Currency notes of different country Freepik
பயணம்

வெளிநாடு சுற்றுலா போலாமா? இந்திய ரூபாய்க்கு மதிப்பு எங்கே அதிகம்?

வெளிநாட்டு சுற்றுப்பயணம் சாத்தியமா? திட்டமிட்டு பயணித்தால் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சென்று திரும்பலாம்.

எம். குமரேசன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டேதான் வருகிறது. தற்போது, ஒரு டாலருக்கு இந்தியாவின் பண மதிப்பு 88 ஆக உள்ளது. ஆனால், ஒரு சில நாடுகளில் இந்திய ரூபாய்க்கு மவுசு அதிகம். அதனால் அந்த நாடுகளுக்கு இந்தியர்கள் எளிதாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் வியட்நாம் உள்ளது. இந்த நாட்டில் நமது ஒரு ரூபாய் பணத்துக்கு 296 வியட்நாமீஸ் டாங் தரப்படும். 150 ரூபாய்க்கு நல்ல தரமான சாப்பாடு சாப்பிடலாம். ஒரு இரவுக்கு 2 ஆயிரம் செலவில் நல்ல தரமான ஹோட்டலில் இந்த நாட்டில் தங்க முடியும். வியட்நாம் சுற்றுலா ஃபிரெண்ட்லி நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு இந்திய ரூபாய்க்கு 190 இந்தோனேஷிய ரூப்யா கிடைக்கும். இந்தோனேஷியா உலகில் அதிகமான இஸ்லாமிய மக்கள் வாழும் நாடு. பாலி உள்ளிட்ட 17 ஆயிரம் தீவுகள் இந்த நாட்டில் உள்ளன. ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு விதத்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக் கூடியது. போக்குவரத்து, தங்குமிடம், உணவு எல்லாமே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். நீண்ட நாள் சுற்றுலாவுக்கு இந்தோனேஷியா சிறந்தது.

தென் அமெரிக்க நாடான பாரகுவே அழகிய சுற்றுலாத் தளங்களை உள்ளடக்கியது. ஏராளமான அருவிகளும் உள்ளன. 7 லட்சம் மக்களே கொண்ட இந்த நாட்டில் அனைத்துமே மலிவு விலைதான். ஒரு இந்திய ரூபாய்க்கு 89 பாராகுவேயின் குரானி கிடைக்கும்.

ஒரு இந்திய ரூபாய் 49 கம்போடியா ரியாலுக்கு சமமானது. இந்த நாட்டில்தான் புகழ்பெற்ற அங்கர்வாட் கோவில் உள்ளது. தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கம்போடிய நாட்டில் அனைத்து பொருட்களுமே மலிவாக கிடைக்கும். மியான்மரில் ஒரு இந்திய ரூபாய்க்கு 25 மியான்மர் கியாட் கிடைக்கும். எனவே, செலவைப் பற்றி கவலைப்படாமல் மியான்மர் நாட்டை சுற்றி பார்க்கலாம்.

Wildebeast in Serengeti

ஆப்பிக்க நாடான தான்சேனியாவில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த நாட்டில் 21 வனவிலங்கு பூங்காக்கள் உள்ளன. உலகப்புகழ் பெற்ற செரங்கட்டி தேசியப் பூங்கா இங்குதான் அமைந்துள்ளது. யானைகள், சிங்கங்கள், சிறுத்தைப்புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், நீர்யானைகள், வரிக்குதிரைகள், ஒட்டகச்சிவிங்கிகள், வைல்டு பீஸ்டுகள் என்கிற காட்டு ஆடுகள் என இந்த நாட்டில் இல்லாத வனவிலங்குகளே கிடையாது. கிளிமஞ்சாரோ மலைமுகடும் இங்குதான் அமைந்துள்ளது. வன சஃபாரிக்கு பெயர் போன இந்த நாட்டில் ஒரு ரூபாய்க்கு 30 தான்சேனியா ஷில்லாங் கிடைக்கும். எனவே, வனவிலங்கு சஃபாரிக்கு ஆசைப்படும் இந்தியர்கள் தாராளமாக தான்சேனியா சென்று வரலாம்.

மத்திய ஆசிய நாடான உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் இந்தியப் பணத்துக்கு மதிப்பு அதிகம். இங்கு, ஒரு ரூபாய்க்கு 145 சோம் நமக்கு கிடைக்கும். பட்ஜெட் டிராவலுக்கு ஏற்ற நாடு இது.

ஐரோப்பிய நாடான ஹங்கேரி அழகிய கட்டடக் கலைக்கு பெயர் போனது. இந்த நாட்டின் தலைநகர் புடாபஸ்ட் அழகான நகரம். இந்த நாட்டில் நமது ஒரு ரூபாய்க்கு 4.3 ஃபோரியன்ட் நமக்கு கிடைக்கும். இந்த அழகிய நாடும் சுற்றுலாவுக்கு பெயர் போனது.

அதேபோல, நமது அண்டைநாடுகளான நேபாளம், இலங்கை நாடுகளிலும் நமது பணத்துக்கு மவுசு அதிகம். நேபாளத்தில் ஒரு ரூபாய்க்கு 1.6 நேபாள பணமும், இலங்கையில் 3.8 பணமும் கிடைக்கும். இந்த இரு நாடுகளுமே சுற்றுலாவுக்கு பெயர் போனவை. எனவே, தாராளமாக இந்த நாடுகளுக்கு செல்லலாம்.

எனவே, வெளிநாட்டு சுற்றுப்பயணம் எல்லாம் நமக்கு முடியாத காரியம் என்று கருத வேண்டாம். மேற்கண்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றால், செலவுகள் மிக குறைவு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.