பெண்கள் நுழைய முடியாத பகுதியில் அகஸ்திய முனி குடியிருக்கிறார். அதாவது, பொதிகை மலையின் உச்சியில் அகஸ்திய முனியின் சிலை உள்ளது. இதைக்காண ஆண்டு முழுவதும் மக்களுக்கு அனுமதி இல்லை. அதுவும், தமிழகப் பகுதியில் இருந்து அகஸ்தியர் கூடத்துக்குச் செல்ல அனுமதியில்லை. இது மிகவும் ஆபத்தான டிரெக்கிங் பகுதி என்பதால், தமிழக வனத்துறை முற்றிலும் தடை விதித்து விட்டது. தமிழகப் பகுதியில் இருந்து அனுமதியில்லை என்றாலும் கேரள வனத்துறையின் அனுமதி வாங்கி திருவனந்தபுரத்திலிருந்து நெய்யாற்றின்கரை வனச்சரகத்தில் போனக்காடு வழியாகச் மலை ஏற முடியும். ஆபத்தான செங்குத்தான பாறைகள் நிறைந்த இந்த ட்ரெக்கிங் பாதை 25 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. மலையில் 6,500 அடி உயரம் ஏறி இறங்க மூன்று நாள்கள் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை அகஸ்தியர் கூடம் செல்ல மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கு, tvmwildlife.com மற்றும் Agasthyamala போன்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். ஒருவருக்கு 3 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100 பேர் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. இங்கு டிரெக்கிங் செல்ல நல்ல உடல் நலத்துடன் இருப்பது அவசியம். இதனால், டிரெக்கிங் செல்வதற்கு 7 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் காட்டினால் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி முதல் வாரத்தில் 14ம் தேதி முதல் 31ம் தேதி வரை அகஸ்தியர் கூடம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்து ஏராளமானோர் அனுமதி பெற்றுள்ளனர். பிப்ரவரி மாதம் செல்வதற்கு ஜனவரி 3வது வாரத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அகஸ்தியர் சிகரம்தான் ஆனைமுடிக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம். இங்கிருந்துதான் தாமிரபரணி, நெய்யாறு போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. சுமார் 2,000க்கும் மேலான அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்த யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பூகோளப் பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெக்கிங் பாதை எங்கும் அருவிகள் உள்ளதால், எங்கெங்கும் குளியல் போட்டுக்கொள்ளலாம். பாம்புகள், பூச்சிகள் ஏராளமாக காணப்படும். மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தால் பறிமுதல் செய்துவிடுவார்கள். கடுமையான மலைப்பாதை என்பதால், 14 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அனுமதியில்லை. நீண்ட தொலை டிரெக்கிங் பாதை என்பதால் குழுவை விட்டு பிரிந்து செல்ல அனுமதியில்லை. முதல் நாளில் 12 கி.மீ தொலைவு நடக்க வேண்டும். அன்றைய தினம் இரவு அதிரி மலையில் உள்ள கேம்ப்பில் தங்கிக் கொள்ளலாம். உங்களுடன் வரும் வனத்துறை ஊழியர்கள், வழிகாட்டிகள்தான் உங்களுக்கு வயிறு உபாதைகள் தராத எளிமையான உணவுகளை சமைத்து தவருவார்கள். வனத்தில் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம். இதனால், மூன்று நாட்களுக்குள் டிரெக்கிங்கை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். எனவே, டிரெக்கிங் செல்பவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். வழுக்குப்பாறை என்ற இடத்தை அடைந்ததும் , அங்கே தமிழின் மூத்த முனியான குறுமுனி உங்களை வரவேற்பார்.
அகஸ்திய முனி பழங்குடியின மக்களான கானி இன மக்களின் பாதுகாவலராக கருப்படுகிறார். பிரம்மச்சாரியான அகஸ்தியரை வழிபடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. சிவராத்திரி தினத்தில் கானி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இங்கு விழா நடத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது. கானி இன பெண்களுக்கும் இங்கு செல்ல அனுமதியில்லை. கடந்த 2019ம் ஆண்டில் அகஸ்தியர் கூடத்துக்கு பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கியது.
இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் ராணுவச் செய்தி தொடர்பாளராக இருக்கும் தன்யா சனால் என்ற 38 வயது பெண் அகஸ்தியர் கூடத்துக்கு மலை ஏறினார். தன்யா சனால் மலை ஏற எதிர்ப்பு தெரிவித்து, மலையின் அடிவார பகுதியான போனகாட்டில் கானி இனப் பெண்கள் பெரும் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, தன்யா சனால் , 'மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நான் அகஸ்தியர்கூடம் செல்லவில்லை. அகஸ்தியர் சிலை அருகேவும் செல்லப் போவதில்லை' என்று உறுதிபட கூறினார். இதையடுத்து, அவர் அகஸ்தியர் கூடத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் . அகஸ்தியர் கூடத்துக்கு சென்ற முதல் பெண்ணும் இவர்தான்.