வாழ்க்கை ஒவ்வொவருவரையும் எங்கெங்கோ அடித்துச் சென்றிருக்கும். பைலட் ஆக ஆசைப்பட்டிருப்பார்; லோகோ பைலட் ஆகியிருப்பார். டாக்டர் கனவுடன் வாழும் இளைஞர் கம்ப்யூட்டர் என்ஜீனியராகியிருப்பார். ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த வாழ்க்கையை மகிழ்வுடன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் பல பேர்களால் நிறைந்ததுதான் இந்த உலகம். அப்படிப்பட்ட ஒருவர்தான் இன்று கேரளாவில் பேசு பொருளாகியுள்ளார்.
காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சபினா. 9 வயது முதலே தடை தாண்டும் ஓட்டத்தில் ஆர்வம். தடை தாண்டும் வீராங்கனையாகி பள்ளி, பல்கலைக்கழக அளவில் பல சாதனைகளை படைத்தவர். ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் துறவறம் மேற்கொண்டு கன்னியாஸ்திரியாக மாறினார். பின்னர் 1993ம் ஆண்டு காசர்கோட்டில் இருந்து வயநாட்டுக்கு குடி பெயர்ந்தார். அங்கே, மானந்தவாடியிலுள்ள Dwarka Provincial House’s worship centre மையத்தில் வசிக்கிறார். இங்கு பழங்குடியின மக்களுக்கு சேவை செய்ததோடு, மானந்தவாடி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகிறார்.
அதோடு, தனது தடை தாண்டும் பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார். தற்போது, கேரளவில் மாஸ்டர்ஸ் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 55 வயது பிரிவுக்கான பெண்கள் தடை தாண்டும் ஓட்டத்தில் சபினா பங்கேற்றார். காலில் ஸ்பைஸ் இல்லாமல், வெறும் காலுடன் கன்னியாஸ்திரி உடையிலேயே ஓடிய அவர் தங்கப்பதக்கமும் வென்று அசத்தினார்.
இது குறித்து சிஸ்டர் சபினா கூறுகையில், "அடுத்த ஆண்டு எனது ஆசிரியர் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அதற்கு முன்னதாக ஒரு மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்க விரும்பினேன். இந்தப் போட்டியில் பங்கேற்று எனது ஆசையை நிறைவெற்றிக் கொண்டேன்" என்கிறார்.
சிஸ்டர் சபினா தடை தாண்டும் போட்டியில் ஓடும் வீடியோ கேரளாவில் வைரலானது. கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது எக்ஸ் பக்கத்தில் , அந்த வீடியோவைப் பதிவிட்டு, "மன உறுதியின் அடையாளம்" என்று பாராட்டியுள்ளார். மேலும், "சகோதரி சபீனாவின் வெற்றி வயதோ, சூழ்நிலையோ எந்த லட்சியத்துக்கும தடையாக இல்லை என்பதை நிரூபிக்கிறது. அவரது அர்ப்பணிப்பு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு உத்வேகம். 55 வயதான போதிலும், கன்னியாஸ்திரி உடையில் போட்டியில் பங்கேற்ற சகோதரி சபீனாவுக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்றும் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
சிஸ்டர் சபினா போலவே கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மற்றொரு கன்னியாஸ்திரி புதிய சாதனை படைத்தார். அது என்ன சாதனை?
கேரள கத்தோலிக்க சிரிய மலபார் சபையில் கன்னியாஸ்திரியாக பணியாற்றி வருபவர் டாக்டர். ஜீன் ஜோஸ். இவருக்கு ரோசம்மா என்ற பெயரும் உண்டு. ரோசம்மா எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு பெங்களுரிலுள்ள புனித . ஜான் மருத்துவக் கல்லூரியில் அனஸ்தீஷியா பிரிவில் மேற்பட்டம் பெற்றவர். பின்னர், கன்னியாஸ்திரியாக மாறி விட்டார். இடுக்கி மாவட்டம் மறையூரிலுள்ள கத்தோலிக்க சிரியன் மலபார் டயோசிஸ் நடத்தி வரும் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி கொண்டிருந்தார். மருத்துவத்துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
அனுபவமிக்க ரோசம்மாவை அரசுத் துறை டாக்டராக பணியில் அமர்த்த கேரள அரசு விரும்பியது. இதையடுத்து, ரோசம்மா மற்றும் சபை நிர்வாகிகளிடம் பேசிய அரசுத்துறை அதிகாரிகள் அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பனா மருத்துவமனையில் டாக்டராக நியமித்தனர். தற்போது, அவர் பதவி உயர்வு பெற்று மறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டதும் இதுவே முதன்முறை.