ronaldo's private jet  Spectrum FM Costa Almeria
செய்திகள்

ஈரான் கடும் தாக்குதல் ; ரொனால்டோ நிலை என்ன?

போர் தீவிரமடைந்த காரணத்தினால், சவுதி கால்பந்து அணிகளில் விளையாடி வரும் பிரபல வீரர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

எம். குமரேசன்

ஈரான் நாட்டின் உச்சபட்சத் தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது நேற்று ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில், தூதரகம் சேதமடைந்தது. தாக்குதலில் உயிரிழப்பு இல்லை என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அனைத்துத் தளங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால், போர் இப்போதைக்கு முடிவடையாது எனத் தெரிகிறது.

இந்த நிலையில், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ சவுதி அரேபியாவை விட்டு வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. இவர், சவுதி அரேபிய கால்பந்துத் தொடரில் அல் நாஸர் அணிக்காக விளையாடி வந்தார். ரியாத் நகரில்தான் ரொனால்டோ குடும்பத்துடன் வசித்து வந்தார். சவுதி அரேபியாவை போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், அனைத்து போட்டிகளையும் ஆசிய கால்பந்து சங்கம் ஒத்தி வைத்துள்ளது. போர் தீவிரமடைந்துள்ளதால், ரொனால்டோ தனது 750 கோடி மதிப்புள்ள ஜெட் விமானத்தில் குடும்பத்துடன் ரியாத்தில் இருந்து புறப்பட்டு மாட்ரிட் நகருக்கு நேற்று சென்றடைந்ததாக கூறப்படுகிறது.

அதேவேளையில், கடந்த திங்கட்கிழமை ரொனால்டோ தனது அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், செவ்வாய்கிழமை இரவுதான் அவர் சவுதியில் இருந்து புறப்பட்டதாக தெரிகிறது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரரும் ரொனால்டோவின் நண்பருமான ரியோ ஃபெர்டினாண்ட் கூறுகையில், ''ஏவுகணைத் தாக்குதல்கள் ரொனால்டோவின் குடும்பத்தினரை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இதனால், அவர் சவுதியை விட்டு வெளியேற முடிவு எடுத்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

ronoldo family in Riyadh

கடந்த 2015ம் ஆண்டு வரை, கல்ஃப்ஸ்ட்ரீம் G200 ரக விமானத்தை ரொனால்டோ வைத்திருந்தார். இந்த விமானத்தை 18 மில்லியன் யூரோக்களுக்கு விற்று விட்டு , 70 மில்லியன் யூரோ மதிப்புள்ள புதிய பாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் 6500 ஜெட் ரக விமானத்தை அவர் வாங்கினார்.

கருப்பு நிறத்திலுள்ள இந்த விமானத்தில் அவரின் படத்துடன் கூடிய சி.ஆர். 7 என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். 15 பயணிகள் வரை பயணிக்க முடியும். வீடு போலவே இந்த விமானத்தில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. ரொனால்டோவின் பார்ட்னர் ஜார்ஜியானா ரோட்ரிகஸ் அவரின் 5 குழந்தைகள் எங்கு சென்றாலும் இந்த தனி விமானத்தில் பயணிப்பது வழக்கம். சவுதி அரேபியாவுக்கு ரொனால்டோ குடும்பம் வசிப்பிடத்தை மாற்றிய பிறகு, முதன்முறையாக 'உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது' போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்தே, திடீரென்று முடிவெடுத்து சவுதியை விட்டு. ரொனால்டோ குடும்பத்துடன் வெளியேறி விட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் கரீம் பென்ஜமாவும் தற்போது சவுதி லீக்கில் அல் ஹிலால் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில், ஆப்ரிக்க கோப்பையை வென்ற, செனகல் கேப்டன் சாடியோ மானேவும் சவுதி அணியான அல் நாஸர் அணிக்காகதான் விளையாடி வருகிறார். இவர்கள் இருவரும் இன்னும் சவுதியை விட்டு வெளியேறவில்லை. போர் மேலும் தீவிரமடைந்தால், சவுதியை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இந்த இரு வீரர்களும் இருப்பதாக தெரிகிறது.

சவுதி அரேபியா மட்டுமல்ல பல வளைகுடா நாடுகளில் முக்கிய விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் சாலை வழியாக 500 கி.மீ தொலைவு பயணித்து ஓமன் நாட்டுக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியா உள்ளிட்ட 12 வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறி விட வேண்டுமென்று அந்த நாடும் வேண்டுகோள் விடுத்துள்ளது.