10 Rupees  Insta
அறிவோம்

பத்து ரூபாய் என்ன செய்யும் தெரியுமா?

பணத்தின் மதிப்பு ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.

ஆதி தாமிரா

சமீபத்தில், ஒரு அரசுப் பணியாளர் பொது அங்காடிக்கு சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் நிர்வாகி, ஏற்கனவே எனக்குத் தெரிந்த நண்பர்தான். அவரோடு சக பணியாளர்கள் இரண்டு பேரும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் எடுக்கப்படும் பொருட்களுக்குப் பில்லைப் போட்டு அளிப்பவர்கள். ஆனால், மூவருமே ஒரே துறையில் ஒரே சமமான பணியில் இருப்பவர்கள். சொல்லப்போனால், நிர்வாகியை விட இந்த இருவரில் ஒருவர், கூடுதல் பதவியில் இருப்பவர்தான். இருப்பினும் விருப்பத் தேர்வு முறையில் இப்பணிகள் தரப்படுகின்றன.

பணியாளர்களின் அலட்சியம்

இதற்கு முன்பு போயிருந்த போது, அவர்கள் இருவரும் இருந்த இடத்தில் இருந்துகொண்டு பில் போட்டுக்கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். டிவி, பிரிட்ஜ் போன்ற பெரிய பொருட்களை வாடிக்கையாளர்கள் கேட்டால் எழுந்து சென்று விளக்க வேண்டிய நிலை வரும். அப்படி வந்தால், அவர்கள் பெரும்பாலும் நிர்வாகியைக் கண்ணைக் காண்பித்துவிட்டு இருந்துகொள்வார்கள். கேட்டால் அது விபரங்கள் அவருக்குத்தான் தெரியும் என்பார்கள்.

நிர்வாகி நண்பரைக் கேட்டால், ’என்ன செய்வது? நிர்வாக வேலைகளோடு இதையும் நானே செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களை என்ன, ‘இதைக் கற்றுக்கொள்ளுமாறு’ கண்டிக்க முடியுமா அல்லது நிர்ப்பந்திக்க முடியுமா? ஒரே துறை, சம பதவிகள் என்பதால் முடியாது, கூடுதலாக நண்பர்கள் வேறு’ என்பார்.

பத்து ரூபாயின் அதிசயம்

இம்முறை, அந்தப் பணியாளர்கள் இருவரும், டிவி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வாங்க யாரும் வந்தால், சட்டென எழுந்து போய் மிக ஆர்வமாக அவை குறித்து விளக்கி, பொருட்களை விற்க முயன்று கொண்டிருந்தார்கள். நிர்வாகியோ அவரது வேலையை நிம்மதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆச்சரியமாகி, ‘யாராவது மேலதிகாரியிடம் புகாரளித்துவிட்டீர்களா?’ என்று அவரைக் கேட்டபோது, ’அதெல்லாமில்லை, பெரியவற்றில் ஒரு பொருள் விற்பனை செய்தால் அவர்களுக்கு பத்து ரூபாய் தருகிறேன் என்றேன், அவ்வளவுதான். இப்போது எல்லாம் சரியாக நடக்கிறது’

Power of Ten Rupees
‘பத்து ரூபாயா? இவ்வளவு குறைவாகவா? அதோடு, உங்கள் துறையோ சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ இந்தத் கமிஷன் தொகையைத் தர வாய்ப்பில்லையே…’ என்று இழுத்த போது, ‘சரிதான், அதை நான் என் கையிலிருந்து தருகிறேன்’ என்றார்.

‘என்ன? அதெப்படி முடியும்?’

‘பெரிய பொருட்கள், ஒரு நாளைக்கு இரண்டோ, மூன்றோதான் விற்கும். மாதத்துக்கு 50 பொருட்கள் விற்றாலே பெரிய விசயம்தான். எனக்கு 500 ரூபாய்தான் செலவு. ஆனால், நான் என் வேலையை நிதானமாக, நிம்மதியாகச் செய்ய முடிகிறது’

பணத்தின் அருமை!

‘அதெப்படிங்க பத்து ரூபாய்க்குச் செய்வார்கள்? அவர்களும், உங்களைப் போலவே அதே பல்லாயிரங்களில் சம்பளம் வாங்குபவர்கள்தானே… ஆயிரம், இரண்டாயிரம் என்றால் பரவாயில்லை, மாதத்துக்கு தலா 250 ரூபாய்க்காக இதைச் செய்வார்களா என்ன?’

‘தனியாரில் வேலை பார்த்தாலும், நீங்களும் என்னைப் போல சம்பளம் வாங்குவீர்கள்தானே?’

‘ஏறத்தாழ…’

‘வீடு கட்டிவிட்டீர்களா?’

‘இல்லை’

‘நானும் இல்லை, ஆனால் அவர்கள் இருவரும் ஊரில் சொந்தமாக வீடு கட்டிவிட்டார்கள். அவர்களுக்குப் பணத்தின் அருமை தெரிந்திருக்கிறது, நமக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான் வித்தியாசம்!’ என்றார்.

பத்து ரூபாய்க்கு இவ்வளவு மகிமையா என்று வியப்பாகத்தான் இருந்தது. நீங்கள் பத்து ரூபாய்க்கு இவ்வளவு மதிப்பளிக்கக்கூடியவரா என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.