Comrade R Nalla Kannu AI GENERATED
செய்திகள்

தோழர் ஆர். நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்! #RIPNallaKannu

தமிழக மற்றும் இந்திய அரசியல் வரலாற்றில் எளிமை, நேர்மை மற்றும் தியாகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவும், கம்யூனிச சித்தாந்தத்திற்காகவும் அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவர், நல்லகண்ணு அவர்கள்!

ஆதி தாமிரா

’1947க்கு முன்னால, எல்லோருக்கும் ஓட்டு கிடையாது. பத்து சதவீதம் ஆளுங்கதான் ஓட்டுப் போட முடியும். ஒண்ணு நிலம் இருக்கணும், அல்லது பி.ஏ, எம்.ஏ படிச்சிருந்தாத்தான் ஓட்டு. இன்னிக்கே முதல் தலைமுறை பட்டதாரியாக நாம இவ்வளவு சிரமப் படவேண்டியிருக்குது. அன்னிக்கு, 1947ல ஓட்டு போடணும்னா காலேஜ் போயிருக்கணுமாம், அவனுக்குதான் ஓட்டு. நினைச்சிப் பாருங்க, எத்தனை பேரால காலேஜ் போயிருக்கமுடியும்? சுதந்திரத்துப் பின்னால, அம்பேத்கர் வந்து, சாதி, மத வித்தியாசமில்லாம, ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாம, ஆண், பெண் வித்தியாசமில்லாம, கோடீஸ்வரனுக்கும், குடிசையிலிருப்பவனுக்கும் வித்தியாசமில்லாம எல்லோருக்கும் ஓட்டுரிமை உண்டுனு சொன்னப்பிறகுதான் எல்லோருக்கும் வாக்குரிமை கிடைச்சது. அதனால, சுதந்திரத்தின் பெருமை என்னான்னு நாம தெரிஞ்சிக்கணும்’ –தோழர் ஆர். நல்லகண்ணு.

தோழர் நல்லகண்ணு அவர்கள், தமிழக மற்றும் இந்திய அரசியல் வரலாற்றில் எளிமை, நேர்மை மற்றும் தியாகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவும், கம்யூனிச சித்தாந்தத்திற்காகவும் அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தொடங்கப்பட்ட அதே நாளில் (1925 டிசம்பர் 26) ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நல்லகண்ணு பிறந்தது, நம்மை வியக்க வைக்கும் தற்செயல் நிகழ்வாக அமைந்திருக்கிறது. பள்ளிப் பருவத்திலேயே காந்தி மற்றும் நேருவின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தீவிரமாக இறங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டவர். அந்தச் சிறு வயதிலேயே ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்களைக் கண்டு மனம் வாடியவர். காரல் மார்க்ஸின் புத்தகங்களை வாசித்ததாலும், தோழர் ஜீவா போன்றவர்களின் உரைகளாலும் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர்.

1948-ல் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது, 24 வயதில் அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது. அந்தப் பொழுதுகளில் தமிழகமெங்கும் நடந்து சென்றே விவசாயிகளைப் போராட்டத்துக்காகத் திரட்டினார். ஆனால், 1949-ல் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் வாங்க, அவரது மீசையை சிகரெட் நெருப்பால் பொசுக்கிச் சித்திரவதை செய்தனர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் தனது வாழ்நாள் முழுவதும் மீசை வைத்துக்கொள்ளவில்லை எனும் உறுதியேற்றவர். காவல்துறையினர் அவரது கால்களைக் கட்டிப்போட்டு பூட்ஸ் காலால் மிதித்துத் துன்புறுத்தியும், அவர் சக தோழர்கள் குறித்த ஒரு ரகசியத்தையும் வெளியிடவில்லை. அதற்காக அவர் ஏழு ஆண்டுகள் கடும் சிறைவாசத்தை அனுபவித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நில உரிமையாளர்கள் வழங்கிய சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடூரமான தண்டனைகளை எதிர்த்துப் போராடி அதை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றினார். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடந்தபோது, அதைத் தடுக்கச் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து, நீதிமன்றத்தில் நேரிடையாக வாதாடி ஆற்றை மீட்டெடுத்தவர் தோழர் நல்லகண்ணு.

AI Representation of Comrade R Nalla Kannu

தேர்தல்களில் தோல்வியுற்றாலும், மக்கள் பணி செய்ய, பதவி தேவையில்லை என்பதை நிரூபித்த மகத்தான தலைவர் அவர். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, சிறுபான்மையினரின் ஆதரவைத் தவிர்த்தால் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்ட போதும், "சிறுபான்மையினரைக் கைவிட்டுப் பெறும் வெற்றி தேவையில்லை" என்பதில் உறுதியாக நின்றவர். சாதிக்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுத்தார் தோழர். சாதி வெறியர்களால் தனது மாமனார் கொல்லப்பட்டபோதும், அமைதி காத்து சாதிக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற ஊராட்சிகளில் தலித் மக்களுக்கான தேர்தல் உரிமையைப் பெற்றுத் தரப் போராடினார்.

தமிழக அரசு அவருக்கு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதின் 10 லட்ச ரூபாயை அப்படியே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். அதேபோல் அம்பேத்கர் விருதுத் தொகையான 1 லட்சம், அவரது ஓய்வுகாலத் தேவைக்காகக் கட்சி வழங்கிய 1 கோடி நிதி என அனைத்தையும், விவசாயச் சங்கங்களுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்குமே வழங்கியவர் தோழர் நல்லகண்ணு. கட்சியின் மாநிலச் செயலாளராகவே இருந்தபோதும், கார் வைத்துக்கொள்ளாமல் பஸ்ஸிலும், ஆட்டோவிலும் பயணிப்பதையே விரும்பினார். கட்சித் தோழர்கள் அவருக்குப் பரிசாக வழங்கிய காரையும் கட்சிக்கே கொடுத்தவர்.

தோழர் நல்லகண்ணு போன்ற தலைவர்கள் வாழ்ந்த காலம் இது என்பது ஆச்சரியகரமான ஒன்று. ஒரு சாதாரண கவுன்சிலர் கூட ஆடம்பரக் கார்களில் செல்லும் இன்றைய சூழலில், கடைசி வரை பஸ் ஸ்டாண்டில் பையைத் தலையில் வைத்துப் படுத்துறங்கும் எளிமையைக் கொண்டிருந்தவர் தோழர்.

இறுதி வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோழர் நல்லகண்ணு, தனது 100-வது வயதில் 25.02.2026 அன்று மறைந்தார். இறந்த பிறகும் மாணவர்களின் படிப்புக்காகத் தனது உடலைத் தானமாக வழங்கியிருக்கிறார். மக்களை நேசித்த, புகழைத் தவிர்த்த, எளிமையின் சிகரமாக வாழ்ந்த நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை, இன்றைய அரசியல்வாதிகளுக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அவரது எளிமையும், அவர் விதைத்த போராட்ட உணர்வும் என்றும் நம்முள் நிலைத்திருக்கும்.

சென்று வாருங்கள் காம்ரேட்! செவ்வணக்கம்!