மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானின் காராகம் (Karakum) பாலைவனத்தின் நடுவே, அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ஒரு பிரம்மாண்டமான தீப்பிழம்பு எரிந்து கொண்டே இருக்கிறது. "நரகத்தின் வாசல்" (The Door to Hell) என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்தப் பள்ளம், ஒரு விசித்திரமான புவியியல் அதிசயமாகும். Darvaza gas crater என்கிறார்கள் அதை.
1971-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் காலத்தில், இப்பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதை அறிந்த பொறியாளர்கள் நிலத்தைத் தோண்டினார்கள். அப்போது எதிர்பாராத விதமாக தரைப்பகுதி உள்வாங்கி, சுமார் 230 அடி அகலமும் 65 அடி ஆழமும் கொண்ட ஒரு பெரிய பள்ளம் உருவானது.
அதிலிருந்து வெளியேறிய நச்சுத்தன்மை கொண்ட மீத்தேன் வாயு சுற்றுப்புறக் கிராமங்களுக்குப் பரவுவதைத் தடுக்க, விஞ்ஞானிகள் ஒரு முடிவை எடுத்தனர். அந்த வாயுவை எரித்துத் தீர்த்துவிட்டால் சில வாரங்களில் அணைந்துவிடும் என்று கருதி அதற்குத் தீ வைத்தனர். ஆனால், அவர்களின் கணக்கு தவறியது. பூமிக்கடியில் இருந்த எரிவாயுவின் அளவு கற்பனைக்கு எட்டாததாக இருந்ததால், அன்று வைக்கப்பட்ட தீ இன்றுவரை, அதாவது 50 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தர்வாசா பள்ளம் அமைந்துள்ள அமு தர்யா (Amu Darya) பகுதி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் மிக்க ஒரு இடமாகும். பூமிக்கடியில் உள்ள பாறை அடுக்குகளில் தேங்கியிருக்கும் மீத்தேன் வாயு, தொடர்ந்து வெளியேறி தீப்பிழம்புகளுக்கு எரிபொருளாக மாறுகிறது. இரவு நேரங்களில் இந்தப் பள்ளம் ஒட்டுமொத்த பாலைவனத்தையும் ஒளிரச் செய்யும் காட்சி, பார்ப்பதற்கு ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இது கேட்பதற்கு ஒரு சுவாரசியமான செய்தியாக இருந்தாலும், இந்தத் தொடர் எரிதல் சில சுற்றுச்சூழல் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
மீத்தேன் ஒரு வலுவான பசுமை இல்ல வாயுவாகும், வளிமண்டலத்தில் இதன் கலப்பு புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகிறது. தொடர்ந்து மீத்தேன் எரிவதால் உண்டாகும் கார்பன் டை ஆக்சைடும், புகையும், ரசாயனங்களும் அப்பகுதியின் காற்றின் தரத்தைப் பாதிக்கின்றன. அந்தப்பகுதி, பாலைவனத்தில் வாழும் சில விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சியும் இதனால் பாதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, துர்க்மெனிஸ்தான் அரசாங்கம் அவ்வப்போது இந்தப் பள்ளத்தை மூடலாமா அல்லது எரிவாயுவை முறையாகப் பிரித்தெடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இன்றைய சமூகவலைத்தள காலத்தில் இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளதால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.