Ndiaga Diagne and Savitha  X page
செய்திகள்

அமெரிக்காவில் தமிழ் மாணவி பலி: அதிர்ச்சித் தகவல்கள்!

படிப்பை முடிக்கும் முன்னரே சவீதாவுக்கு வேலையும் கிடைத்துள்ளது. ஆனால், அதற்குள் செனகல் நாட்டு மனிதர் எமனாக வந்து விட்டார்.

எம். குமரேசன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் மார்ச் 2ம் தேதி மதுபான பார் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சவிதா சண்முகசுந்தரம் (21) என்ற மாணவி உயிரிழந்த சம்பவத்தில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 53 வயதான நிடியாகா டியாக்னே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசார் இவரை சுட்டுக் கொன்றனர். இவர், செனகல் நாட்டைச் சேர்ந்தவர். நிடியாகா டியாக்னே அணிந்திருந்த உடையில் ஈரானியக் கொடி வடிவமைப்பும் "அல்லாஹ்வின் சொத்து" என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டின் உச்சபட்சத் தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக, ஆஸ்டின் நகர போலீசார் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். செய்தியாளர்களிடத்தில் அவர்கள் கூறுகையில்,''நிடியாகா டியாக்னே கடந்த 2000ம் ஆண்டு டூரிஸ்ட் விசாவில் அமெரிக்கா வந்துள்ளார். அமெரிக்கப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், நிரந்தர அமெரிக்கக் குடியுரிமையை பெற்றுள்ளார். கடந்த மார்ச் 2ம் தேதிக்கு முன்பு வரை, ஆஸ்டின் நகர போலீசார் மற்றும் எப்.பி.ஐ அமைப்பின் கண்காணிப்பில் இவர் இல்லை.

எனினும், மனதளவில் இவர் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என்று நம்புகிறோம். 2001ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை கார் விபத்துகளை ஏற்படுத்தியதற்காக 4 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்படுத்திய விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளார்.

Russ Finney

பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான பதிவுகளை இவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரான் நாட்டுக்கு ஆதரவு இஸ்லாம் ஆதரவு பதிவுகளையும் வெளியிட்டு வந்துள்ளார். எனினும், இப்படி ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்த போவது குறித்து அவர் எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை'' என்று தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தமிழக மாணவி சவீதா டெக்சாஸ் பல்கலையில் பொருளாதாரம், நிர்வாகம், மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக இரட்டை பட்ட படிப்பு படித்து வந்தார்.'' பல்கலையில் மிகச்சிறந்த மாணவி ... படிப்பில் கெட்டி. எங்கள் பல்கலைக்கழகத்தின் சூப்பர்ஸ்டார் '' என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உருக்கத்துடன் கூறியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்க இருந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். படிப்பை முடிக்கும் முன்னரே, அமெரிக்காவிலேயே அவருக்கு வேலையும் கிடைத்து விட்டதாம். ஆனால், அதற்குள் செனகல் நாட்டு மனிதர் வடிவில் எமனைச் சந்திக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டு விட்டார். சவீதாவுடன் சேர்ந்து ரைடர் ஹாரிங்டன்(19) ஜார்ஜ் பெடர்ஸன் (30) ஆகிய இரு மாணவர்களும் பலியாகியுள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சவிதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் அவரின் உடலை மிக விரைவாக தமிழகம் கொண்டு வரவும் ஏற்பாடு செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். ''தீவிரவாதிகளுக்கு எதிரான பயணத்தை விடாப்பிடியாக தொடருவோம்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Condolence poster for Savitha Shan

மாணவி சவீதா மரணம் தொடர்பாக Federation of Tamil Sangams of North America வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ''ஆஸ்டின் நகரில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள செல்வி. சவிதா ஷான் (எ) சவிதா சண்முகசுந்தரம் அவர்களின் குடும்பத்தாருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA), பேரவையின் உறுப்பினர் அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அளவிட முடியாத துயரமும் ஈடுசெய்ய முடியாத இழப்பும் நேர்ந்துள்ள இக்கணத்தில், துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்காக உலகத் தமிழ் சமூகத்தின் வேண்டுதல்களையும், ஆதரவையும் கேட்டுக் கொள்கிறோம். செல்வி சவிதா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பவர்கள். குறிப்பாக, ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தில் அவர்கள் தொடர்ந்து தன்னார்வத் தொண்டாற்றி வருகிறார்கள். இளம் தலைவராகவும் சாதனையாளராகவும் திகழ்ந்த செல்வி சவிதா, அமெரிக்காவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான The University of Texas at Austin-இல் இரட்டை இளங்கலைப் பட்டப்படிப்புகளை பயின்று, கல்வியில் சிறப்புடன் முன்னேறி வந்தார்.

இத்துயரக் காலத்தில் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக மாணவர் சமூகத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நேரத்தில் சமூகத்தினர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் தங்களைச் சுற்றியுள்ள சூழலை கவனமாக கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .