இந்திய கிரிக்கெட் அணியின் ரோகித் சர்மா தனது எடையை 95 கிலோவில் இருந்து 75 கிலோவாக குறைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் உடல்வாகில் சற்று கூடுதல் எடையுடன் காணாப்படுபவர் ரோகித் சர்மா. இதனால், அடிக்கடி அவர் விமர்சனத்துக்குள்ளாவார். கடந்த மார்ச் மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது ரோகித் சர்மா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியிருந்தார். அதாவது, ரோகித் சர்மா உடல் எடையைக் குறைத்தாக வேண்டும். இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத ‘ஈர்ப்புத்திறன் குறைந்த ஒரு கேப்டன் ரோகித்' என்றும் அவர் குறைகூறியிருந்தார். சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக ஷாமா இப்படி , விமர்சித்ததால், சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவுறுத்தியதையடுத்து, ஷாமா முகமது தனது கருத்தை வாபஸ் பெற்றார். தற்போது, ஷாமாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் , தனது எடையை அதிரடியாகக் குறைத்துக் காட்டியுள்ளார் ஹிட்மேன்.
உண்மையில், 2025ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவின் பிட்னெஸ் பெரும் கேள்விக்குறியானது. தற்போது, பி.சி.சி.ஐ வீரர்களின் பிட்னெஸ் விஷயத்தில் கடுமையான தேர்வு முறையை பின்பற்றி வருகிறது. குறிப்பாக பிரான்கோ டெஸ்ட் எனப்படும் 1.2 கி.மீ தொலைவு கொண்ட ஓட்டத்தில் பாஸ் செய்யும் வீரர்களை மட்டுமே அணிக்கு தேர்வு செய்வோம் என்பதில் பி.சி.சி.ஐ உறுதியாக உள்ளது. இதனால், ரோகித் சர்மா தனது எடையை குறைத்தேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். முறையான உடற்பயிற்சி எடுத்ததுடன் தனக்கு பிடித்தமான வடபாவ் சாப்பிடுவதை அறவே நிறுத்தினார். வடபாவ் மட்டுமல்ல தால் ரைஸ், பட்டர் சிக்கன், பிரியாணி, கடல் உணவுகளும் ரோகித்துக்கு பிடித்தவை. ஆனால், அவர் உடல் உடையை குறைப்பதற்காக தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவதை அறவே நிறுத்திக் கொண்டார்.
அதோடு, உணவு முறையை முற்றிலும் மாற்றிக் கொண்டார். அதிகாலையில் ஆறு பதாம் பருப்புகள், முளை வைத்த பயிறுகள், பழரசம் போன்றவை எடுத்துக் கொண்டு ஜிம்மில் ஒர்க்கவுட் செய்ய தொடங்கினார். தொடர்ந்து பிரேக்ஃபாஸ்டாக ஓட்ஸ் , பழ ஜூஸ் சாப்பிட்டார். மதிய உணவுக்கு முன்னதாக இளநீர் எடுத்துக் கொண்டுள்ளார். வழக்கமாக,மதிய உணவாக கொஞ்சமே கொஞ்சம் தால் ரைஸ் மற்றும் உலர் பழங்களும் இவரது டயட்டாக இருந்துள்ளது. மாலையில் பலவிதமான பழங்களை அரைத்து ஜூசாக அருந்தியுள்ளார். இரவு பன்னீர், வெஜிடபிள்கள் உலர் பழங்களை டின்னராக சாப்பிட்டுள்ளார். இப்படி,பேலன்ஸ் டயட் உணவுகளும், தீவிர உடற்பயிற்சி , யோகா செய்ததன் காரணமாக ரோகித்தின் உடல் எடை 20 கிலோ குறைந்துள்ளது.
ரோகித்தின் உடல் எடைகுறைய அவரின் நெருங்கிய நண்பரான அபிஷேக் நய்யாரும் பல அறிவுரைகளையும் ஐடியாக்களையும் வழங்கியுள்ளார். விளைவாக, பிரான்கோ டெஸ்டில் அட்டகாசமாக பாஸாகியுள்ளார் ரோகித்.
கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா விளையாடவில்லை. 38 வயதான ரோகித் சர்மா டெஸ்ட், டி20 பார்மெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டதால், ஒருநாள் பார்மெட்டில் மட்டுமே ஆடும் நிலை உள்ளது. இந்திய அணிக்கு, அடுத்து அக்டோபரில்தான் ஒருநாள் தொடர் இருக்கிறது. அக்டோபர் 19ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது. இந்தத் தொடரின் போது, முற்றிலும் மாறுபட்ட ரோகித் சர்மாவை காணமுடியும் .