உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸி 'The Goat Tour' என்ற பெயரில் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டிசம்பர் 15 வரையிலான இந்த சுற்றுப்பயணத்தில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 4 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
கொல்கத்தா வந்திறங்கிய மெஸ்ஸியை விமான நிலையத்திலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக கொல்கத்தாவில் தன்னுடைய 70 அடி சிலையை காணொளி முறையில் அவர் திறந்துவைத்தார். அவர் ஃபிஃபா உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருப்பது போல் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. கொல்கத்தாவில் மெஸ்ஸியைப் பார்க்க முடியாததால், ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதோடு, அவருக்கு அமைக்கப்பட்ட சிலையின் வடிவமைப்பும் இணையத்தில் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. கொல்கத்தாவுக்கு பிறகு ஹைதரபாத், மும்பை, டெல்லி நகரங்களுக்கும் மெஸ்ஸி பயணம் மேற்கொண்டார்.
ஹைதரபாத்தில் மெஸ்ஸி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி, ராகுல் காந்திக்கு 'GOATED 10' என்ற எண் கொண்ட ஜெர்சியை பரிசளித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டனர்.
இந்திய சுற்றுப்பயணத்தின் போது, மெஸ்ஸி 90 நிமிடங்களுக்கு ஒரு கண்காட்சிப் போட்டியில் விளையாடுவார். அதைக் காணலாம் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த முறையும் நிறைவேறவில்லை. இதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. தற்போது, 38 வயதான மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார். அனேகமாக 2026ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்தான் அவரின் கடைசி சர்வதேசக் களமாக இருக்கும். மெஸ்ஸியின் இடது கால் மட்டும் 900 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே தன் உடலை அதிக தொகைக்கு இன்சூரன்ஸ் செய்துள்ள சர்வதேச விளையாட்டு வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
ஆனால், தனது சொந்த நாட்டு அணி அல்லது அவரின் கிளப்பான இன்டர் மியாமி போன்ற அணிகளுக்காக விளையாடும் போது, மட்டுமே இன்சூரன்ஸ் தொகை கவர் ஆகும். இந்த ஆட்டங்களில் விளையாடும் போது, காயமடைந்தாலோ அல்லது இனிமேல் கால்பந்து விளையாட முடியாமல் போனாலோ இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
அதே வேளையில், கண்காட்சிப் போட்டிகளில் விளையாடி காயமடைந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது. இதனால், பல ஆயிரம் கோடியை மெஸ்ஸி இழக்க நேரிடும். இதன் காரணமாகவே, மெஸ்ஸி கண்காட்சிப் போட்டிகளில் பங்கேற்பதில்லை. பெரும்பாலான கால்பந்து வீரர்கள் முற்றிலும் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகே, கண்காட்சிப் போட்டிகளில் ஆடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான், சிகாகோ புல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். தனது ஒப்பந்தத்தில் 'விளையாட்டின் மீதான காதல்' என்ற அடிப்படையில், சிகாகோ புல்ஸ் அணியிடம் இருந்து எந்த அனுமதியும் பெறாமல், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாருடனும் கூடைப்பந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளின் போது மைக்கேல் ஜோர்டானுக்கு காயம் ஏற்பட்டாலும், அவர் விளையாடாவிட்டாலும் சிகாகோ புல்ஸ் அணி அவருக்கு பணம் செலுத்தும். ஆனால், மெஸ்ஸியின் காப்பீட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை, இதுபோன்ற எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை.
அதேவேளையில், பிஃபா நட்புறவு ஆட்டங்களில் தாய்நாட்டு அணிக்காக விளையாடும் போது, காயமடைந்தால் அவருக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். அந்த வகையில், கடந்த 2011ம் ஆண்டு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வெனிசூலா அணியுடன் கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா ஒரு கோல் அடித்து வென்றது.