இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் 30 வயதிலேயே மூட்டு வலி வந்து விடுகிறது. பலரும் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். மாரடைப்பு, சுகர், பிரஷர் போன்ற நோய்களெல்லாம் இளவயதிலேயே வருவது அதிகரித்துள்ளது. இதற்கு உணவுப் பழக்க வழக்கத்தில் இருந்து, பல்வேறு காரணிகள் காரணமாக அமைந்து விடுகிறது.
அதே வேளையில் சிலர் அட்டகாசமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு 80 வயதை கடந்தும் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு, முறையான உடற்பயிற்சியும் நல்ல உணவுப் பழக்க வழக்கங்ளும்தான் காரணம் என்றால் மிகையல்ல. பாடி பில்டிங் என்றதும் பலருக்கும் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்தான் நினைவுக்கு வரும். 78 வயதிலும் மனிதர் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறாரே என்று அவரைப் பார்த்து வியப்போம். அதே போலவே அமெரிக்காவில் இன்னொருவர் ஃபேமஸாகி வருகிறார். 100 வயதில் பாடி பில்டிங்கில் ஈடுபடும் அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.
சமீபத்தில், புளோரிடாவில் நேஷனல் ஜிம் அசோசியேஷன் நடத்திய ஆணழகன் போட்டியில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் ஒருவர் பட்டம் வென்று அசத்தினார். அப்போது, அவருக்கு வயது 100 வருடங்கள், நான்கு மாதங்கள். அவர் பெயர் Andrew Bostinto. அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த அவர் 12 வயதிலேயே ஜிம்முக்குள் நுழைந்தவர். இன்று வரை ஜிம் பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார். 17 வயதில் மாடலிங்கில் ஈடுபட்டவர், பின்னர் அமெரிக்க ராணுவத்தில் 29 ஆண்டுகள் பணி புரிந்தார். இரண்டாம் உலகப் போரிலும் பங்கேற்ற பெருமைக்குரியவர்.
1977ம் ஆண்டு மிஸ்டர் சீனியர் அமெரிக்கா போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றபோது , அவருக்கு வயது 52. இப்போதும் வாரத்துக்கு ஆறு நாட்கள் ஜிம்முக்கு செல்கிறார். ஆனால் முன்பைப் போல கடினமான பயிற்சிகளை மேற்கொள்வதில்லை. எளிய பயிற்சிகளுடன் முடித்துக் கொள்கிறார் . இவருக்கும் ஜிம்முக்குமான பந்தம் 87 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து Muscle & Fitness என்ற இதழுக்கு ஆண்ட்ரூ பாஸ்டினோ அளித்த பேட்டியில் கூறுகையில், "மக்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். நாம் நெகடிவான விஷயங்களுக்கு மனதில் இடம் கொடுக்கக் கூடாது. நமக்குப் பிடித்ததை செய்ய வேண்டும். ஒழுக்கமும் முறையான உணவுப் பழக்கங்களும் அவசியம். நான் மது குடித்ததில்லை. சிகரெட் புகைத்தது இல்லை. எனக்குப் பிடித்ததை செய்து கொண்டிருக்கிறேன். என்னிடத்தில் சிலர் "எப்போது ஜிம்முக்கு போவதை நிறுத்துவீர்கள்?" என்று கேட்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒரு பதிலைத்தான் சொல்வேன். 'எனது மூச்சு நின்று விட்டால், நான் ஜிம்முக்கு போக மாட்டேன்' என்று கூறுவேன். இள வயதில் நல்ல புரோட்டீன் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வேன். தினமும் 15 கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிப்பேன். இப்போது, வயதுக்கேற்ற வகையில், உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளேன் "என்கிறார்.
அமெரிக்காவில் நேஷனல் ஜிம் அசோசியேஷனைத் தோற்றுவித்தவரும் இவர்தான். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் இளைஞர்களுக்காகவே இந்த சங்கத்தை தோற்றுவித்து அவர் நடத்தி வருகிறார். இது லாப நோக்கமில்லாத தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். இந்த அமைப்பில் முன்னாள் பாடி பில்டர்கள், உடற்பயிற்சி பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நியூட்ரிசன் ஸ்பெஷலிஸ்டுகள் என பலரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது, உலகின் வயதான பாடி பில்டர் ஆண்ட்ரூ பாக்ஸ்டினோதான். வயது என்பது வெறும் எண்கள்தான் என்று சொல்வார்கள். அது இவரது விஷயத்தில் முற்றிலும் உண்மை!