Ryan Williams @Ryan Williams - Instagaram
விளையாட்டு

'இனி நான் இந்தியன்!' -ஆஸ்திரேலிய குடியுரிமையைத் துறந்த வீரர் !

இந்திய அணிக்காக விளையாட காலபந்து வீரர் எடுத்த அதிரடி முடிவு. பின்னணியில் சுனில் சேத்ரி

எம். குமரேசன்

இந்தியக் கால்பந்து அணியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியக் குடியுரிமையை அந்த நாட்டு கால்பந்து வீரர் ரேயன் வில்லியம்ஸ் துறந்துள்ளார்.

இந்தியக் கால்பந்து அணி நவம்பர் 18ம் தேதி ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்கான வீரர்கள் பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பெங்களுரு எப்.சி அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரரான ரேயன் வில்லியம்ஸ் இந்திய தேசிய அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.

இந்திய தேசிய அணியில் இடம் பெறும் வீரர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கக் கூடாது. முற்றிலும், இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டுமென்பது விதி. இதையடுத்து அவர் ஆஸ்திரேலிய குடியுரிமையைத் துறந்துள்ளார். பெர்த்தில் பிறந்தவர் ரேயன் வில்லியம்ஸ். தற்போது 32 வயதான இவரின் தாயார் மும்பையில் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் U-20, U-23 மற்றும் சீனியர் அளவில் ரேயன் விளையாடி வந்தார். இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணிகளான புல்ஹாம் மற்றும் போர்ட்ஸ்மவுத் அணிகளுக்காகவும் இவர் ஆடியுள்ளார்.

இது குறித்து இந்தியக் கால்பந்து சங்கத் தலைவர் கல்யாண் சவுபே கூறுகையில், ''கடந்த மே மாதத்தில் கொல்கத்தாவில் நடந்த பயிற்சி முகாமின் போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரிதான் என்னிடத்தில் ரேயன் வில்லியம்ஸ் இந்திய அணிக்காக விளையாடும் ஆசையில் உள்ளார். இதற்காக, தனது ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை துறக்கவும் முடிவு செய்துள்ளார் என்று கூறினார். உடனே, நான் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினேன். விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சூக் மாண்ட்யாவை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினேன். அவரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் பேசி ஏழு மாதத்தில் ரேயன் வில்லியம்சுக்கு இந்திய பாஸ்போர்ட் கிடைக்க உதவினார். மற்றபடி, இந்தியன் பாஸ்போர்ட் எடுக்க சில ஆண்டுகள் ஆகலாம். உள்துறை மற்றும் வெளித்துறை அமைச்சகம் தொடர்புடைய விஷயம் என்பதால் , கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. ரேயன் வில்லியம்சுக்கு விரைவாக பாஸ்போர்ட் கிடைக்க நடவடிக்கை எடுத்த விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நன்றி' என்றார் .

Sunil Chhetri

இந்திய தேசிய அணிக்காக விளையாடுவதற்கு தாய்நாட்டுக் குடியுரிமையை துறந்த இரண்டாவது கால்பந்து வீரர் ரேயன் வில்லியம்ஸ். முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டு ஜப்பான் வீரர் இசூமி அரட்டா இந்திய அணிக்காக விளையாட ஜப்பானிய குடியுரிமையைத் துறந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, ஐ.எஸ்.எல். லீக்கில் கேரளா பிளாஸடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ள அப்னித் பாரதி என்ற வீரர் தற்போது பொலிவிய நாட்டின் முதல் டிவிஷன் கிளப்பான ABB- க்கு விளையாடி வருகிறார். இவர் இந்தியக் குடியுரிமை பெற்றவர். இந்திய தேசிய அணிக்காக இவரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வீரர்களின் வருகையைடுத்து , இந்திய அணி மிகுந்த பலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி, அணியின் தேவையைக் கருத்தில் கொண்டு மீண்டும் சர்வதேச ஆட்டத்தில் விளையாட முடிவு செய்திருந்தார். கடந்த மார்ச் மாதத்தில் இரு சர்வதேச ஆட்டங்களிலும் விளையாடினார். தற்போது, 40 வயதை கடந்து விட்ட அவரை இனியும் கஷ்டப்படுத்த இந்திய அணியின் பயிற்சியாளர் காலீத் ஜமில் விரும்பவில்லை. எனவே, இனி வரும் சர்வதேச ஆட்டங்களில் சுனில் சேத்ரி இல்லாமலேயே இந்திய அணி திட்டமிடப்படுகிறது. இதன்காரணமாக, வங்கதேச அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட ஆசிய தகுதிச் சுற்று போட்டிக்கான 23 வீரர்கள் அடங்கிய வீரர்களின் பட்டியலில் சுனில் சேத்ரியின் பெயர் இடம் பெறவில்லை.