Parliament Building in Delhi Ministry of Parliamentary Affairs
அறிவோம்

லோக் சபா, ராஜ்ய சபா- என்ன வித்தியாசம்? #KnowlegeCorner

நாமே நமது எம்பிக்களைத் தேர்ந்தெடுத்த பின்னும், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஏன் இன்னொரு முறை சில எம்பிக்களைத் தேர்ந்தெடுத்து ராஜ்யசபாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள்?

ஆதி தாமிரா

இந்திய நாடாளுமன்றம், லோக் சபா, ராஜ்யசபா எனும் இரு அவைகளாக இணைந்து செயல்படுகின்றன என்பதை நாமறிவோம். லோக் சபாவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில், நமது தொகுதியின் சார்பாக ஓர் உறுப்பினரை மக்களாகிய நாம் நேரடியாக வாக்குச் செலுத்தி, தேர்ந்தெடுத்து அனுப்பிவைக்கிறோம். அதே நேரம், நமது மாநில சட்டமன்றத்துக்காக நாம் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சில பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைக்கிறார்கள். அவர்கள்தான் ராஜ்ய சபா உறுப்பினர்கள். சரிதான்! ஆனால், எதற்காக இந்த இரட்டை ஏற்பாடு?

நாமே நமது எம்பிக்களைத் தேர்ந்தெடுத்த பின்னும், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஏன் இன்னொரு முறை சில எம்பிக்களைத் தேர்ந்தெடுத்து ராஜ்யசபாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள்?

நமது இணையவழி பணப்பரிவர்த்தனைக்காக நாம் ’டூ ஸ்டெப் வெரிபிகேஷனை’ ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம், இல்லையா? இணையவழியில் பணத்தை அனுப்பிட பாஸ்வேர்ட் மட்டுமே போதாது, ஓடிபியும் நமக்குத் தேவைப்படுகிறது. அது ஏன்? பெரும்பாலான சமயங்களில் நமது பணம் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யப்பட அது மிகவும் சரியான வழியாக இருக்கிறது என்று சொல்வீர்கள் இல்லையா?

இந்த ’இரு அவைகள்’ அமைப்பும், ஜனநாயகத்தைக் காப்பதற்கான அப்படியொரு டூ ஸ்டெப் வெரிபிகேஷனைப் போன்றதுதான்.

நாம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நமது மாநிலத்திலிருந்து 39 எம்பிக்களையும், திமுக கூட்டணி சார்பாகவே அனுப்பிவைத்து விட்டோம். அப்படியானால், நமது பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவின் குரல் எப்படி ஒலிக்கும்? அவர்களை நம்பி வாக்குச் செலுத்திய மக்களின் குரலுக்கு நாடாளுமன்றத்தில் இடமேது? அதற்காகத்தான் இந்த ராஜ்யசபா ஏற்பாடு. தற்போது நாடாளுமன்றத்தில் பிஜேபியின் ஆளுமை பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை எதிர்த்துப் போராட, அத்தனை எம்பிக்களையுமே நாம் திமுக சார்பாகவே அனுப்பிவைத்துவிட்டாலும், நமக்கு ஜனநாயகத்தைப் பற்றிய புரிதல் அதிகம். ஒன்றியத்தில் அவர்களின் முழுமையான பங்கு நமக்கு அவசியப்படுகிறது, அதே சமயம், திமுகவுக்கு மாநிலத்தில் அந்த அளவுக்கான வெற்றியை நாம் தரவில்லை. மாறாக, அவர்களை எதிர்கொண்டு விமர்சித்துக் கண்காணித்திட 75 இடங்களை அதிமுக கூட்டணிக்குக் கொடுத்து அதிமுகவை பிரதான எதிர்க்கட்சியாக அமர வைத்திருக்கிறோம். அந்த 75 தொகுதிகளில் உள்ள மக்களின் குரல் நாடாளுமன்றத்திலும் இடம்பெற வேண்டுமல்லவா? அதனால்தான் ராஜ்யசபா.

View of Lok_Sabha chamber in_the New Parliament building

சுமார் 34 எம்.எம்.ஏக்கள் சேர்ந்து ஒரு எம்பியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், அதிமுக சார்பாகவும் குறைந்தபட்சம் 2 எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வார்கள்.

அப்படியானால் எந்த அவை நம்மை ஆள்கிறது? எம்.எல்.ஏக்களே தன்வசமில்லாத கமல்ஹாசன் எப்படி எம்பி ஆனார்? எந்தக் கட்சியிலும் இல்லாத இளையராஜா எப்படி எம்பி ஆனார்? பார்க்கலாம்!

லோக் சபா என்றும், கீழவை என்றும் சொல்லப்படுகிற மக்களவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களால் செயல்படுகிறது. ராஜ்யசபா என்றும், மேலவை என்றும் சொல்லப்படுகிற மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களால் செயல்படுகிறது.

இந்த இரண்டு அவைகளும் இணைந்துதான் நம்மை ஆள்கின்றன.

நாடாளுமன்றத்தின் மக்களவைதான் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் அவை. நாடு முழுவதும் நடக்கும் பொதுத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இதில் அமர்கிறார்கள். அதனால்தான், லோக்சபாவை மக்களின் குரல் என்று வர்ணிக்கிறோம். தமிழ்நாட்டிலிருந்து இந்த அவைக்குச் செல்வோர் 39 பேர்! இதன் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 543. இவர்கள்தான் யார் இந்த நாட்டை ஆள வேண்டும், யார் பிரதமர் ஆக இருக்க வேண்டும் என்பதை நேரடியாகத் தீர்மானிக்கிறார்கள். ஒரு அரசுக்கு உண்மையான பலம் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கணக்கிடும் இடமும் லோக்சபாதான். நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா தீர்மானம் எல்லாமே இங்கேதான் நடக்கிறது. லோக்சபாவில் பெரும்பான்மை இல்லாமல் எந்த அரசும் நிலைக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்குள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆக இது இருந்தது. ஆங்கிலோ-இந்திய சமூக மக்கள் எனும் சிறுபான்மையின மக்கள், தம் சார்பாக எம்பிக்களை அனுப்பும் அளவு ஒரே குறிப்பிட்ட இடத்தில் அல்லாது இந்தியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தமையால், அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக குடியரசுத் தலைவரே அந்த 2 இருக்கைகளுக்கான எம்பிக்களை நேரடியாக நியமனம் செய்துவந்தார். பின்னர், அவ்வின மக்கள் கால மாற்றத்தால் மிகவும் குறைந்து, தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதால் 2020லிருந்து அவ்விடங்கள் நீக்கப்பட்டுவிட்டன.  

போலவே, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. இதில் 233 உறுப்பினர்கள்தான், பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 12 இடங்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றன. ஏனிந்த 12 இடங்கள்? மக்களவையில் ஆங்கிலோ-இந்திய மக்களுக்கான 2 ஒதுக்கீட்டு இடங்கள் இருந்ததைப் போலவே கல்வி, கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்புச் செய்தவர்களை அவர்களின் துறை சார்பாக பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகவே இந்த ஏற்பாடு.

இப்போது புரிந்திருக்கும், இளையராஜா எப்படி எம்பி ஆனார் என்று! இசைத்துறையில் தன் இணையற்ற பங்களிப்புக்காக அவர் குடியரசுத் தலைவரால் எம்பி ஆக்கப்பட்டார். இவர் போலவே, தமிழ்நாட்டிலிருந்து முன்னர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.சாமிநாதன் போன்றோரும் நியமன எம்பிக்களாக இருந்திருக்கின்றனர். பொதுவாக, தமிழ்நாட்டிலிருந்து இவ்வகையில் நியமிக்கப்படுவோர் மிகவும் குறைவுதான். அப்படியானால், கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? அவர், கூட்டணிக்கட்சியான திமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் அவர் நியமன எம்பி அல்ல, மக்களின் பிரதிநிதி!

Honorable India's first prime minister addressing in Lok Sabha

ராஜ்யசபாவின் முக்கியத் தனிச்சிறப்பு என்னவென்றால், இது ஒருபோதும் கலைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவார்கள், அந்த இடத்துக்குப் புதியவர்கள் வருவார்கள். அதனால் இது நிரந்தர அவை என்று சொல்லப்படுகிறது. இதன் உறுப்பினர்களின் பணிக்காலம் 6 ஆண்டுகள். அரசியல் சூழ்நிலைகள் மாறினாலும், ஒரு நிலைத்தன்மையைத் தருவதுதான் இதன் பணி. மாறாக, மக்களவையின் பணிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே! 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவை கலைக்கப்பட்டு, புதிய அவை அமைக்கப்படுகிறது.

மக்களவை எம்பிக்கள், மாநிலங்களவை எம்பிக்கள், நியமன எம்பிக்கள் இவர்களுக்குள் செயல்பாடுகளால் வித்தியாசம் இருக்கிறதா? உரிமைகளில் வித்தியாசம் இருக்கிறதா?

அதற்கு நாம் இரு அவையின் செயல்பாடுகளையும், முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

சட்டம் செய்வதில், இந்த இரண்டு அவைகளும் இணைந்து வேலை செய்கின்றன. ஒரு மசோதா என்பது ஒரு தனி எம்பியோ, அல்லது ஆளும் அரசு சார்பில் ஒரு அமைச்சரோ கொண்டு வரும் புதிய சட்டத்தின் முன்வரைவாகும். அது சட்டமாக மாற வேண்டும் என்றால், பொதுவாக இரு அவைகளிலும் அது நிறைவேற வேண்டும். முதலில், ஏதாவது ஒரு அவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்படும். அது அறிமுகம் (First Reading) என்படுகிறது. அப்போது அதன் மீது எந்த விவாதமும் நடக்காது. அது என்ன மசோதா? அப்படியொரு மசோதாவுக்கான தேவை என்ன? என்பது போன்ற அடிப்படையான விசயங்கள் சொல்லப்படுகிறது. பின்னர் அது இரண்டாவது அமர்வுக்குக் கொண்டுவரப்படும். அப்போது அதன் மீது விவாதம் (Second Reading) நடக்கும். இந்நிலையில்தான் அதன் சாதக பாதகங்கள் அலசப்பட்டு, மாற்றங்கள், திருத்தங்கள் செய்யப்படும். அதன் பின் இறுதிக்கட்டம், மூன்றாம் அமர்வு. மாற்றங்கள், திருத்தங்கள் ஏற்கப்பட்ட மசோதாவின் இறுதி வடிவம் அவையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மசோதா நிறைவேற்றப்படும் அல்லது நிராகரிக்கப்படும்! அப்படி நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதன் பின் அந்த மசோதா இன்னொரு அவைக்கு அனுப்பப்பட்டு அங்கும் அதே படிநிலைகள் பின்பற்றப்படும்.

ஒருவேளை ஒரு அவை மசோதாவை ஏற்று, மறு அவை அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இணைக்குழு, நிலைக்குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த மசோதா மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும்! ஆனால், அதெல்லாம் தாண்டி இரண்டாவது அவையிலும், மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால், இறுதியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்பமிடும் அதே நாளில், அது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலுக்கு வந்துவிடும்!

இவை ஜிஎஸ்டி விதிகள், புதிய கல்விக்கொள்கை போன்ற புதிய சட்டங்கள் மேற்சொன்ன வழிமுறைகளின்படி அவையிலிருக்கும் உறுப்பினர்களின் எளிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று செயலாக்கம் பெறும். ஆனால், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விதிகளில் ஏதேனும் திருத்தமெனில், இது இன்னும் கடினமான வழிமுறையாக மாறும். மக்களின் அடிப்படை உரிமைகளை, அரசாங்க செயல்பாடுகளையே தாங்கி நிற்பது அரசியலமைப்பு. 2020ல் ஆங்கிலோ-இந்தியர்களுக்கான சிறப்பு எம்பிக்கள் உரிமை நீக்கப்படுவது அப்படியான ஒரு நிகழ்வு. அதுபோன்ற தருணங்களில், அவையில் 50% உறுப்பினர்களின் வருகை உறுதி செய்யப்பட வேண்டும். அதில் மூன்றில், இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட வேண்டும் என்பது போன்ற சிறப்பு விதிகள் அமலுக்கு வரும்.

New Rajya Sabha_chamber in the New Parliament building

இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் சமமானவர்கள். நியமன எம்பிக்களுக்கு மட்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. அதைத் தவிர, மற்ற எம்பிக்களைப் போலவே அனைத்து உரிமைகளும் இளையராஜாவுக்கும் உண்டு. அனைத்து விதமான சட்ட மசோதாக்களிலும் அவர் ஆதரிக்கலாம், எதிர்க்கலாம், விவாதிக்கலாம், வாக்களிக்கலாம்! புதிய மசோதாக்களையும் கொண்டுவரலாம்!

மொத்தத்தில், மக்களவையில் ஒரு வேளை ஒரே கட்சியே ஆளுமை செலுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், பலதரப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும் மாநிலங்களவை அதைக் காக்கும். அறிவார்ந்த அவை எனப்படும் மாநிலங்களை, ஒருவேளை மக்களுக்கு அந்நியமான சட்டங்களைக் கொண்டு வருமேயானால், அதை மக்களவைக் காக்கும்.

இப்படியாக, இந்த இரு அவைகளும் நமது ஜனநாயகத்தைப் பேணிக் காக்கின்றன.