கடந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக்கில் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில் , குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு அறிவித்த வினேஷ் போகத் மீண்டும் களம் இறங்க தயார் என அறிவித்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மோதினார். தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அதோடு, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் வினேஷ் போகத் பெற்றிருந்தார்.
இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு எடை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது தெரியவந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அரையிறுதிப் போட்டி முடிந்த பின்னர், வினேஷ் போகத் சுயமாகவே எடை பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அவரது எடை சற்றே அதிகமாக இருந்ததால் மிகக் கடுமையான பயிற்சிகளை செய்துள்ளார். கடினமான உடற்பயிற்சிக்கு பின்னரும் வினேஷ் போகத் எடை குறையவில்லை. இதன்காரணமாக, தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் தனக்கு வெள்ளிப்பதக்கம் தர வேண்டுமென வழக்கு தொடர்ந்தார். ஆனாலும், இந்த வழக்கு முடிவும் அவருக்கு சாதகமாக அமையவில்லை.
இதனால், கடும் வேதனையுடன் அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். அப்போதே, பலரும் வினேஷ் போகத் தனது முடிவை மறு பரீசிலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். ஓய்வுக்கு பிறகு, அரசியலில் புகுந்த வினேஷ் போகத், ஹரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். வினேஷ் போகத்தின் கணவர் பெயர் சோம்வீர் ரத்தீ. இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், குத்துச்சண்டை போட்டிகளில் மீண்டும் கலந்து கொள்ளபோவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். 31 வயதான அவர் எடுத்த முடிவு இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இது குறித்து வினேஷ் போகத் கூறியதாவது, ''பாரீஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற்று விட்டீர்களா? என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். நீண்ட காலமாக என்னிடத்தில் இந்த கேள்விக்கு பதில் இல்லை. அழுத்தம், ஒருவித எதிர்பார்ப்பு, எனது சொந்த லட்சியத்தை விட்டு விலக வைத்து விட்டது. இதற்காக, நான் சந்தித்த இழப்பு, மன வேதனை, தியாகங்களை உலகம் அறியாதது. ஆனாலும், இந்த தருணத்தில் ஒரு உண்மையை உணர்ந்தேன். எனக்குள் அந்தப் பொறி இன்னும் இருப்பதை கண்டுகொண்டேன். இந்த விளையாட்டை இன்னும் நான் நேசிக்கிறேன் என்ற உண்மையையும் அறிந்து கொண்டேன்.
இன்னும், களத்தில் போட்டியிடும் திறன் என்னிடத்தில் இருப்பதையும் அறிந்து கொண்டேன். இந்த விளையாட்டை விட்டு விலகி வந்து விட்டாலும், எனது சிந்தனை மேட்டின் மேல் இப்போதும் இருப்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை நோக்கி நான் பயணிக்க முடிவு செய்துள்ளேன். இந்த முறை நான் மட்டும் தனியாக இல்லை. என்னுடன், எனது மகனும் இருக்கிறான். லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டியை நோக்கி முன்னேற அவன்தான் எனக்கு உத்கேவமாக இருக்கிறான்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வினேஷ் போகத் 3 முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். குத்துச்சண்டை போட்டியில் ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்.