அர்ஜெண்டிணாவின் கால்பந்து சூப்பர்ஸ்டார் மெஸ்ஸி 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் இறங்கிய அவர், ஹைதரபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு விசிட் அடித்தார்.
கடைசியாக, திடீரென அவரின் சுற்றுப்பயணத்தில் குஜராத்தின் ஜாம் நகரும் சேர்க்கப்பட்டது. காரணம்... ஆனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்குகளுக்கான உயிரியல் பூங்கா. இங்கு, 3000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 650 ஏக்கர் நிலத்தை அரிய வகை வனவிலங்குகள் இயற்கையாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த உயிரியல் பூங்காவில் மொத்தம் 200 யானைகள் உள்ளன. 300 சிறுத்தைகளை வைத்து பராமரிக்கப்படுகின்றன. இதேபோல் ஏராளமான புலிகள், சிங்கங்கள் மற்றும் ஜாகுவார்கள் ஆனந்த் அம்பானியின் பூங்காவில் வாழ்கின்றன. மேலும் முதலைகள், பாம்புகள் மற்றும் ஆமைகள் உட்பட 1200 ஊர்வன விலங்குகளும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த 300 மான்கள் என மொத்தம் 2000 உயிரினங்கள் வந்தாரா பூங்காவில் வசிக்கின்றன.
சுற்றுப்பயணத்தின் கடைசிக்கட்டத்தில் மெஸ்ஸி இங்கு விசிட் அடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆனந்த் அம்பானி கருதியிருக்கிறார். உடனே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடத்தில் பேசவும் செய்துள்ளார்.
இதையடுத்து, மெஸ்ஸியிடம் விஷயத்தை எடுத்துக் கூறியதும் , அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து, மெஸ்ஸி இன்டர்மியாமி அணியில் விளையாடும் தனது நண்பர்கள் லூயீஸ் சவுரஸ் , பால் ஆகியோருடன் வந்தாராவுக்கு விசிட் அடித்தார்.
வந்தாரா உயிரியல் பூங்கா வாசலில் ஆனந்த் அம்பானி அவரின் மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மெஸ்ஸி குழுவினரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இங்கு, காளி தேவி, சிவன், விநாயகர், ஹனுமன் ஆகியோருக்கு கோயில்கள் உள்ளன. இந்த கோயிலில் மெஸ்ஸிக்காக சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.
மெஸ்ஸி, காளி தேவி சிலையிடத்தில் தலைகுனிந்து வணங்கி நின்றது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. பின்னர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை மெஸ்ஸி பார்வையிட்டார்.
மாணிக்லால் என்ற குட்டி யானை கால்பந்து விளையாட, அதனுடன் மெஸ்ஸி சிறிது நேரம் கால்பந்து விளையாடினார்.
மெஸ்ஸி வருகையின் நினைவாக, வந்தாராவில் சமீபத்தில் பிறந்த சிங்கக்குட்டிக்கு லியோனல் என்ற பெயரும் சூட்டப்பட்டது. அங்கிருந்த சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகளையும் மெஸ்ஸி பார்வையிட்டார். ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரைகள், மான்கள் போன்றவைகளுக்கு உணவு அளித்தும் மகிழ்ந்தார். இந்த உயிரியல் பூங்காவில் செயல்படும் வனவிலங்குகளுக்கான பிரமாண்ட மருத்துவமனையையும் மெஸ்ஸி பார்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்தார். இது தொடர்பான, புகைப்படங்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வந்தாரா குறித்து மெஸ்ஸி கூறுகையில், 'உண்மையிலேயே இது ஒரு அற்புதமாக செயல். இத்தகைய காரியங்களை செய்யவதற்கு நல்ல மனம் வேண்டும். எனக்கு, இங்கு கிடைத்த அனுபவம் வித்தியாசமானது. அடுத்தமுறை , இந்தியா வந்தால் கண்டிப்பாக இங்கு வருவேன்' என்று கூறினார்.
வந்தராவில் மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி சிறப்பு பரிசு ஒன்றை அளித்தார். அது ரிச்சர்ட் மில்லி நிறுவனத்தில் RM 003-V2 Asia Edition வாட்ச் ஆகும். இதன் மதிப்பு 11.74 கோடி என்று சொல்கிறார்கள்.
ரிச்சர்ட் மில்லி தயாரிப்புகளில் இதுதான் உன்னத படைப்பு என்கிறார்கள். இந்த ரகத்தில் மொத்தமே 12 வாட்ச்கள்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. புருனே சுல்தான் ஹசனல் பொல்கியா, பார்மூலா ஓன் வீரர் மைக்கேல் சூமேக்கர், மலேசியாசின் ஜோகர் மாகாண மன்னர் Tunku Ismail ibni Sultan Ibrahim, பிரபல வாட்ச் தயாரிப்பாளர் பின்லாந்தைந் சேர்ந்த Kari Voutilainen ஆகியோர் இந்த ரக வாட்ச்களை வைத்திருக்கும் மற்ற பிரபலங்கள் ஆவார்கள்.
இந்தியச் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர், இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை மெஸ்ஸி வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, 'இந்தியாவில் கொல்கத்தா, ஹைதரபாத், மும்பை, டெல்லி சுற்றுப்பயணம் அருமையாக இருந்தது. இந்தியர்களின் அன்பும் விருந்தோம்பலும் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது 'என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சந்தேஷ் திங்கன் , மெஸ்ஸி வருகை குறித்து வருத்தமான பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்திய உள்நாட்டு கால்பந்து லீக்குகளுக்கு ஸ்பான்ஷர் கிடைப்பதில்லை. பிராட்காஸ்ட் செய்ய சேனல்கள் முன் வருவதில்லை. அப்படியிருக்கையில் , மெஸ்ஸி வருகைக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கின்றனர். ஆனால், உள்நாட்டு கால்பந்தை வளர்க்க முதலீடு செய்ய யாரும் முன்வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்.