Separate Steering for kids  keralakaumudi
வைரல்

குழந்தைகளுக்கு தனி ஸ்டீயரிங்; கேரள பஸ்சில் புதுமை!

குழந்தைகள் பேருந்து ஓடும் போது, இந்த ஸ்டீயரிங்கை சுற்றிக் கொண்டு தாங்களும் பேருந்து ஓட்டுவதாக நினைத்துக் கொள்கின்றனர். அதோடு, இந்த பேருந்தில் உற்சாகமாகவும் பயணிக்கின்றனராம்.

எம். குமரேசன்

கேரள மாநிலத்தில் ஏராளமான தனியார் பஸ்கள் ஓடுகின்றன. இந்த பேருந்துகள் அதிவேகத்துக்கும் விபத்துகளுக்கும் பெயர் பெற்றவை. இவற்றில், பயணிக்கும் பயணிகள் ஒருவிதப் பதற்றத்துடன்தான் பயணிக்க வேண்டும். காரணம்.. சிங்கிள் ரோட்டில் இந்தப் பேருந்துகள் மின்னல் வேகத்தில் பயணிக்கும். தாறுமாறாகத் திரும்பும். இதனால், அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும் உண்டு. தனியார் பேருந்துகளின் வேகத்துக்குக் கடிவாளம் போட அரசு முயன்றாலும் பலன் அளிப்பதில்லை.

தற்போது ஒரு கேரள தனியார் பஸ் பற்றி நல்லவிதமாக மீடியாக்களில் செய்தி அடிபடுகிறது. இந்த பஸ்சின் பெயர் எல்சம்மா. இந்தப் பேருந்து சேர்தலாவில் இருந்து ஆலப்புழா வரை செல்கிறது. கடற்கரையை ஒட்டியுள்ள வளைவுகள் நிறைந்த சாலையில் இந்தப் பேருந்து பயணிக்கும். இந்தப் பேருந்தில் இரு ஸ்டீயரிங்குகள் உள்ளன. இதுதான், மீடியாக்களில் இந்தப் பேருந்தின் பெயர் அடிபடக் காரணமாக அமைந்துள்ளது. அதாவது வலதுபுறத்திலுள்ள ஸ்டீயரிங் டிரைவருக்கானது. இடது புறத்திலுள்ள டம்மி ஸ்டீயரிங் குழந்தைகளுக்கானது.

இந்தப் பேருந்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அதிகமாக பயணித்து வந்துள்ளனர். பேருந்துப் பயணத்தின் போது பல குழந்தைகள் வாந்தி எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். இதையடுத்து பேருந்து உரிமையாளரான டி.ஜே. டிசௌசாவிடம், நண்பர் ஒருவர், பேருந்தில் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும்படி பொம்மைகளை வைக்கக் கூறியுள்ளார். இதையடுத்து பலரிடமும் ஆலோசித்த பேருந்து உரிமையாளர் இடது புறத்தில் மற்றொரு டம்மி ஸ்டீயரிங்கை பொருத்தினார். இந்த ஸ்டீயரிங்குக்கும் பேருந்து இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், குழந்தைகள் பேருந்து ஓடும் போது, இந்த ஸ்டீயரிங்கை சுற்றிக் கொண்டு தாங்களும் பேருந்து ஓட்டுவதாக நினைத்துக் கொள்கின்றனர். அதோடு, இந்த பேருந்தில் உற்சாகமாகவும் பயணிக்கின்றனராம்.

குழந்தைகளின் கவனம் பஸ்சில் ஏறியதும் பொம்மை ஸ்டீயரிங் மீது சென்றுவிடுவதால், வாந்தி எடுப்பதை பற்றி அவர்கள் மறந்து விடுகின்றனர். இப்போது இந்தப் பேருந்தில் செல்லும் குழந்தைகள் வாந்தி எடுப்பது பெரும்பாலும் குறைந்துள்ளதாம். இந்தப் பேருந்தின் உரிமையளரான டிசௌசா அடிப்படையில் ஏசி மற்றும் வாசிங்மெஷின் மெக்கானிக் ஆவார். பின்னர், இந்த வேலையை விட்டுவிட்டு, பஸ் டிரைவரானார். தொடர்ந்து, கடுமையான உழைப்பினால், சொந்தமாக பஸ் வாங்கியுள்ளார். தற்போது, எல்சம்மா பஸ் கேரளா முழுவதும் பாப்புலராகி விட்டது. குழந்தைகள் பொம்மை ஸ்டீயரிங்கை சுற்றும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அடடே... இதுவும் நல்ல ஐடியாவாக உள்ளதே என்று நெட்டிசன்களும் பாரட்டி வருகின்றனர்.