Vaibhav Suryavanshi espncricinfo
விளையாட்டு

2025: கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் யார் யார் தெரியுமா?

அதே வேளையில், ஆசியகோப்பை உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை பிஃபா உலகக் கோப்பை பெற்றுள்ளது.

எம். குமரேசன்

பிகாரைச் சேர்ந்த 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷிதான் 2025ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் உலகளவில் தேடப்பட்டவர்களில் போப் ஆண்டவர் Leo XIV முதலிடத்தில் உள்ளார்.

பீகார் அணிக்காக சூரியவன்சி ரஞ்சி டிராபியில் களம் இறங்கிய போது, இவருக்கு வயது 12 ஆண்டுகள் 284 நாட்கள்தான் ஆகியிருந்தது. உலகில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 8வது இளம் வீரர் இவர். 9 வயதில் இருந்து இவர் கிரிக்கெட் விளையாட தொடங்கியவர், 10 வயதில் இருந்தே சீனியர் வீரர்களுடன் விளையாட ஆரம்பித்து விட்டார்.

அதோடு, கடந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 1.10 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டார். ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இளம் வீரர் இவர்தான். இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது, 38 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். ஐ.பி.எல். தொடரில் மிக வேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இது.

ஐ.பி.எல் தொடரில் அதி வேகமாக சதம் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். 2013ம் ஆண்டும் பெங்களுரு அணிக்காக விளையாடிய கெயில் புனே வாரியார்ஸ் அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதம் அடித்தார்.

ஐ.பி.எல்லில் சதம் அடித்த இளம் வீரர் என்று பல்வேறு சாதனைகளை அப்போது அவர் படைத்தார். இவர் பேட்டிங்கில் கன்சிஸ்டன்சி காட்டி வருவதுதான் கிரிக்கெட் நிபுணர்களை வியக்க வைக்கிறது.

கடந்த டிசம்பர் 2ம் தேதி சயீத் அலி முஸ்டாக் டி20 தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் பீகார் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் சூரியவன்ஷி 58 பந்துகளில் 104 ரன்கள் அடித்து அசத்தினார். இதில்,7 சிக்ஸர்களும் அடக்கம். இந்த போட்டியில் பீகார் அணி தோற்றாலும், சூரியவன்சியின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

இப்படி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படித்து வரும் சூரியவன்ஷிதான் 2025ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். உலகளவில் இவருக்கு 6வது இடம்.

Jemimah Rodrigues

இந்திய கிரிக்கெட்டர்கள் பிரியான்ஷ் வர்மா, அபிஷேக் ஷர்மா ஆகியோரும் கூகுளில் அதிகளவில் தேடப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 127 ரன்கள் அடித்த ஜெமிமா ரோட்ரிகஸ் கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட இந்தியர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் விளையாட்டு தொடர்களை பொறுத்த வரை, ஐ.பி.எல் தொடர் முதலிடத்தில் வருகிறது. ஆசிய கோப்பை இரண்டாவது இடத்திலும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 3வது இடத்தையும் பிடிக்கிறது.

அதே வேளையில், ஆசியகோப்பை உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை பிஃபா உலகக் கோப்பை பெற்றுள்ளது. பிஃபா உலகக் கோப்பை தொடர், உலகளவில் பல நாடுகள் பங்கேற்கும் மிகப் பெரிய விளையாட்டு தொடர் என்பதால் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2026ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.