பெண்கள் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையான அனைத்து நடுவர்கள் பொறுப்பிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகும்.
2025ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. செப்டம்பர் 30ம் தேதி போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் முதன்முறையாக நடுவர் பொறுப்பில் அனைத்து நிலைகளிலும் பெண்களே பணியாற்ற போவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு பிர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டி மற்றும் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் பெண்களே முழுவதுமான நடுவர் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முழுமையாக பெண்களே நடுவர் பணியாற்ற போவது இதுவே முதன்முறை ஆகும்.
14 நடுவர்கள் கொண்ட குழுவில் லாரன் ஏஜன்பர்க், கேண்டாஸ் லா போர்டே, கிம் காட்டன், ஷாரா தாம்பனேவானா, ஷரிதா ஜாகீர் ஜெசி, கெர்ரியன் கிளாஸ்டே, ஜனனி, நிர்மலா பெரைரா,கிளையர் போலாசக், விரிந்தா ரதி, சூ ரெட்ஃபெர்ன், இலாயிஸ் ஷெரிடன், காயத்ரி வேணுகோபாலன், ஜாக்குலின் வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
போட்டி நடுவர்களாக ட்ரடி ஆண்டர்சன், ஷான்ட்ரா ஃபிரிட்ஸ், ஜி.எஸ். லட்சுமி, மிக்கேல் பெரைரா ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.
இது குறித்து ஐ.சி.சி தலைவர் ஜெய்ஷா கூறுகையில், "பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது. நடுவர்கள் குழுவில் பெண்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பது முக்கியமான மைல்கல் மட்டுமல்ல, கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்த ஐசிசி மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது.
எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கக்கூடிய அர்த்தமுள்ள முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளோம். பாலின பாகுபாடு இல்லாமல் கிரிகெட் விளையாட்டு இருப்பதை இது உலகுக்கு உணர்த்துகிறது. ஏராளமான பெண்களை கிரிக்கெட் பக்கம் இழுக்க இது உதவும் " என்றார்.
இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, இலங்கை ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. வரும் செப்டம்பர் 30ம் தேதி கவுகாத்தியில் நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையுடன் மோதுகிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடந்த ஆடவர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணி பங்கேற்க மறுத்து விட்டது. இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் அனைத்தும் துபாயில் நடந்தது. இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதால், இறுதிப் போட்டியும் துபாயில்தான் நடந்தது.
பாகிஸ்தானில் நடக்கும் ஐ.சி.சி தொடர்களில் இந்தியா பங்கேற்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புறக்கணிக்க முடிவு செய்தது. இதன் காரணமாகவே, இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மகளிர் அணியின் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன. ஒருவேளை , இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறினால், இறுதி ஆட்டமும் இலங்கையில்தான் நடைபெறும்.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஐ.சி.சியும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்காரணமாவே, இறுதிப் போட்டி நவம்பர் 2ம் தேதி நவி மும்பை அல்லது கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.