துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட்டின் சூப்பர் சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேற்ற மீண்டும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான 74 ரன்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டியின் போதும், இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதோடு, அடிக்கடி மைதானத்தில் இரு அணி வீரர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. நடுவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைக்க வேண்டியது இருந்தது.
இந்த ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷாகிப்சாதா பர்கான் 10வது ஓவரில் அக்ஷார் பட்டேல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து அரை சதத்தை கடந்தார். அவர், அரை சதம் அடித்ததும், பேட்டை துப்பாக்கியால் சுடுவது போல செய்கை செய்து இந்திய ரசிகர்களை கடுப்பேற்றினார். பர்கானின் இந்த செய்கையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அதே போல, பீல்டிங் சமயத்தில் எல்லைக்கோட்டு அருகே நின்றிருந்த பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுப், பஹால்காம் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்த போது, 6 இந்தியp போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறி, அடிக்கடி கைகளால் 6 என்று சைகை காட்டிக் கொண்டிருந்தார். இந்திய வீரர்களையும் வார்த்தைகளால் சீண்டிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஹாரிஸ் ரவுஃப் போர் விமானம் போல சைகை செய்தும் காட்டினார்.
இந்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற்ற பிறகு, சுப்மன் கில் - அபிஷேக் ஆகிய பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களது 'X' பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டளர். சுப்மன் கில், "செயல் பேசும், வார்த்தைகள் அல்ல" (Game speaks, not words.) என்று பதிவிட்டிருந்தார். அபிஷேக் ஷர்மா, போட்டியின் படங்களை பகிர்ந்து, "நீங்கள் பேசுங்கள், நாங்கள் ஜெயிக்கிறோம்" (You talk, we win) என்று பதிவிட்டார். இந்த இரு பதிவுகளையும் இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அறிவு குறைவானவர்கள் - அஸ்வின் காட்டம்
இதற்கிடையே, பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்க மறுத்ததற்காக இந்திய அணி கேப்டன் சூரிய குமார் யாதவை பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப், "பன்றி" என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக சாடிய அஸ்வின், யூட்யூபில் பேசும்போது கூறுகையில்,' நான் ஒரு விஷயத்தை வாழ்க்கை முழுவதும் பின்பற்றுகிறேன் . உங்களை விட அறிவில் குறைவானவர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய கீழ் நிலைக்கு உங்களை இழுத்துs சென்று விடுவார்கள். அவர்கள் உங்களுடைய லெவலுக்கு வரவே மாட்டார்கள். உங்களுக்கு அறிவு உள்ளது. எனவே அதன்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய நிலைக்கு சென்று நீங்களும் வாக்குவாதம் செய்ய வேண்டும் என்று கருதினால் நீங்கள் தோற்றுப் போய் விடுவீர்கள். எனவே அவர்களின் நிலைக்கு நீங்கள் செல்ல வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்து. கிரிக்கெட் என்பதுதான் நமது பவர். நாம் கிரிக்கெட் உலகில் பலமான அணியாக உள்ளோம். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகிறோம்.கிரிக்கெட் உலகில் நாம் ஒரு சூப்பர் பவர் அதை மனதில் வைத்துக் கொண்டு முன்னேறி செல்வோம்' என்றார்.