Yuvraj Singh @YUVSTRONG12
விளையாட்டு

'3 முதல் 6 மாதங்கள்தான் உயிர்!" - இருண்டகாலம் குறித்து மனம் திறந்த யுவராஜ் சிங்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், தனது வாழ்க்கையின் இருண்ட காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

எம். குமரேசன்

கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்திய வீரர் யுவராஜ் சிங், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதே ஆண்டின் இறுதி கட்டத்தில் யுவராஜின் நுரையீரல் மற்றும் மார்பின் நடுவில் mediastinal seminoma என்ற அரியவகைப் புற்றுநோய் பாதித்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. அமெரிக்காவில் கீமோதெரபி சிகிச்சை பெற்று, வெற்றிக்கரமாக புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார். புற்றுநோய் இவருக்கு இருப்பதாகத் தெரிந்த சமயத்தில் , 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே அவரால் உயிர் வாழ முடியுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தனது வாழ்க்கையில் நடந்த இருண்ட காலம் குறித்து தற்போது, யுவராஜ் சிங் இங்கிலாந்து கிரிக்கெட்டர் கெவின் பீட்டர்சனுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, 'ஒரு நாள் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலும், இந்திய டெஸ்ட் அணியில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக எனக்கு இடம் கிடைக்கவில்லை. 40 டெஸ்ட் ஆட்டங்களில் 12வது வீரராக நான் செயல்பட்டேன். இந்த சமயத்தில்தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைத்தது. ஆஸ்திரேலியா செல்ல தயராகிக் கொண்டிருந்தேன். அந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த போதுதான், எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நான் இடிந்து போனேன். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல வேண்டியது இருந்தது.

Yuvraj singh in World cup T20

மருத்துவர்கள் எனது இதயம் மற்றும் நுரையீரலுக்கு இடையே புற்றுநோய்க் கட்டி இருப்பதாக கூறினர். 3 முதல் 6 மாதங்கள்தான் உயிர் வாழ முடியும் என்றனர். கீமோகிராபி செய்யவில்லை என்றால், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர். அப்போது , சிகிச்சையளித்த மருத்துவர் லாரன்ஸ் யென்ஹார்ன், என்னிடத்தில் 'புற்றுநோய் பாதிக்கப்பட்ட மனிதர் போலவே உணரக் கூடாது. எப்போதும் போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ' என்று அறிவுரை வழங்கினார். இந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த பலத்தை கொடுத்தது. கடைசியில், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தேன். மீண்டும் கிரிக்கெட்டும் விளையாடத் தொடங்கினேன். 2011-12 ம் ஆண்டுகள் எனக்கு சோதனையான காலக்கட்டமாக அமைந்தது. இனிமேல், என்னால் முன்பு போல கிரிக்கெட் விளையாட முடியாது என்று பலரும் கூறி வந்தனர். ஆனால், நான் அவர்களின் வார்த்தைகளை பொய்யாக்கினேன்" என்று அந்தப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சர்வதேச ஆட்டத்துக்கு திரும்பிய யுவராஜ் சிங் பல சாதனைகளை படைத்தார். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 35 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். 2017ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 150 ரன்களை அடித்தார். ஒரு நாள் போட்டியில் இதுதான் அவரின் அதிகபட்ச ரன் ஆகும். புற்று நோய் சிகிச்சைக்கு பிறகு, 7 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங், 2019ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வில் யுவராஜ் சிங் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு பிரிட்டன் நடிகை ஹசல் கீச்சை காதலித்து யுவராஜ்சிங் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஓரியன் என்ற மகனும் ஆவுரா என்ற மகளும் உள்ளனர்.