Audience cheering in music-concert Drazen Zigic - Freepik
அறிவோம்

கும்பல் மனநிலை என்ன செய்யும்?

கும்பல் மனநிலை (Crowd Mentality) என்பது, உளவியலில் பொதுவாக ஆபத்தான விசயமாகப் பார்க்கப்படுகிறது.

ஆதி தாமிரா

கும்பல் மனநிலை (Crowd Mentality) என்பது, உளவியலில் பொதுவாக ஆபத்தான விசயமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பெரும் குழு அல்லது கும்பலில் ஒரு பகுதியாக இருக்கும் தனிநபர்கள், தாங்கள் தனித்து இருக்கும்போது சிந்திக்காத அல்லது செய்யத் துணியாத செயல்களை, செய்யத் துணிவதைக் குறிக்கிறது.

கரூரில் நடந்தது இப்படியான ஒன்றல்ல. ஆயின், அங்கு நடந்தது என்ன?

பொதுவாக கும்பலில் உள்ள ஒருவரின் அல்லது சிலரின் உணர்ச்சிகள் (கோபம், பயம், உற்சாகம்) வேகமாகப் பரவி, மற்றவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இது ஒரு சமூகத் தொற்று போலச் செயல்படுகிறது. இன்று நம்மால் ‘வைப்’ (Vibe) என்று கொண்டாடப்படும் விசயம் இதுதான். அப்படி ஒரு வைபை நம்மால் தனித்துப் பெற முடியாது. அதை அனுபவிப்பதற்காகத்தான், கூட்டம் கூடும் இடங்களுக்கு நாம் செல்கிறோம். தனியாக மொபைலில் பார்க்கப்படும் ஒரு ஹீரோவின் பில்டப் காட்சிகளால் நமக்குப் பெரிதாக எந்த உற்சாகத்தையும் ஊட்டிவிடமுடியாது. ஆனால், அதே காட்சிகள் தியேட்டரில் நூற்றுக்கணக்கான நபர்களோடு பார்க்கும் போது அது நம்மைப் பாதிக்கிறது. அதுவும் ஒத்த ரசனை கொண்ட ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகராகவும், அது முதல் நாள் முதல் காட்சியாகவும் இருந்துவிட்டால் உற்சாகம் பன்மடங்காகிவிடுகிறது. அது ஒரு போதை! அந்தப் போதையை அனுபவிப்பதற்காகத்தான் ஒவ்வொரு ரசிகனும், டிக்கெட் விலை போல பன்மடங்கு வைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று அப்படியான காட்சிகளுக்குச் செல்கிறார்கள்.

People Gathered in Religious Place

பக்தியும் கூட இந்த வைபுக்கு விதிவிலக்கானதல்ல. தனியே கூட்டமில்லாத நாட்களில் கோவில்களுக்குச் சென்றால் கடவுளாலும் கூட நமக்கு அந்த வைபைத் தரமுடியாது. விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான சக பக்தர்களோடு போய், ‘அரோகரா’ என்றோ, ’சுவாமியே’ என்றோ கதறினால்தான் நமக்கு அந்த வைப் உணர்வு கிடைக்கும்.  அந்தப் போதையை உணர்வோம். அப்போதுதான் அந்தக் கடவுளின் அருள் கிடைத்துவிட்டதாகவே நம்பி நமக்கு உணர்வுப் பெருக்கெடுக்கும். இதேதான் கிரிக்கெட் அரங்குகளிலும் நடக்கிறது. டிவியில் அதே நிகழ்வைத் தனியே பார்ப்பது நமக்குச் சுகப்படுவதில்லை. குறைந்தது கூட ஐந்தாறு பேராவது நண்பர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் அரங்குகளில் கிரிக்கெட்டைக் காணத் தலைப்படுகிறோம்.

அப்படியானால், இதெல்லாம் அவசியமற்றதா? எல்லாமே அளவோடிருக்கும் வரைதான். எந்த விசயத்திலுமே எல்லை மீறுவது, அதை ஒரு போதையாக அணுகுவது நிச்சயம் அவசியமற்றதுதான். இதில்தான் கூடுதலாக கவனிக்க வேண்டிய விசயங்களும் இருக்கின்றன. ஒரே ஒரு தீப்பொறிக்காகக் காத்திருக்கும் பட்டாசைப் போல இந்தக் கும்பலில், ஒரு சிறிய பதற்றம் (Panic) தொற்றிக்கொண்டால் அதன் பின் நடக்கப்போகும் ஆபத்துகளை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

எள்ளைப் போட்டால் அது கீழே விழ வாய்ப்பில்லாத அளவுக்கான கூட்ட நெரிசலில் நீங்கள் நின்றுகொண்டிருக்க நேர்ந்துவிட்டால், ஆபத்தின் மீதுதான் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். அந்தக் கூட்டத்தில் ஒரு ஆள், மூச்சுத் திணறி மயக்கம் போட்டால் கூட சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் அது ஆபத்துதான். அவன் தன்னியல்பில் மயங்கினானா, அல்லது யாராலோ தாக்கப்பட்டானா, அல்லது அவனால் வேறு ஆபத்துகள் நமக்கு ஏற்படுமா என்று சுற்றி ஒரு மீட்டருக்குள் இருக்கும் அத்தனை பேரும் ஒரு சந்தேகத்துக்குள்ளானால் போதும் அத்தனை பேரும் சகல திசைகளிலும் நெருக்கியடித்துக் கொண்டு வெளியேறப் பார்ப்பார்கள். அவர்களைச் சுற்றிலும் 10 மீட்டருக்குள் இருக்கும் அத்தனை பேருக்கும் அங்கு நடந்தது என்னவென்று தெரியவருவதற்குள், கூச்சல் குழப்பம்தான் அதிகம் நிகழும். விடையில்லாத கேள்விகள் பெரும் பயத்தை உருவாக்கும். அதன் பின் அங்கு நிகழ்வதுதான் ஆபத்தான நெரிசல் (மிதிபடுதல்: Stampede). இதிலிருந்து தப்புவது மிகக்கடினம்.

இதைப் போன்ற சூழல்களை முற்றிலுமாகத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்.

கிரிக்கெட் வீரனோ, நடிகனோ, கடவுளோ, எங்கும் போய்விடப்போவதில்லை. நம் வீட்டுக்குள், நம் டிவியில் இன்னும் தெளிவாகத் தெரிவார்கள். ஒரு கிரிக்கெட் வீரனைப் பார்ப்பதை விட கிரிக்கெட்டை ரசிப்பதுதான் முதன்மையாக இருக்க வேண்டும். நடிகனைப் பார்ப்பதை விட அவன் பேசவிருக்கும் கருத்துகளைக் கேட்பதுதான் முக்கியமானதாக இருக்கவேண்டும். கடவுளை நேரில் காண்பதை விட உண்மையான பக்தியும், சக மனிதர்கள் மீதான அன்பும்தான் பிரதானமானதாக இருக்க வேண்டும்!

கும்பல் மனநிலை என்பது ஒரு மனிதனை, பகுத்தறிவைக் கைவிட்டு, தான் இருக்கும் கூட்டத்தின் உணர்வுகளின் பிரதிபலிப்பாக மாற்றுகிறது. பகுத்தறிவைக் கைவிடச் செய்யும் எதுவுமே ஆபத்தானதுதான்.