Vivek Express Train  AI GENERATED
பயணம்

Vivek Express: 4 நாட்கள்... 9 மாநிலங்கள்... 57 ஸ்டேஷன்கள்!

விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணம்தான் சற்று விசித்திரமானது. விவேக் ரயில் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் நகருக்கு 4 நாட்கள் பயணிக்கிறது.

எம். குமரேசன்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில்வே பாதையில் 13, 198 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பேசஞ்சர், எக்ஸ்பிரஸ், லோக்கல் சபர்பன் ரயில்கள் அடக்கம். ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை இந்திய ரயில்கள் கடந்து செல்கின்றன. தினமும் 2.5 கோடி மக்கள் இந்தியாவில் ரயில் பயணத்தை நம்பியிருக்கிறார்கள். இவை தவிர நாள் ஒன்றுக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களும் ஒடிக் கொண்டிருக்கின்றன.

இந்திய ரயில்வேக்கு 3,27,991 சரக்கு வேகன்கள் சொந்தமாக உள்ளன. 91,948 பயணிகள் ரயில்வே கோச்சுகளையும் கொண்டுள்ளது. 38 நீராவி இன்ஜின்கள், 10,675 எலக்ட்ரீக் இன்ஜீன்கள், 4,397 டீசல் லோகோமெடிவ் இன்ஜின்களையும் இந்திய ரயில்வே சொந்தமாக இயக்குகிறது. இந்த ரயில்களில் சில நீண்ட தொலைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அவற்றில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணம்தான் சற்று விசித்திரமானது.

கன்னியாகுமரியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகருக்கும் செல்லக் கூடிய ரயில் இது. வாரத்துக்கு வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4 நாட்களில் 4,155 கிலோ மீட்டர் பயணித்து இந்த ரயில் திப்ரூகர் நகரை அடைகிறது. 9 மாநிலங்களில் 57 ரயில்வே நிலையங்களில் இந்த ரயில் நிறுத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் , கொல்லம், பாலக்காடு வழியாக தமிழகத்துக்குள் கோவை நகருக்கு இந்த ரயில் நுழைகிறது. பின்னர், காட்பாடி வழியாக ஆந்திரத்துக்குள் நுழைந்து விசாகப்பட்டினம், விஜயவாடா வழியாக ஒடிசாவுக்குள் போகிறது. தொடர்ந்து, புவனேஷ்வர், கட்டாக் வழியாக பீகாருக்குள் நுழைகிறது. அடுத்து மேற்குவங்கம், நாகலாந்து வழியாக அஸ்ஸாமின் திப்ரூகர் நகரை அடைகிறது. இடையில், ஜார்கண்டில் சில நிறுத்தங்களையும் கடக்கிறது. மொத்தம் 9 மாநிலங்களில் இந்த ரயில் ஓடுகிறது. இந்தியாவிலேயே அதிக தொலைவு பயணிக்கும் ரயில் இதுதான்.

Vivek Express Train

கடந்த 2013ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுவதும் விவேக் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில், கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகருக்கும் துவாரகாவில் இருந்து தூத்துக்குடிக்கும் பாந்திரா டெர்மினஸில் இருந்து ஜம்முதாவிக்கும் ஹவுராவில் இருந்து மங்கலாபுரத்துக்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி -திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடுத்தபடியாக, திருவனந்தபுரத்தில் இருந்து, அஸ்ஸாமின் ஷில்ச்சார் நகருக்கு செல்லும் Aronai Superfast Express ரயில் 3915 கி.மீ தொலைவு ஓடுகிறது. தொடர்ந்து, ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்தபடியாக நீண்ட தொலைவு ஓடும் ரயில் என்கிற பெயரைப் பெறுகிறது. இது கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் 73 மணி நேரம் பயணிக்கிறது. 12 மாநிலங்களில் 71 ரயில் நிலையங்களை கடந்து இந்த ரயில் செல்லும் தொலைவு 3,800 கி.மீ ஆகும். ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பயணிகள் செல்ல இது ஏற்றது ஆகும்.

நெல்லையில் இருந்து ஜம்முவின் கத்ராவிலுள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் தென்ஜம்மு எக்ஸ்பிரஸ் 4வது இடத்தை பிடிக்கிறது. இந்த ரயில் 3,642 கி.மீ பயணிக்கிறது. பட்டியலில் பெங்களுருவில் இருந்து திப்ரூகருக்கு செல்லும் பெங்களுரு வீக்லி எக்ஸ்பிரஸ் 5வது இடத்தில் உள்ளது. இந்த ரயில் 3,642 கி.மீ பயணம் செய்கிறது.