கடினமான காலச்சூழலில் நம்பிக்கையிழந்துவிட்டால், உணர்வற்ற, ஈடுபாடற்ற ஒரு மனநிலைக்கு மனிதர்கள் தள்ளப்படுவார்கள். அது அழிவுக்கே வழிவகுக்கும். எத்தனை கடினமான சூழலாக இருந்தாலும் நம்பிக்கையோடு இறுதி வரை போராடுவதே சரியான நிலைப்பாடாக இருக்கும். இப்படியான நிலையில், மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டுவதே என் பணி என கருதுகிறேன் - ஜேன் மோரிஸ் குட்டால் (Jane Morris Goodall)
தனது இறுதிப் பேட்டியில், இப்படி ஒரு செய்தியை நமக்குத் தந்த ஜேன் குட்டால் கடந்த அக்டோபர் 1ல் மறைந்திருக்கிறார்.
யாரிந்த ஜேன் குட்டால்?
இங்கிலாந்தில் பிறந்த ஜேன் குட்டால், சிறு வயதிலேயே இயற்கையின் மீதும், விலங்குகளின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதனால் தனது 23வது வயதிலேயே, அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த கென்யாவுக்கு இடம் பெயர்ந்த புகழ்பெற்ற புதைபடிவ ஆய்வாளரான லூயிஸ் லீக்கி என்பவருக்கு உதவியாளராக பணியாற்றத் தொடங்குகிறார். தொடர்ந்து ஒரு மானுடவியல் (Anthropologist) ஆய்வாளராக உருவெடுக்கிறார்.
தான்சானியாவிலுள்ள கோம்பே நேஷனல் பார்க்கில் உள்ள சிம்பன்சிக்களை ஆராயத் தொடங்குகிறார். சிம்பன்சிக்களின் சமூக, குடும்ப அமைப்புகளையும், அவற்றின் குணங்களையும், அறிவையும் தீவிரமாக ஆய்கிறார். அவரது ஆய்வுகள் மூலம் சிம்பன்சிக்கள் கருவிகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் செய்கின்றன என்பதையும், அவை மனிதர்களைப் போலவே உணர்ச்சிகள், பிணைப்புகள் மற்றும் சமூகக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன என்பதையும் கண்டறிந்தார். சிம்பன்சிகள் வேட்டையாடுதல், இறைச்சியை உண்ணுதல் மற்றும் குழுக்களுக்கிடையே சண்டையிடுதல் போன்ற நடத்தைகளைக் கொண்டுள்ளன என்பதையும் அவர் ஆவணப்படுத்தினார். மகிழ்ச்சி, சோகம், உற்சாகம், முத்தம், அணைப்பு, குறும்புத்தனம் போன்ற உணர்வுகள் மனிதர்களுக்கு மட்டுமேயானதல்ல எனும் அவரது கண்டுபிடிப்புகள் மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு பற்றிய அன்றைய அறிவியல் கருத்துக்களை மாற்றியமைத்தன. இந்தத் துறையின் முன்னோடியாக சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வை மேற்கொண்டு, மானுடவியலுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார் குட்டால்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற குட்டால், 1977ல் ’ஜேன் குட்டால் இன்ஸ்டிடியூட்’ எனும் கல்வி நிறுவனத்தை தொடங்குகிறார். பின்னர், இளைஞர்களுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமான திட்டமான ரூட்ஸ் & ஷூட்ஸ் (Roots & Shoots)-ஐ நிறுவினார். காடுகளை அழிக்கும் மனித இயல்புக்கு மாறாக, சிம்பன்சிக்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க, தான்சானியாவின் காடுகளை மீட்டுருவாக்கம் (Reforesting) செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான முன்னெடுப்புகளைச் செய்தார்.
துறை சார்ந்த ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியுள்ள குட்டால், மானுடவியல் ஆய்வு மற்றும் சேவைக்காக அமெரிக்காவின் AMES விருது, கியோட்டோ பரிசு, எடின்பர்க் பதக்கம், நேஷனல் ஜியோகிராபிக்கின் ஹப்பர்ட் விருது, இங்கிலாந்தின் ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர் மரியாதை, ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்டீபன் ஹாக்கிங் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.