ஐ.பி.எல் தொடருக்கான முதல் சீசன் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் எளிதில் மறந்து விட முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. அது, ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த் மோதல் . இந்த தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஸ்ரீசாந்த்-தும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங்கும் ஆடினர்.
இந்த தொடரில் மொகாலியின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இதில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் ஸ்ரீசாந்துக்கும் - ஹர்பஜன் சிங்கிற்கும் இடையே திடீரென உரசல் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் திடீரென்று அறைந்தார் எனவும், துடித்துப் போன ஸ்ரீசாந்த் திகைத்து நின்று, களத்தில் அழத் தொடங்கினார் எனவும் அடுத்தநாள் செய்திகள் வந்தன.
இது போட்டியை நேரலையில் பார்த்த ரசிகர்களையும் இது கண்கலங்கச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஹர்பஜன் கன்னத்தில் அடித்த வீடியோ எங்கும் வெளி வராமல் ஐ.பி.எல் நிர்வாகத்தினரால் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து ஹர்பஜன் சிங்கிற்கு எஞ்சிய ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக மனம் திறந்து பேசிய ஹர்பஜன் சிங், 'ஸ்ரீசாந்துடன் நடந்த மோதல் சம்பவம் மிகவும் தவறான ஒன்று. என்னுடைய தவறால் சக வீரர் ஒருவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. என் கிரிக்கெட் வாழ்வில் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால் அது இதுதான். அதாவது , நான் களத்தில் ஸ்ரீசாந்தை நடத்திய விதம் தவறு. அதை நிச்சயம் மாற்றி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கவே கூடாது. பின்னர், ஒரு முறை நான் ஸ்ரீசாந்தின் மகளிடம் மிகவும் அன்போடு பேசிக்கொண்டிருந்தபோது. அவள் ‘நான் உங்களுடன் பேச விரும்பவில்லை. நீங்கள்தான் என் அப்பாவை அடித்தீர்கள்’ என்றாள். அந்த வார்த்தைகள் என் இதயத்தை நொறுக்கின. நான் கண்ணீரை அடக்க முடியாத நிலைக்குச் சென்றேன்.
என் மீதான ஶ்ரீசாந்தின் மகளின் அபிப்பிராயம் என்னவாக என்னை நிலைகுலையச் செய்தது. அவள் என்னை ஒரு கெட்ட மனிதனாகவே பார்க்கிறாளோ? ‘என் அப்பாவை அடித்தவன்’ என்றே நினைக்கிறாளோ?' என்று நான் மோசமான உணர்ந்தேன்.
இன்று வரை, அதை சரிசெய்ய முடியாமல் இருப்பதற்காக அவளிடம் மனமாற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவளது மாமா எப்போதும் அவளுடன் இருப்பார். அவரால் முடிந்த எந்த விதமான ஆதரவையும் கொடுப்பார் என்றும் அவள் நினைக்க வேண்டும். அதனால்தான் நான் அந்த அத்தியாயத்தை நீக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் நடந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது மீண்டும் பேசும் நிலை உருவாகியுள்ளது. இதற்குக் காரணம் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், லலித் மோடியுடன் சமீபத்தில் தனது Beyond 23 பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்த வீடியோவையும் லலித் மோடி வெளியிட்டார். அதில், போட்டி முடிந்ததும் கை குலுக்கச் சென்ற ஸ்ரீசாந்தை, ஹர்பஜன் சட்டென்று புறங்கையால் அடிக்கும் காட்சியும் சக வீரர்கள் இருவரையும் தடுத்து அழைத்து சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தன. இது குறித்து அந்த பாட்காஸ்டில் பேசிய லலித் மோடி, "போட்டி முடிந்து டெலிவிஷன் கேமராக்கள் அணைத்துவிட்ட நிலையில், என் உதவியாளர்களின் பாதுகாப்பு கேமராக்கள் இதைப் பதிவு செய்திருந்தது" என்று கூறியிருந்ர்தார். க்ளார்க்கின் பாட்காட்ஸில் அந்த வீடியோவையும் லலித் மோடி பகிர்ந்துள்ளார். சம்பவம் நடந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடியை பலரும் சாடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, தன் ட்விட்டர் பக்கத்தில் "இந்த சம்பவத்தை வெகு சிலரே நேரில் பார்த்தோம். அது, IPL முதல் ஆண்டு என்பதால் இந்த வீடியோ வெளியாவது அந்தத் தொடருக்கு நல்லதல்ல என்பதால், வெளிவராது என்பதாக வாக்கும் கொடுத்திருந்தோம். இத்தனை ஆண்டுகள் கழித்து இது வெளியாவது ஆச்சர்யமாக உள்ளது" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதிலும் சரி, மேலும் இந்த வீடியோ வெளியானது குறித்தும் சரி, ரசிகர்கள் இருவேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஒன்று, 'இருவருமே மறந்து விட்ட கசப்பான ஒரு சம்பவத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து பற்றவைத்திருக்க வேண்டியதில்லை. மோசமானவை, மறக்கப்பட்டு அழிக்கப்படுவதே எப்போதும் நல்லது" என்று ஒரு சாராரும், "அப்போதே இதை வெளியிடாதது ஏன்? கிரிக்கெட் எனும் ஜெண்டில்மேன் விளையாட்டில் இப்படி எத்தனை விஷயங்கள் மறைக்கப்பட்டதோ?" என்று ஒரு சாராரும் விவாதித்து வருகின்றனர்.