கடந்த உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் கத்தாரில் நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் அர்ஜெண்டினா சாம்பியன் ஆனது. 2026ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளில் ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெறுகிறது. அணிகள் எண்ணிக்கை 32ல் இருந்து 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 16 மைதானங்களில் 104 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் மட்டும் இந்த தொடருக்கு நேரடியாக நடைபெறும். மற்றபடி, நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா உள்ளிட்ட பிற அணிகள் தகுதி சுற்று ஆட்டங்களில் பங்கேற்றுதான் உலகக் கோப்பைக்கு முன்னேற முடியும். தற்போது, தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவு கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை , 28 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. அணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பல குட்டி அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. ஆசியக் கண்டத்தில் இருந்து உஸ்பெஸ்கிஸ்தான், ஜோர்டான் போன்ற அணிகளும் முதன் முறையாக உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறியுள்ளன.
இதற்கிடையே , உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனையை FIFA (Fédération Internationale de Football Association - International Federation of Association Football) இந்த மாதத் தொடக்கத்தில் தொடங்கியிருந்தது. இந்தத் தொடருக்கு மொத்தம் 71 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 212 நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் டிக்கெட்டுகளை ஆர்வமாக வாங்கியுள்ளனர். முதல் கட்ட விற்பனைக்கு 45 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் , லாட்டரி மூலம் தேர்வு செய்யப்பட்டு 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
இந்த தொடரில் ஜூன் 12ம் தேதி அமெரிக்க அணி ஆடும் ஆட்டத்துக்கு 50 ஆயிரம் முதல் 2.4 லட்சம் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு ஒரு டிக்கெட்டின் அடிப்படை விலை 8.4 லட்சமாகவும் அதிகபட்ச விலை 57 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆட்டம் ஜூலை 19ம் தேதி நியூஜெர்சியிலுள்ள ஈஸ்ட் ரூதர்போர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 82,500 பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.
உலகக் கோப்பைத் தொடருக்கான அடுத்தக் கட்ட டிக்கெட் விற்பனை அக்டோபர் 27ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2026ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை தற்போதே அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளின் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் ரசிகர்களும் டிக்கெட்டுகளை அதிகளவில் வாங்குகின்றனர்.
மேலும், தகுதிச் சுற்றுகள் அனைத்தும் முடிந்த பிறகு, உலகக் கோப்பை தொடருக்காக அட்டவணை டிசம்பர் 5ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். அதன்பின் அதிக டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து டிக்கெட்டுகள் வழங்கப்படும் '' என்று கூறப்பட்டுள்ளது.