Vaibhav Suryavanshi espncricinfo
விளையாட்டு

இந்திய T20 அணியில் சூரியவன்ஷி? பயிற்சியாளருடன் BCCI ஆலோசனை

இந்திய டி 20 அணியில் விரைவில் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி இடம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம். குமரேசன்

இந்திய T 20 அணியில் விரைவில் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி இடம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயதான வைபவ்பவ், ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஐ.பி.எல் தொடரில் மிக விரைவாக அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இது. இந்தத் தொடரில் 7 ஆட்டங்களில் விளையாடி 252 ரன்களை அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 200 ஆகும். 14 வயதிலேயே டி20 போட்டிகளில் 1,000 ரன்களை சூரியவன்ஷி நெருங்கி விட்டார்.

அதுமட்டுமல்ல, 2025ம் ஆண்டில் மட்டும் இதுவரை சூரியவன்ஷி 6 சதங்களை அடித்துள்ளார். தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர்நடந்து வருகிறது. அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூரியவன்ஷி 171 ரன்களை எடுத்து அசத்தினார். இதில், 14 சிக்ஸர்கள் அடக்கம்.

முன்னதாக, கடந்த 2008ம் ஆண்டு நமீபியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஹில் 12 சிக்ஸர்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூரியவன்ஷியின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய டி 20 அணியில் சூரியவன்ஷியை சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆலோசித்து வருகிறது. அதுவும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சூரியவன்ஷியை அணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக, சூரியவன்ஷியின் இளம் வயது பயிற்சியளரான மானீஷ் ஓஜாவை அழைத்து பி.சி.சி.ஐ கருத்து கேட்டுள்ளது.

அப்போது, பிசிசிஐ நிர்வாகிகளிடம், '' இந்திய அணியில் விளையாட அவர் தயாராகி விட்டார். ஐ.பி.எல் தொடரில் ரசிகர்கள் நிறைந்த மைதானங்களில் எந்த பயமும், தயக்கமும் இல்லாமல் அனைத்து நாட்டு பந்துவீச்சாளர்களையும் எதிர்கொண்டு விளையாடிப் பழகி விட்டார். 10 வயதிலேயே 90 மீட்டர் தொலைவுக்கு சிக்ஸர் அடித்தவர். நமது நாட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.

அவரிடத்தில் எந்த ஒரு தயக்கத்தையும் காண முடியவில்லை. 100 சதவிகிதம் சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காக களம் இறங்கத் தயராகவே உள்ளார். சர்வதேச ஆட்டத்தில் உள்ள அழுத்தத்தை தாங்கும் மன தைரியத்தை அவரிடத்தில் காண முடிகிறது. டி20 யில் மட்டுமல்ல ஒரு நாள் போட்டிக்குக் கூட அவர் தயார் நிலையில்தான் உள்ளார்.

இந்த வயதில், இந்திய அணியில் விளையாட வாய்ப்பளிப்பது அவருக்கு பெரும் உற்சாகத்தை தரும். நான் பிராக்டீஸ் அளிக்கும்போது, ஒரு ரன் , இரு ரன்களை எடுப்பதை தவிர்க்கவே கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறேன். ஆனால், அவரோ சிக்ஸர், பவுண்டரிகளையே அதிகம் விளாசுகிறார். அதேவேளையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை டி20 தொடரில் அடிக்கத் தூண்டும் பந்துகளை கூட கவனமாகக் கையாளத் தொடங்கியுள்ளார். அத்தகைய, பந்துகளை சிங்கிளாக மாற்றுகிறார். இது டெக்னிக்கலாக அவர் ஆட்டத்திறன் மெருகேற்றியுள்ளதை காட்டுகிறது. அதிக ரன்கள் எடுப்பது அவரது சிந்தனையிலேயே உள்ளது.

Vaibhav Suryanshi

மீடியாக்களிடம் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். நீ ரன்களை எடுத்தால் மட்டுமே மீடியாக்கள் உன்னைத் தேடும். இல்லையென்றால் , கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, ஆட்டத்தில் மட்டுமே உனது கவனம் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளேன் என்று மானீஷ் ஓஜோ தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ வைபவ் சூரியவன்ஷியை அணியில் சேர்க்க முடிவு செய்தாலும் ஐ.சி.சி. விதிகளின்படி , இப்போதைக்கு இந்திய அணிக்காக அவர் விளையாடுவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. சூரியவன்ஷி பிறந்து 14 ஆண்டுகள் 9 மாதங்கள் 18 நாட்கள்தான் ஆகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐ.சி.சி. கொண்டு வந்த விதியின்படி 15 வயதை எட்டியவர்கள்தான் சர்வதேச ஆட்டத்தில் களம் இறங்க முடியும். அப்படியானால், 2026ம் ஆண்டு மார்ச் 27ம் தேதிதான் அவருக்கு 15 வயது பிறக்கிறது. இதனால், வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சூரியவன்ஷி சேர்க்கப்பட வாய்ப்பில்லை.

அதேவேளையில், பி.சி.சி.ஐ சூரியவன்ஷிக்காக ஐ.சி.சியிடம் ஸ்பெஷலாக கடிதம் எழுதி அனுமதி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த T20 அணியில் சூரியவன்ஷி சேர்க்கப்படவில்லையென்றாலும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடும் டி20 தொடரில் அவர் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.