று காத்திருக்க நேர்ந்தது. நடைமுறைகளை முடித்துப் பணத்தை வாங்குவதற்குள் சுமார் 3 மணி நேரமாகிவிட்டது. ’10 நிமிட வேலை, சட்டுப் புட்டென்று முடித்துக் கொடுத்து அனுப்பி வைக்காமல், அப்படி என்னதான் செய்கிறார்கள், சோம்பேறிகள்’ என்று இருக்கைகளில் காத்துக்கிடக்கும் நமக்குத் தோன்றத்தான் செய்கிறது.

‘அரசு வேலையென்றால் சோம்பேறிகளுக்கான பாதுகாப்பான இடம். வேலை செய்யாமல், ஓபி அடித்துவிட்டுச் சம்பளம் வாங்கிச் செல்லுகிற வேலை! தனியாரில் எவ்வளவு கடினமாக வேலை செய்ய வேண்டும் தெரியுமா?’ என்று சும்மாவா சொல்கிறார்கள்?

‘அரசு வேலை கிடைத்தால் போதும்… வாழ்க்கையே செட்டிலாகிவிடும்!’- இந்த வாக்கியத்தைக் கேட்டிருக்காத தமிழ் இளைஞர்களே இருக்க முடியாது. அதெல்லாம் இப்படி ஓபி அடித்துவிட்டு சுகமாகச் சம்பளம் வாங்கிச் செல்வதற்காகத்தானா?

இது நிஜம்தானா?

முதலில் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நிரந்தரமான பணி, நல்ல சம்பளம், பென்ஷன், பாதுகாப்பான எதிர்காலம்! இதெல்லாம் சேர்ந்துதான் அரசு வேலைகள் மீது மக்களுக்கு ஒரு பெரும் ஈர்ப்பை உருவாக்குகிறது. ஆனால், ‘உழைக்கத் தயங்குபவர்கள் அரசு வேலைக்குப் போகிறார்கள்’ என்ற பொதுப் புரிதல் எங்கிருந்து உருவாகிறது?

உற்று கவனித்துப் பாருங்கள், அப்போதுதான் நடப்பதை உணரமுடியும். நம்மைப்போலவே நகைக்கடன் வாங்க வந்து நம்மோடு காத்துக் கிடந்தவர்கள், பத்துக்கும் மேற்பட்டவர்கள். ஒவ்வொருவரின் நகையும் வாங்கப்பட்டு, எடை, தரம் சோதிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 10 பக்க ஆவணத்தைத் தயார் செய்து, கையொப்பம் பெறப்பட்டு, ஒவ்வொரு நடைமுறையாக செய்துகொண்டு வர அவ்வளவு நேரமாகத்தான் செய்கிறது. ஓர் உதவி மேலாளர், ஒரு கேஷியர், ஒரு நகை ஆய்வாளர், ஓர் உதவியாளர் என நான்கு பேர் டீக்குடிக்கக்கூட நேரமில்லாது பணியாற்றிக்கொண்டே இருந்தார்கள். நகை ஆய்வாளரின் மேஜையில் வைக்கப்பட்ட டீயை அவர் கவனிக்காமல் மறந்து போய் அது ஆறிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. நாம், காத்திருப்போர் இருக்கையில் உட்கார்ந்து இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள், ரீல்ஸ் பார்க்க வேண்டுமானால், நிச்சயமாய் வீட்டுக்குப் போய் நேரமிருந்தால்தான் பார்க்க முடியும். 

கடினமான மற்றும் தீவிரமான வேலை மட்டுமல்ல, கூடுதலாக பொறுப்பு மிக்க வேலையும் கூட! நகையையும், பணத்தையும் கையாளுகிற பணி, தவறு ஏதும் நடந்தால் அத்தனைக்கும் அவர்களே பொறுப்பாவார்கள்.

குறைவான வேலை, நிறைய விடுமுறை என்று வங்கி வேலைகள் மட்டுமல்ல, ஆசிரியர் பணிகளும் குறைத்துதான் மதிப்பிடப்படுகின்றன. அரசு ஆசிரியர்களுக்கென்ன? தினமும் 2 வகுப்புகளை நடத்திவிட்டு, ஆசிரியர்கள் அறையில் ஓய்வெடுக்க வேண்டியதுதான் என்று நாம் நினைக்கிறோம். ஓர் ஆசிரியரிடம் பேசியபோது அவர் பட்டியலிட்டவை இவை:

Govt Teachers in left teaching and right preparing notes

முதலில் கற்பிப்பு: பாடத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமைப்படுத்தி தயார் செய்தல், பாடத்திட்டப்படி வகுப்புகள் நடத்துதல், புரிதல் திறன், முதிர்ச்சி நிலையில் வேறுபட்ட தன்மை கொண்ட மாணவர்களை ஒரே வகுப்பில் கையாளுதல், அவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் அளித்தல், பயிற்சி வினாக்கள் கொடுத்தல், திருத்துதல்!

அடுத்து கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்: மாணவர்களிடம் நடத்தைச் சிக்கல்கள் இருந்தால் ஆலோசனை வழங்குதல், பள்ளிக்கு வராத மாணவர்களைப் பற்றி விசாரித்தல், பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ளுதல்! இவற்றில் இப்போது அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது.

நிர்வாகச் செயல்கள்: வருகைப் பதிவேடு பராமரிப்பு, மாணவர்களின் வருகை, தாமதம், விடுப்பு காரணங்களை கவனித்தல், தலைமையாசிரியரிடம் தினசரி அறிவுறுத்தல்கள் பெறுதல், பாடப்பதிவேடு (Lesson Plan) பராமரிப்பு, மதிப்பீட்டு பதிவுகள் (Marks Register) பராமரிப்பு, ஆன்லைன் போர்ட்டல்களை (EMIS, TN Schools App போன்றவை) அப்டேட் செய்தல், காலாண்டு / அரையாண்டு / ஆண்டுத் தேர்வுகள் நடத்துதல், அதற்கான வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்துதல், முடிவுகளைப் பதிவேற்றம் செய்தல், பகுப்பாய்வு செய்தல், மதிய உணவு, காலை உணவு, புத்தகம், சீருடை, லேப்டாப், சைக்கிள் முதலான அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து நடைமுறைப் படுத்துதல்!

இவ்வளவு வேலைகள் இருக்கின்றன. தனியாரில் கூட நமது கடின உழைப்புக்கு ஒரு கவனமும், பாராட்டும் கிடைக்கும். ஆனால், இங்கே அதுவும் சந்தேகம்தான்.

இரவு பகல் பாராமல் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், பேரிடர் காலங்களில் குடும்பத்தைக் கூட பார்க்காமல் களத்தில் நிற்கும் வருவாய்த் துறை அதிகாரிகள், தேர்தல், கணக்கெடுப்பு, பேரிடர் மேலாண்மை என எப்போது அழைத்தாலும் வரிசையில் நிற்கும் ஆசிரியர்கள், காவல்துறையினர் என பொறுப்பும், உழைப்பும் ஒரு சேர இயங்குவதுதான் அரசுப்பணி. ஓர் அரசுப்பேருந்து ஓட்டுநரோ, நடத்துனரோ பணி நேரத்தில் ஓய்வாக அமர்ந்துவிட முடியுமா என்ன?!

ஒரு சில துறைகளில், ஒரு சில மனிதர்கள் அப்படி இருக்கக்கூடும்தான், ஆனால், பிரச்சினை அரசு வேலைக்குள் இல்லை, அதைச் செய்யும் மனிதனுக்குள்தான் இருக்கிறது.