Sanju Samson celebrates with the team mates  BCCI X page
விளையாட்டு

'என் கிரிக்கெட் வாழ்க்கை மேடு, பள்ளம் நிறைந்தது!' - சஞ்சு சாம்சன் உருக்கம் #Sanjusamson

இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வித்திட்ட சஞ்சு சாம்சன் 13 இன்னிங்சுகளுக்குப் பிறகு, அரை சதமடித்து அசத்தினார். 26 பந்துகளில் அவர் இந்த அரைசதத்தை எட்டினார்.

எம். குமரேசன்

உலகக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 8 சுற்றில் கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் 196 ரன்கள் என்ற இலக்கை 5 விக்கெட்டுகள் மீதம் வைத்து சேஸ் செய்தது இந்தியா. இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் மிகவும் உதவிக்கரமாக இருந்தார்.

ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் போய்க் கொண்டிருந்தாலும் , நிலைத்து நின்று ஆடி 50 பந்துகளில் 97 ரன்களை அவர் விளாசினார். நீண்ட காலத்துக்கு பிறகு, சஞ்சு சாம்சனின் சிறந்த இன்னிங்சாக இது அமைந்தது. ஆட்ட நாயகனான தேர்வு செய்யப்பட்ட பிறகு சஞ்சு சாம்சன் கூறியதாவது, ''கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து நாட்டுக்காக களமிறங்க வேண்டுமென்பதுதான் எனது கனவு. எனது கிரிக்கெட் வாழ்க்கை நிறைய மேடு, பள்ளம் நிறைந்தது. சில சமயங்களில் 'என்னால் செய்ய முடியுமா' என்று என்னை நானே கேள்வி கேட்டுக் கொள்வது உண்டு. என் மீதே நான் சந்தேகப்பட்டாலும், கடவுள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. அவர்தான் என்னை இந்த நாளில் ஆசிர்வதித்துள்ளார். இந்த நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன்.

Sanju Samson - India vs West Indies

கடந்த 10 ஆண்டுகளாக நான் டி20 போட்டியில் நாட்டுக்காகவும் ஐ.பி.எல் தொடரிலும் விளையாடி வருகிறேன். டக் அவுட் ஆவதில் இருந்து விராட்கோலி, ரோகித் சர்மா எப்படி தங்கள் இன்னிங்சை கட்டமைத்துக் கொள்கிறார்கள் என்பதை கவனத்துடன் பார்த்து கற்றுக் கொண்டேன். அவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது அனேகம். நான் 50, 60 போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறேன். ஆனால், கிட்டத்தட்ட 100 போட்டிகளைப் பார்த்து சிறந்த வீரர்கள் ஒரு இன்னிங்சை எப்படி சேஸ் செய்கின்றனர் என்பதை கற்று வைத்துள்ளேன். 195 ரன்களை சேஸ் செய்வது கடினமான காரியம்தான். அதுவும், ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் போய்க் கொண்டிருந்த சமயத்தில், எனது தன்னம்பிக்கை தளராமல் பார்த்துக் கொண்டேன். நான் ஸ்பெஷலாக எதையும் செய்து விட நினைக்கவில்லை. பேட்டிங்கை மட்டும் கவனத்துடன் கையாண்டேன். எனக்கு இது ஒரு சிறந்த நாளாக அமைந்தது'' என்றார்.

நேற்றைய ஆட்டத்தில் கிட்டத்தட்ட 13 இன்னிங்சுகளுக்கு பிறகு சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். 26 பந்துகளில் அவர் ஐம்பது ரன்களை எடுத்தார். இந்திய அணியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வேறு எந்த ஒரு வீரரும் 30 ரன்களை தாண்டவில்லை. சஞ்சு சாம்சனுக்கு அடுத்தபடியாக, திலக்வர்மா மட்டுமே அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார். இக்கட்டான நேரத்தில் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டமும் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேற உதவிகரமாக இருந்தது. முன்னதாக, டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அதிகபட்சமாக 173 ரன்களை சேஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரை பொறுத்த வரை, சஞ்சு சாம்சனை ஓபனராக களம் இறக்கும் எண்ணம் இந்திய அணிக்கு இல்லை. பிளான் 'பி'யாகவே அவரை ஓபனராக களமிறக்கும் திட்டம் இருந்தது. அதற்கேற்ற வகையில், முதல் 4 ஆட்டங்களில் அவர் களமிறக்கப்படவில்லை. ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக மட்டுமே ஓபனராக களம் இறங்கினார். கடந்த 2015ம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 60 டி 20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் . அவற்றில் நேற்றைய ஆட்டமே அவருக்கு முத்தாக அமைந்தது.