t20 world cup wiinning indian team  Indian Cricket Team facebook page
விளையாட்டு

சிக்ஸர் மன்னன் சஞ்சு; 106 சிக்ஸர்களை விளாசிய இந்தியா! #t20worldcup

சஞ்சு சாம்சனின் ஜெர்சிக்கு நேற்று கடும் டிமாண்ட் இருந்தது. இந்திய ரசிகர்களின் மனதில் அவர் நீங்காத இடம் பெற்றிருப்பதையே இது காட்டியது.

எம். குமரேசன்

ஆமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டது. உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக நடப்பு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது . அதுவும், சொந்த மண்ணில். இந்தத் தொடரில், ஐந்து போட்டிகளில் 321 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் அவரின் சராசரி 80.25 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 199 . டி20 உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் சாம்சன்தான். இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் மட்டும் 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஒரே தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

போட்டிக்கு பிறகு சஞ்சு சாம்சன் பேசுகையில், ''2024 ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றேன். ஆனால், ஒரு போட்டியில் கூட களம் இறங்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு, இனிமேல் நமது கதை முடிந்து விட்டது என்று கூட நினைக்க தொடங்கினேன். இந்தச் சூழலில் கடந்த 2 மாதங்களாக சச்சினிடம் பேசி ஆலோசனையை பெற்றேன். அவர் தொடர்ந்து எனக்கு அறிவுரைகள் வழங்கினார். இதனால், எனது தன்னம்பிக்கை அதிகரித்தது. நேற்று கூட சச்சின் என்னை அழைத்துப் பேசினார். இதற்காக, நான் அவருக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன் ''என்று தெரிவித்தார்.

விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , ''உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் சேட்டா...'' என்று பதிவு வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

நேற்றைய போட்டியின் போது, ஆட்டம் நடந்த நரேந்திர மோடி மைதானத்தை சுற்றிலும் தெருவோரக்கடைகளில் சஞ்சு சாம்சன் ஜெர்சிக்கு கடும் டிமாண்ட் இருந்தது. இதனால், மிக விரைவாக சஞ்சு சாம்சன் ஜெர்சிகள் விற்று தீர்ந்தன. இந்த ஜெர்சிகளை அதிக விலைக்கு விற்று வியாபாரிகள் கொள்ளை லாபம் பார்த்தனர்.

10 ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் இருந்தாலும், இந்த டி 20 தொடர் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்று விட்டார் என்றே சொல்லலாம்

sanju with trophy

இந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னதாக 88 சிக்ஸர்களை அடித்திருந்தது. இறுதிப் போட்டியில் மட்டும் 18 சிக்ஸர்களை அடித்தது. இந்த தொடரில் மொத்தம் 9 ஆட்டங்களில் 106 சிக்ஸர்களை இந்தியா விளாசியுள்ளது. ஒரே தொடரில் , ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர் இது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மட்டும் அதிகபட்சமாக 19 சிக்ஸர்களை இந்தியா அடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய இறுதி ஆட்டத்தில் 18 பந்துகளில் அபிஷேக் சர்மா அரை சதமடித்தார். இந்த தொடரில்மிக விரைவாக அடிக்கப்பட்ட அரை சதம் இதுதுதான். 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த போது, அபிஷேக் சர்மா வீழ்ந்தார். சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார். இறுதிப் போட்டியில் ஒருவர் எடுத்த அதிபட்ச ரன் இது. முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் மர்லான் சாமுவேல்ஸ் 85 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிசானும் 23 பந்துகளில் சதமடித்தார். இறுதிப் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் அரை சதம் கண்டதும் இதுவே முதன்முறை .