Asia Cup and Mr. Mohsin Naqvi Asiancrucketcouncil
விளையாட்டு

Come and Collect - அசைந்து கொடுக்காத மோஷின் நக்வி

கோப்பையை இந்திய அணி எப்போது வேண்டுமானாலும் என் அலுவலகத்துக்கு வந்து என்னிடத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

எம். குமரேசன்

சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்ந்து நடந்து முடிந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்வியிடம் இருந்து இந்திய வீரர்கள் கோப்பையை பெற மறுத்தனர். இதையடுத்து, துபாய் ஸ்டேடியம் அருகேயுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்துக்கு கோப்பையை மோஷின் நக்வி எடுத்து சென்று விட்டார். இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமல் தாய்நாடும் திரும்பி விட்டனர்.

இந்த நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் , பிசிசிஐ அதிகாரிகளிடத்தில் தனது நடத்தைக்காக மோஷின் நக்வி மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த கூட்டத்தில் பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து ராஜீச் சுக்லா கலந்து கொண்டார். அப்போது, இந்திய கேப்டனிடம் கோப்பையை வழங்காதது குறித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அவர்களிடத்தில் பேசிய மோஷின் நக்வி , கோப்பையை தன் கையால்தான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். எனினும், இது தொடர்பாக இறுதி முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை பிசிசிஐ நிச்சயமாக ஐ.சி.சி கவனத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் மோஷின் நக்வி கூறியுள்ளதாவது, "ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்கிற ரீதியில் கோப்பையை இந்திய அணியிடம் வழங்கத் தயாராக இருந்தேன். அவர்கள்தான் பெற மறுத்து விட்டனர். இப்போதும், கோப்பையை வழங்க நான் தயாராகவே உள்ளேன். எனது அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து என்னிடத்தில் இருந்து இந்திய அணி கோப்பையைப் பெற்றுக் கொள்ளலாம். நான் எந்த தவறும் செய்யவில்லை. பி.சி.சி.ஐ அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் இந்த விவகாரம் குறித்து "விளையாட்டுக்குள் அரசியல் நுழைவது நல்லதல்ல. அது வீரர்களின் மனநிலையை பாதித்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.