ஜெமிமா ரோட்ரிகஸ்  
விளையாட்டு

மும்பை ஜிம்கானாவில் இருந்து ஜெமிமா நீக்கப்பட்டது ஏன்? #Jemimah

இப்போது, நாடே கொண்டாடி கொண்டிருக்கும் ஜெமிமா, மனதளவில் படாத பாடு படுத்தப்பட்டார் என்பது பலரும் அறியாதது.

எம். குமரேசன்

மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டவர் ஜெமிமா ரோட்ரிகஸ். போட்டி முடிந்ததும், தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் மனம் உடைந்து அழுதார் ஜெமிமா. வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட, கடந்த காலத்தில் தான் அனுபவித்த சொல்ல முடியாத மனப் போராட்டங்கள்தான் அவரின் கண்ணீருக்குக் காரணம். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு, 'இயேசுவை மனதில் சுமந்து இக்கட்டான இந்த இன்னிங்சை விளையாடினேன் ' என்கிற வார்த்தைதான் அவரின் வாயில் இருந்து உதிர்ந்தது. இப்படி, அவர் சொல்ல காரணம்... ஜெமிமா வலதுசாரிகளின் மதரீதியான தாக்குதலால் நிலைகுலைந்து போனதுததான் கடந்த கால வரலாறு.

தற்போது, 25 வயதாகும் ஜெமிமா ரோட்ரிகஸ் மும்பையை சேர்ந்த கிறிஸ்தவர். தந்தையின் பெயர் இவான் ரோட்ரிகஸ் . இவர்கள் பாந்திரா பகுதியில் வசித்து வருகின்றனர். ஜெமிமாவை பற்றி பலரும் அறிந்திரா மற்றொரு விஷயம், மும்பையின் புகழ் பெற்ற Khar Gymkhana-வில் கௌரவ உறுப்பினரான முதல் பெண் கிரிக்கெட்டர் ஆவார். கடந்த 2023ம் ஆண்டு ஜெமிமாவுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது. Khar Gymkhana என்பது மும்பையின் பழமையான ஜிம்கானாக்களுக்குள் ஒன்று. மும்பை மாகாணத்தின் முதல்வராக இருந்த பி.ஜி. கெர் என்பவரால் 1929ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

தந்தையுடன் ஜெமிமா

கிரிக்கெட் முதல் பில்லியார்ட்ஸ் வரை இங்கு விளையாட முடியும். உலகத்தரம் வாய்ந்த ஜிம் உள்ளது. ரொஸ்டாரன்ட்கள், பார் போன்றவையும் இங்கு உண்டு. பாந்திரா, ஜூகு பகுதியில் வசிக்கும் பாலிவுட் பிரபலங்கள் முதல் தொழிலதிபர்கள் வரை இங்கு உறுப்பினர்களாக இருப்பார்கள். Khar Gymkhana மெம்பர் என்று சொல்வதையும் கொளவரமாக கருதுவார்கள். இந்த ஜிம்கானாவில் அவ்வளவு எளிதாக உறுப்பினராகி விட முடியாது. ஆண்டுக் கட்டணம் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. ஆனாலும், ஆண்டுக்கு சில லட்சங்கள் வரை உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டியது இருக்கும். இத்தகைய பெருமை வாய்ந்தKhar Gymkhana, சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், ஜெமிமாவை தங்கள் ஜிம்கானாவின் கௌரவ உறுப்பினராக்கியது.

ஆனால், அடுத்த ஆண்டே ஜெமிமா சர்ச்சையில் சிக்கினார். காரணம் அவரின் தந்தை! ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிகஸ், மகளின் உறுப்பினர் உரிமையை பயன்படுத்தி மும்பை ஜிம்கானாவுக்குள் கிறிஸ்தவ கூட்டங்களை நடத்தியதாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டின. மாத மாற்றத்தில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதோடு, ஜெமிமா பங்கேற்ற கிறிஸ்தவக் கூட்டத்தின் பழைய வீடியோ ஒன்றையும் வலதுசாரி அமைப்புகள் இணையத்தில் பரவ விட்டன. சோசியல் மீடியாவில் ஜெமிமாவும் அவரின் தந்தையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இதனால்,ஜெமிமாவின் இமேஜூம் டேமேஜ் ஆனது. அவரின் தன்னம்பிக்கையும் குலைந்து போனது.

கார் ஜிம்கானா

தொடர்ந்து, Khar Gymkhana-வில் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போது, ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிகஸ் தன் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அத்தனையும் மறுத்தார். எனினும், ஜெமிமாவிடம் இருந்து ஜிம்கானாவின் கௌரவ உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. மனதளவில் மிகவும் சோர்ந்து போனார் ஜெமிமா. அதோடு, ஜெமிமா மிகச்சிறந்த கிடார் பிளேயர். கிறிஸ்தவப் பாடல்களை பாடுவதுடன் கிட்டாரையும் இசைப்பார். இதுவும், வலது சாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இப்படியெல்லாம் மனதளவில் நோகடிக்கப்பட்ட ஜெமிமா, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பிறகு, மனம் உடைந்து சொன்னதுதான் , 'இயேசுவை மனதில் வைத்து விளையாடினேன்' என்ற வார்த்தை.