Senegal clinched the Africa Cup WoezorTV - instagram
விளையாட்டு

பொறுத்தார் பூமி ஆள்வார்: சபாஷ் Sadio Mané #AFCON final

ஆட மறுத்து களத்தை விட்டு வெளியேறிய சக வீரர்களை தடுத்து மீண்டும் களத்துக்கு திரும்ப வைத்தார் சேடியோ மானே. அதற்கு, கை மேல் பலன் கிடைத்தது.

எம். குமரேசன்

ஆப்ரிக்கக் கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதி ஆட்டம் ஜனவரி 18ம் தேதி மொராக்கோவிலுள்ள ரபாத் நகரில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் செனகல் அணியுடன் மொராக்கோ மோதியது. சொந்த ரசிகர்கள் முன்னிலையில், மொராக்கோ ஆக்ரோஷமாக விளையாடியது. அதற்கு இணையாக செனகலும் விளையாடியது. இரு அணிகளுக்கும் பல கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், கோலாக மாற்றுவதில் இரு அணி வீரர்களுமே கோட்டை விட்டனர். இஞ்சுரி டைமில் 91வது நிமிடத்தில் செனகல் அடித்த கோலை நடுவர் நிரகரித்து விட்டார். அதோடு, 94வது நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு சாதகமாக பெனால்டி வழங்கப்பட்டதால், சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செனகல் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறினர். வீரர்களின் முடிவுக்கு அந்த அணியின் பயிற்சியாளரும் ஆதரவளித்தார். செனகல் ரசிகர்களும் மைதானத்தில் போலீசாரிடத்தில் மோதத் தொடங்கினர். இதனால், மைதானம் போர்க்களமானது. கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே களத்தில் இருந்து வெளியேறி விட்டாலும் லிவர்பூல் அணியின் முன்னாள் சூப்பர்ஸ்டாரும் செனகல் வீரருமான சாடியோ மானே (Sadio Mané) மட்டும் சக வீரர்களை சமாதானப்படுத்தினார். 'மேலும், கண்டிப்பாக முழு நேரமும் ஆட்டத்தை விளையாடி விட்டுத்தான் வெளியேற வேண்டுமென்றும்' தனது வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனை ஏற்றுக் கொண்ட செனகல் வீரர்கள் மீண்டும் களத்துக்கு திரும்பினர்.

இங்கேதான், இன்னொரு ட்விஸ்ட் நடந்தது. அதாவது, பெனால்டியை அடிக்க வந்த மொராக்கோ வீரர், பிரஹீம் டயாஸ் கோலாக மாற்றத் தவறினார். இத்தாலி சூப்பர்ஸ்டார் பிர்லோ போல , 'பனேகா' ஸ்டைல் கோலாக அடிக்க முயன்று அவர் தோல்வி கண்டார். விளைவு... செனகல் கோல்கீப்பர் பழம் போல வந்த பந்தைப் பிடித்துக் கொண்டார். இதனால், கிடைத்த வாய்ப்பு வீணாகிப் போனது. மொராக்கோ ரசிகர்கள் கவலை கொண்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டம் கோல் இல்லாமல் சமனில் முடிந்தது. தொடர்ந்து, ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. இந்தத் தருணத்தில் இரு அணி வீரர்களுமே ஆக்ரோஷமாக ஆடத் தொடங்கினார்கள். கூடுதல் நேரத்தில் 94வது நிமிடத்தில் செனகலின் பெக் குயியே அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். கிட்டத்தட்ட 20 அடி தொலைவில் இருந்து அடிக்கப்பட்ட பந்து , மொராக்கோ கோல்போஸ்ட்டின் டாப் கார்னரில் சென்று புகுந்துக் கொண்டது.

Sadio Mané celebrating the Africa Cup with his family.

பின்னர், கடைசி வரை போராடியும் மொராக்கோ அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் செனகல் அணி ஆப்ரிக்கக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது. ஒருவேளை, ஆட்டத்தை புறக்கணித்து செனகல் சென்றிருந்தால், கோப்பையை இழந்திருக்கும். இந்தத் தருணத்தில் Sadio சாடியோ மானே (Sadio Mané) காட்டிய பொறுமையும் சக வீரர்களை சமாதானம் செய்த விதத்தாலும்தான் இன்று ஆப்ரிக்க சாம்பியனாகியுள்ளது செனகல். தற்போது , சேடியோ மானேவை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தொடர் நாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

போட்டி முடிந்ததும் சாடியோ மானே (Sadio Mané) கூறுகையில், '' எங்கள் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறிய போது, 'நீங்கள் செய்வது சரியா? இது நல்லதொரு முடிவா? 'என்று அவர்களிடத்தில் நான் கேட்டேன். இது, கால்பந்து விளையாட்டு. சில சமயங்களில் நடுவர் தவறுகள் செய்யலாம். உலகம் முழுவதும் மக்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது பெனால்டியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால், அது மிக முக்கியமான விஷயம் அல்ல. ஆடுகளத்தை மதிப்பதுதான் முக்கியம். இப்படி ஒரு போட்டியை நிறுத்துவது நியாயமல்ல. சில சமயங்களில், உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுக்குச் சென்று விடுகிறோம் ''என்றார்.

போட்டியை நடத்திய மொராக்கோ அணிதான் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், முடியவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் ஆப்ரிக்க கோப்பை வரலாற்றில் மொராக்கோ அணியால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த முறை சொந்த மண்ணில் இறுதி ஆட்டம் வரை வந்து, தோற்றது... அதுவும் லட்டு போல கிடைத்த பெனால்டியை வீணடித்தது என்று பல சம்பவங்கள் நடந்ததால், அந்த நாட்டு ரசிகர்கள் சோகமாக மைதானத்தை விட்டு வெளியேறினர்.