கலை என்பது வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, அது ஒரு நிலத்தின் வரலாற்றையும், சமூகத்தின் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் சான்றாகும். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது கேரளாவின் கொச்சியில் நடைபெறும் 'கொச்சி-முசிறி பைனாலே' (Kochi-Muziris Biennale) எனும் சர்வதேச ஓவியக்கண்காட்சி. இது உலகெங்கிலுமிருந்து வருகை தரும் நூற்றுக்கணக்கான, சமகால ஓவியர்களின் நவீன ஓவியப் படைப்புகளைக் காட்சிப் படுத்துவதற்கான களமாகவும், லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கான சங்கமமாகவும் அமைந்திருக்கிறது.
2012ல் தொடங்கிய இந்தக் கண்காட்சி நிகழ்வு, ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன் 6வது நிகழ்வு கடந்த டிசம்பர் 12ம் தேதி தொடங்கி, 2026 மார்ச் இறுதி வரை நடக்கிறது. இத்தனை ஆண்டுகளில், இது இந்தியாவின் மிகப்பெரிய ஓவியக்கலைக் கண்காட்சி நிகழ்வாகவும், உலகின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகவும் வளர்ந்திருக்கிறது. பொதுவாகவே, கேரளாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியரை நாம் அதிகம் பார்க்க முடியும். இந்நிகழ்வையொட்டி வெளிநாட்டினர் இன்னும் ஏகமாகக் குவிந்து வருகின்றனர்.
இப்பெருவிழா, ஓவியங்களைத் தாண்டியும், இசை நிகழ்வுகள், பயிலரங்குகள், கலைசார் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், திரையிடல்கள் என கலை மற்றும் கலைசார் நிகழ்வுகளையும் உள்ளடங்கியிருக்கிறது.
ஒரு நவீன நகரத்தின் விளிம்பில், சிதிலமடைந்த பழைய வணிகக் கிடங்குகளுக்கு நடுவே ஏன் இவ்வளவு பெரிய சர்வதேச கலைத்திருவிழா நடைபெறுகிறது என்பது நமக்கெழும் அடிப்படையான, ஆச்சரியமான ஒரு கேள்வி! அதற்கான விடை, கொச்சியின் தனித்துவமான வரலாற்றில் ஒளிந்துள்ளது.
ஃபோர்ட் கொச்சி மற்றும் மட்டஞ்சேரி பகுதிகள் வெறும் நிலப்பரப்புகள் மட்டுமே அல்ல; அவை காலத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் ஆவணங்கள். 1341-ல் கேரள மாநிலத்தில், பெரியாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு கொச்சித் துறைமுகம் இயற்கையாகவே உருவானதாக நம்பப்படுகிறது. அதே வெள்ளம், பழம்பெரும் வணிக நகரமான 'முசிறி'யை அழித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர், பல நூற்றாண்டுகளாக நடந்த மிளகு மற்றும் மசாலாப் பொருட்களின் வணிகம், உலகெங்கிலும் இருந்து பல்வேறு கலாச்சாரங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அதனால், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் எனப் பல்வேறு காலனித்துவ ஆதிக்கங்களைச் சந்தித்த இந்த மண், இன்று அதன் பாதிப்புகளோடு கூடிய பண்பாட்டுச் சங்கமமாக காலத்தின் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது.
ஃபோர்ட் கொச்சியின் சிறப்பம்சம் அங்குள்ள இந்தச் சமூகப் பிணைப்புதான். பல தலைமுறைகளாகப் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களின் உணவு முறை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பேணிப் பாதுகாத்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த இடத்தின் ஒவ்வொரு கட்டிடமும், அதன் நிறமும் ஒரு கதையைச் சொல்கிறது. இந்தத் தன்மையும், கொச்சியின் பாரம்பரியமான இடங்களும்தான் இந்தத் திருவிழாவுக்கென ஒரு தனித்துவமான குணாதிசயத்தைத் தருகின்றன என்று கூறுகிறார் இந்தக் கலைத்திருவிழாவின் இணை நிறுவனரும், பிரபல ஓவியருமான போஸ் கிருஷ்ணமாச்சாரி.
நவீனத்துவம் அல்லது உலகளாவிய பார்வை என்பது ஐரோப்பியர்களால்தான் நமக்குக் கிடைத்தது என்ற ஒரு பொதுவான கருத்து உண்டு. ஆனால், கொச்சி-முசிறி பைனாலே இந்த பிம்பத்தை உடைக்கிறது. மலபார் கடற்கரை எப்போதும் வெளிநாட்டினரை வரவேற்கும் வாயிலாகத்தான் இருந்திருக்கிறது. ஐரோப்பிய வருகைக்கு முன்பே, இங்கே கலைகளும், கருத்துப் பரிமாற்றங்களும், பல்வேறு நம்பிக்கைகளும் பரவி இருந்தன என்பதை இந்தக் இந்நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.
கொச்சி-முசிறி பைனாலே என்பது ஒரு கண்காட்சி மட்டுமல்ல, அது 'கிரியேட்டிவ் சிட்டி மேக்கிங்' (Creative City Making) எனப்படும் ஒரு செயல்முறை. மக்களையும் சமூகத்தையும் கலையின் மூலம் ஒன்றிணைத்து, சிதிலமடைந்த இடங்களுக்கு உயிர் கொடுக்கும் புது முயற்சி. இவ்வாறான சிறப்புகளுடன், கேரளாவின் கலை, வரலாறு மற்றும் பன்முகத்தன்மையின் சங்கமமாகவும், புதிய இந்தியாவின் அடையாளமாகவும் திகழ்கிறது கொச்சி - முசிறி பைனாலே!