harish rana and aruna  
செய்திகள்

அருணா ஷான்பாக்.. 42 ஆண்டுகள் படுத்த படுக்கையாக.. உருகவைக்கும் உண்மைக்கதை! #ArunaShanbaug

கடந்த 13ம் தேதி காசியாபாத்திலுள்ள ஹாரீஸ் ராணாவின் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் , நண்பர்கள் சூழ்ந்து நிற்க, அவருக்கு இறுதியாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க 'குட்பை' சொன்னார்கள்.

எம். குமரேசன்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஹாரீஸ் ராணா பஞ்சாப் பல்கலையில் படித்து வந்தார். தற்போது வயது 31. கடந்த 2013ம் ஆண்டு, தான் தங்கியிருந்த கட்டடத்தின் 4வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில், ஹாரீசின் மூளையில் பலத்த அடிபட்டது. முதுகுத்தண்டு வடமும் பாதிக்கப்பட்டது. இதனால், உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் மட்டுமே வாழ வேண்டிய சூழலுக்குத் அந்த இளைஞர் தள்ளப்பட்டார். குழாய் வழியாகவே அவருக்கு உணவு செலுத்தப்பட்டது. மகனின் நிலையையும், மருத்துவச் செலவுகளையும் சமாளிக்க முடியாமல்,ஹாரீஸ் ராணாவின் தந்தை அசோக் ராணா தனது மகனை கருணைக்கொலை செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகினார். 4 மருத்துவர்கள் அடங்கிய குழு ஹாரீசின் உடல் நிலையை பரிசோதித்து, 'இனி நினைவு திரும்ப வாய்ப்பே இல்லை' என்று உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்தது. இதையடுத்து, நீதிபதிகள் ஜே.பி. பர்டிவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹாரீசை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து, அவருக்குக் குழாய் வழியாக வழங்கப்படும் உணவு நிறுத்தப்படும். அதோடு, செயற்கை சுவாசமும் நிறுத்தப்பட்டு விடும். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் படுக்கையிலேயே கழித்த , ஒரு இளைஞனின் உயிர் கண்ணியத்துடன் விடுவிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் இத்தகைய முடிவெடுத்தது, இந்தியாவில் இதுவே முதன்முறை.

தொடர்ந்து, கடந்த 13ம் தேதி காசியாபாத்திலுள்ள ஹாரீஸ் ராணாவின் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் , நண்பர்கள் சூழ்ந்து நிற்க, அவருக்கு இறுதியாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க 'குட்பை' சொன்னார்கள். அவரின் தலையை பிரம்மகுமாரி அமைப்பைச் சேர்ந்த சகோதரி வருடிக் கொடுக்க, பிரார்த்தனை செய்யப்பட்டது. அவரின் நெற்றியில் குங்குமமிடப்பட்டது. அப்போது, 'எல்லோரையும் மன்னித்து விடு... அமைதியாக செல்ல வேண்டிய நேரமிது' என்று அவரிடத்தில் சொல்லப்பட்டது. இது தொடர்பான உருக்கமான வீடியோ வெளியாகி பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது. இனி, காசியாபாத்தில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹாரீஸ் ராணா மாற்றப்படுவார். அங்கு, மருத்துவர்கள் அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள உயிர்காக்கும் கருவிகளை அகற்றுவார்கள். சில விநாடிகளில் இந்த உலகை விட்டு கண்ணியத்துடன் பிரிந்து செல்வார் ஹாரீஸ் ராணா.

ஹாரீஸ் ராணாவின் இறுதி நிமிடங்கள்

ஹாரீஸ் ராணாவுக்கு முன்னதாகவே, இந்தியாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலேயே இருந்த நர்ஸ் ஒருவரையும் கருணைக்கொலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணின் பெயர் அருணா ஷான்பாக். மும்பையின் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் இளம் நர்ஸாக பணியாற்றினார். 1973ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி கிங் எட்வர்ட் மருத்துவமனையின் பேஸ்மெண்டிலேயே அந்த கொடூரச்சம்பவம் நடந்தது. பணிக்கு வந்த அருணாவை வார்டு உதவியாளர் ஷோகன்லால் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது, நாய்ச்சங்கிலியை கொண்டு அருணாவின் கழுத்தை இறுக்கியதில் கழுத்துப் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மூளைக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் நரம்புகள் செயல் இழந்தன. இதனால், அருணாவின் மூளை பாதிக்கப்பட்டது. ஆனால், முற்றிலும் செயல் இழந்து விடவில்லை.

இந்த கொடூரச் சம்பவத்துக்கு பிறகு, அருணாவால் நடக்க முடியாது, அமர முடியாது , பேசவும் முடியாது, யாரையும் அடையாளம் காணவும் முடியாது. அவரால், மூச்சு மட்டுமே விட முடியும். ஆனால், இத்தகைய மோசமான சூழலில், அருணாவை கிங் எட்வர்ட் மருத்துவமனை கைவிட்டு விடவில்லை. தங்கள் மருத்துவமனையில் தனியாக வார்டு ஒதுக்கி அவரைப் பராமரித்தது. சக நர்ஸ்கள் அவரை ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டனர். ஓராண்டு ஈராண்டு இல்லை. 42 ஆண்டுகள் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அருணா பராமரிக்கப்ட்டார்.

கடந்த 2011ம் ஆண்டு பிரபல எழுத்தாளர் பிங்கி விரானி, ''அருணா ஷான்பாக், அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். எனவே, கண்ணியத்துடன் அவரை கருணைக்கொலை செய்ய வேண்டும் ''என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. மருத்துவர்கள், மதத் தலைவர்கள், சட்டநிபுணர்கள் அருணா ஷான்பாக்கை கருணைக் கொலை செய்ய ஆதரவளித்தனர். ஆனால், கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அவரைப் பராமரித்து வந்த, சக நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, உச்சநீதிமன்றம் அருணா ஷான்பாக்கின் உடல் நிலையை ஆராய மருத்துவக்குழுவை நியமித்தது. இந்தக் குழு , ''அருணாவால் இனிமேல் படுக்கையில்தான் வாழ முடியும். அதே வேளையில், அவரின் உடல் நிலை சீராக உள்ளது. மூளைச்சாவு அடையவில்லை '' என்று அறிக்கை அளித்தது. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுத்தது. அருணாவை பராமரிக்கும் சக ஊழியர்களின் எதிர்ப்பை சுட்டிக் காட்டி , அவருக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் கருவிகளின் ஒத்துழைப்பை நிறுத்த மறுத்து விட்டது.

பின்னர், 2015ம் ஆண்டு மே 18ம் தேதி அருணா ஷான்பாக் நிமோனியா காரணமாக இயற்கையாகவே உயிரிழந்தார். கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் அவர் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் படுக்கையிலேயே இருந்தார். மருத்துவமனையின் அத்தனை ஊழியர்களுக்கும் அவர் ஒரு தேவதையாகவே தெரிந்தார். இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் படுக்கையில் உயிர்வாழ்ந்த ஒரே ஜீவன் அருணா ஷான்பாக்தான் என்பது குறிப்பிடத்தக்கது.