மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜெய்ன் மாவட்டத்திலுள்ள பாம்னாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக் சோனி. நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. 32 வயதான அவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். இந்தியா , தோற்றாலும் சரி ஜெயித்ததாலும் சரி... கடைசி பந்து வரை பார்த்து விட்டுதான் டி.வியை ஆஃப் செய்வார். இவருக்கு ஒரே ஒரு ஆசை. வாழ்க்கையில் ஒரு முறையாவது, மைதானத்துக்குச் சென்று நேரடியாக இந்தியா விளையாடும் சர்வதேச ஆட்டத்தைக் காண வேண்டுமென்பதுதான் அந்த ஆசை. இத்தனை ஆண்டுக் காலத்தில் பல முறை போராடியும் அவரால் டிக்கெட் எடுத்துச் சென்று மைதானத்தில் போட்டியைக் காண முடியவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் இந்தூரில் நடந்த இந்தியா நியூசிலாந்து மோதும் ஆட்டத்தைக் காண அபிஷேக் சோனி ஆசைப்பட்டார். இதற்காக, டிக்கெட் எடுக்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் ஒரு காரியம் செய்தார்.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவுக்கு ஒரு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், 'நமஸ்தே முதல்வர்ஜி, நான் ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால், மிகப் பெரிய கிரிக்கெட் ரசிகன். எனக்கு இந்தியா விளையாடும் போட்டியை மைதனத்தில் சென்று பார்க்க ஆசை. எனக்கு தயவு செய்து உதவுங்கள் ' என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வீடியோவும் முதல்வர் பார்வைக்குச் சென்று விட்டது. வீடியோவைப் பார்த்த முதல்வர் மோகன் யாதவ் , யாரோ ஒருவர்தானே என்று கடந்து சென்று விடவில்லை. உடனடியாக, அபிஷேக்குக்குப் போட்டியைக் காண இரு டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடு செய்தார். அரசு அதிகாரிகள் அபிஷேக்கின் வீடு தேடி வந்து டிக்கெட்டுகளைக் கொடுத்துச் சென்றனர். இதையடுத்து, மிகுந்த மகிழ்ச்சியடைந்த அபிஷேக் இந்தூரில் ஹோல்கர் மைதானத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிராக , இந்தியா ஆடிய 3வது ஒருநாள் போட்டியை நேரில் சென்று கண்டுகளித்தார். அப்போது, இந்திய ஜெர்சியை அணிந்து அபிஷேக் காணப்பட்டார். ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுடன் மைதானத்தில் போட்டியைப் பார்த்தது அபிஷேக்குக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. தனது கனவை கருணையுடன் நிறைவேற்றிய மத்திய பிரதேச முதல்வருக்கு அபிஷேக் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்