மது, மாதுவைப் போலவே சூது என்பதும் மனிதனின் தொடக்க காலத்திலிருந்தே உடன்வருகிற, மனிதனை எளிதில் அடிமைப் படுத்துகிற மிக முக்கியமான அடிமைப் பழக்கங்களுள் ஒன்றாகும். ’கண்கண்ட தெய்வம்’ எனும் சினிமால் ஆளுமை மிக்க நடிகர் எஸ்வி.ரங்காராவ் சொல்வதாக ஒரு வசனம் வரும்,
’மதுவையும், மாதுவையும் விடு. அவற்றில் விழுந்து உழன்றவன் ஒரு நாள் தெளிவு பெறுவதற்கும், திருந்துவதற்கும், மீண்டு வருவதற்கும் வழியிருக்கிறது. ஆனால் இந்தச் சூது இருக்கிறதே, அதில் விழுந்தவனுக்கு மீள வழியேது?’
அத்தனை பயங்கரமானது சூதாட்டம். ஆனால், அந்தச் சூதாட்டமே இப்போது நவீன வடிவில் இணையவழி சூதாட்டமாகப் பரிணமித்திருக்கிறது. இணையவழி அல்லது ஆன்லைன் சூதாட்டம் (Online gambling) என்பது இணையத்தின் வழியாக பணத்தை வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளைக் குறிக்கிறது. இந்த விளையாட்டுகள் பல வடிவங்களில் வருகின்றன. எடுத்துக்காட்டாக, ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கேசினோ, ஆன்லைன் லாட்டரி போன்றவை இதில் அடங்கும். ஆன்லைன் சூதாட்டம் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது.
உலகளாவிய அளவில் தற்போதைய ஆன்லைன் சூதாட்டச் சந்தையின் மதிப்பு சுமார் 8.4 லட்சம் கோடிகள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்வீடன், ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பரவலாக ஆன்லைன் சூதாட்டம் விளையாடப்படுகிறது. 2024ல் இந்திய ஆன்லைன் சூதாட்டச் சந்தையின் மதிப்பு சுமார் 25000 கோடி ரூபாய். இதுவே இன்னும் 5 ஆண்டுகளில் அதாவது 2030ல் சுமார் 50000 கோடிகளாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அரசு மிக சமீபத்தில்தான் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாகத் தடை செய்வது குறித்து ஆலோசனை செய்துவருகிறது. விரைவிலேயே தடை வரலாம்.
ஆன்லைன் சூதாட்டத்தின் அபாயங்கள் மிகக் கடுமையானவை. அதைக் குறித்துப் பார்க்கலாம்.
1. பண இழப்பு: ஆன்லைன் சூதாட்டத்தின் மிக முக்கிய ஆபத்து பண இழப்புதான். இது ஒரு விளையாட்டாகத் தோன்றினாலும், இதில் வெல்வது முற்றிலும் அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை மிக எளிதாக இழக்க நேரிடும். ரம்மி போன்ற சில விளையாட்டுகள் திறனையும் அடிப்படையாகக் கொண்டது என்று அவற்றுக்கு விலக்குக் கேட்டு வாதாடுகின்றன சூதாட்ட நிறுவனங்கள். ஆனால், அது அப்பட்டமான பொய்!
2. போதைக்கு அடிமையாதல்: ஆன்லைன் சூதாட்டம் மதுவை விடவும் மிக மோசமான அடிமையாக்கும் தன்மை கொண்டது. சிலர் இதை விளையாட்டாக தொடங்கி, பின்னர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த அடிமைத்தனம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கலாம். பெரும் பணத்தை இழக்கவைத்து, தகுதிக்கு மீறிய கடனாளியாக்கிவிடும். இறுதியில் உயிரையே மாய்த்துக் கொள்ளும் செய்திகளையும் அடிக்கடி நாம் செய்திகளில் காண்கிறோம்.
3. சட்டவிரோதம்: ஆன்லைனில் பல சூதாட்ட தளங்கள் சட்டவிரோதமாக இயங்குகின்றன. இவற்றில் விளையாடுவதால் உங்கள் மீது அரசு கைது நடவடிக்கைகளை எடுக்க நேரிடும். மேலும், இந்தத் தளங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களையும், வங்கி விவரங்களையும் திருடலாம். இது உங்கள் பணத்திற்கும் உங்கள் பாதுகாப்புக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாகும்.
4. உளவியல் பாதிப்புகள்: ஆன்லைன் சூதாட்டம் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும், சோர்வையும் ஏற்படுத்தும். சில சமயங்களில், இது கடுமையான மனநலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
5. சமூகப் பிரச்சினைகள்: இந்த விளையாட்டுகள் சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சமூக உறவு மற்றும் குடும்ப உறவுகளில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம். அத்துடன், வேலை அல்லது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய் மீள முடியாத மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும்.
இவற்றிலிருந்து மீள்வது எப்படி?
ஆன்லைன் சூதாட்டத்தின் அபாயங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. நீங்கள் இப்போது இருப்பது தொடக்க நிலையோ, சற்று பாதிக்கப்பட்ட நிலையோ, தீவிர பாதிப்பு நிலையோ… எதிலிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது முற்றிலுமாக ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து விலகி, விளையாட்டுக் கணக்குகளை உடனே முடக்குவதுதான்.
2. இதுவரை நீங்கள் அடைந்தது எப்பேர்ப்பட்ட இழப்பாக இருந்தாலும், மீண்டு வந்து அதை மீண்டும் சம்பாதித்துக்கொள்ள முடியும் என்பதை நம்புங்கள். சூதாட்டத்தில் விட்டதை மீண்டும் சூதாட்டத்தில் பிடிக்கவே முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. இதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. விதிவிலக்காக ஓரிரு தடவைகள் நீங்கள் பணத்தை வென்றிருந்தால், அவை உங்களைப் போன்ற எத்தனையோ பேரின் இழப்பிலும், வலியிலும், கண்ணீரிலும் கிடைத்த பணம் என்பதை உணருங்கள். உழைக்காமல் கிடைத்த பணம் அறத்துக்கு எதிரானது. உங்கள் நிம்மதியைக் கெடுக்கும்.
4. மது அடிமைத்தன மீட்சியைப் போலவே, இதுவும் மிகச் சிரமமானதுதான். மெல்ல மெல்ல, உங்கள் மனதை மாற்றி கலைகளிலும், சினிமாவிலும், வேலையிலும் ஈடுபடுத்துங்கள். அவசியப்பட்டால், மனநல ஆலோசனை பெறுங்கள்.
ஆல் தி பெஸ்ட்!