Vachathi - The Long March For Justice Comrade Talkies -
செய்திகள்

வாச்சாத்தி: அதிகாரத்தின் கோரப்பற்கள்! - ஆவணப்படம் #Vachathi

அதுதான் அதிகாரம்! அதனால்தான் நம்மை ஆளும் அதிகாரத்தை யாரிடம் தரவேண்டும் என்பதை நாம் சிந்தித்து, முடிவெடுக்க வேண்டியிருக்கிறது என்று சொல்கிறோம், அதற்காகப் போராடுகிறோம்!

ஆதி தாமிரா

"எங்க கட்சியோட செங்கொடி, என்னிக்கு எங்க ஊருக்குள்ள பறக்க ஆரம்பிச்சதோ, அன்னிலிருந்து ஒரு போலீஸ், ஒரு பாரஸ்ட் எவனுமே எங்கூர்ல கால் வைக்கிறதில்ல!” - வாச்சாத்தியின் குரலாக ஒலிக்கிறது அந்தப் பெண்ணின் குரல்!

தமிழக வரலாற்றில் மறக்கவே முடியாத, இருண்ட பக்கங்களுள் ஒன்று 1992-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் நடந்த வன்கொடுமை நிகழ்வு. 'காம்ரேட் டாக்கீஸ்' தயாரித்துள்ள "வாச்சாத்தி: நீதிக்கான நெடும் பயணம்" (Vachathi: Long March to Justice) என்ற ஆவணப்படம், அரசு அதிகாரிகளாலேயே, ஒரு கிராமத்து மக்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும், அந்த வலிகளையும், அதற்கு எதிராக கம்யூனிஸ்ட் இயக்கம் அந்த மக்களோடு இணைந்து முன்னெடுத்த 30 ஆண்டுகால சட்டப் போராட்டத்தையும் மீண்டும் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

1991-92 காலகட்டத்தில், சந்தன மரக் கடத்தலைத் தடுப்பதாகக் கூறி வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்கள் சந்தன மரங்களை வெட்டுவதாகக் குற்றம் சாட்டி, ஏற்கனவே ஏறத்தாழ வாச்சாத்தியின் ஆண்கள் அனைவருமே சிறைக்காவலில் இருந்த நிலையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அக்கிராமத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். வீடுகள் இடிக்கப்பட்டன, கால்நடைகள் கொல்லப்பட்டன, சாப்பிடும் தட்டு கூட நசுக்கப்பட்டது, வாழ்வாதாரங்கள் சீரழிக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதை நிகழ்த்தியது எந்த வெளிநாட்டினரும் இல்லை. மதம், சாதி, பொருளாதாரம் என்ற எந்தத் தத்துவார்த்தப் பின்னணிக் காரணமும் இதிலில்லை. அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகம். என்னிடம் அதிகாரம் இருக்கிறது, அவ்வளவுதான், வேறு காரணம் தேவையில்லை… நான் உன்னைக் கொல்வேன், உன்னைப் பாலியல் வன்புணர்வு செய்வேன், உன் உணவில் மண்ணைப் போட்டு உன்னைச் சாப்பிடச் சொல்வேன், நீ தண்ணீர் குடிக்கும் கிணற்றில் கழிவு எண்ணையையும், இறந்து போன விலங்குகளின் மாமிசத்துண்டுகளையும் போடுவேன்! 

எப்படி இதை ஒரு மனிதனால், தன் சக மனிதனுக்குச் செய்ய முடிகிறது?

அதுதான் அதிகாரம்! அதனால்தான் நம்மை ஆளும் அதிகாரத்தை யாரிடம் தரவேண்டும் என்பதை நாம் சிந்தித்து, முடிவெடுக்க வேண்டியிருக்கிறது என்று சொல்கிறோம், அதற்காகப் போராடுகிறோம்!

இந்தத் துயரமான நிகழ்வைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் காடுகளிலும், பாறை இடுக்குகளிலும் தஞ்சம் புகுந்தனர். நடந்த நிகழ்வுகள் வெளியே தெரியவே 3 வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. இப்படி ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பில்லை என்று நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம். அரசுக்கோ, எதிர்க்கட்சிகளுக்கோ, பத்திரிகைகளுக்கோ கூட தெரியவில்லை. 30 ஆண்டு காலமாக அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக நின்று, சட்டப்போராட்டத்தை நிகழ்த்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்களே கூட முதலில் இதை நம்பவில்லை. விசயங்கள் தெரிய வந்த பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) இன்றைய மாநிலச் செயலாளர் தோழர் ப. சண்முகம், தோழர் டில்லிபாபு, தோழர் பாஷா ஜான், தோழர் அண்ணாமலை உள்ளிட்டோர், அன்றைய தினங்களில் அக்கிராமத்திற்குச் சென்று, மக்களை ஒன்றிணைத்துப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அதே கிராம மக்கள்தான் கொஞ்ச காலத்துக்கு முன்னால் நடந்த தேர்தலில், ’ஆளும் கட்சியின் கோட்டை எங்கள் கிராமம்’ என்று சொல்லி கம்யூனிஸ்ட் தோழர்களை ஓட்டுக் கேட்கக்கூட ஊருக்குள் வரக்கூடாது என்று விரட்டியடித்தவர்கள் என்பது கூடுதல் செய்தி. அதே மக்கள், அவர்கள் ஊருக்குள் வருவதற்கே, ’இந்தச் செங்கொடி உங்களைக் காக்கும்’ என்ற நம்பிக்கையை தோழர்கள் ஏற்படுத்த வேண்டியிருந்தது விநோதமான முரண். அதன் பின்னரே அந்த மக்கள் மீண்டும் ஊருக்குள் வந்தனர்.

Mr. Kamal Haasan with the Vachathi survivors

அன்றைய ஆளும் அரசு இச்சம்பவத்தை மொத்தமாக மூடி மறைக்க முயன்றது. சட்டமன்றத்தில் வாச்சாத்தியில் எதுவுமே நடக்கவில்லை என்று அமைச்சர்கள் சொன்னார்கள். குறிப்பாக, அப்போதைய ஓர் அமைச்சர், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த கம்யூனிஸ்ட் தோழர்கள் சண்முகம் மற்றும் அண்ணாமலை ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டியதாக ஓர் அதிர்ச்சியான தகவலும் ஆவணப்படத்தில் பகிரப்பட்டுள்ளது.

ஆட்சிமாற்றம் நிகழ்ந்த பின்னரும், நீதி கிடைக்கவில்லை. அரசு, அதன் அதிகார வர்க்கத்தைக் காப்பாற்றவே முயன்றிருக்கிறது. அதனால், இந்த வழக்கு மிக நீண்ட காலமாக நடந்திருக்கிறது. இந்த வழக்கை நடத்துவதற்குத் தேவையான நிதியை கம்யூனிஸ்ட் தோழர்கள் மக்களிடமே திரட்டியிருக்கிறார்கள். பேருந்து நிலையங்களிலும் தெருக்களிலும் உண்டியல் ஏந்தி மக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமானிய மக்கள் வழங்கிய அந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நிதியே இந்த வரலாற்றுப் போராட்டத்தைத் தொய்வின்றி நடத்த உதவியிருக்கிறது.

குற்றவாளிகளை அடையாளம் காட்டும் 'Identification Parade' மிகவும் சவாலானதாக இருந்திருக்கிறது. பல்லாண்டுகளுக்குப் பிறகும் பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றவாளிகள் தங்கள் தோற்றத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டு (மீசையை எடுத்தோ, மொட்டை அடித்தோ) வந்தபோதும், மிரட்டப்பட்ட போதும் தைரியமாக நின்று அவர்களைத் துல்லியமாக அடையாளம் காட்டியிருக்கிறார்கள். ஒரு நிரபராதியைக் கூட அவர்கள் தவறாகக் கை காட்டவில்லை என்பது அவர்களின் நேர்மையையும், உறுதியையும் காட்டியது என்று குற்றவாளிகளுக்காக ஆஜரான அரசுத் தரப்பு வக்கீலே, தோழர்களிடம் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார்.

முக்கியமான கொடுமைகளை விவரிக்கும் போதுகூட கலங்காத தோழர் சண்முகம், ஓரிடத்தில் கண்கள் பனிக்கக் கலங்கிவிட்டார். ’அப்போது போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவராக (CITU) இருந்த தோழர் சவுந்தரராஜன், ஊழியர்களிடமிருந்து ஒவ்வொரு ரூபாயாக வாங்கிச் சேர்த்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒரு லாரி நிறைய வாங்கிவந்த பிளாஸ்டிக் குடங்களையும், அலுமினியப் பாத்திரங்களையும் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு, கையில் மிச்சமிருந்த ஐயாயிரம் ரூபாயைக் தன்னிடம் கொடுத்து, ‘வழக்கு நிதிக்காக வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்’ என்று நடந்ததை நினைவுகூரும் போது சண்முகம் வார்த்தைகள் வெளிப்படாமல் திணறிப்போனார்.

இது ஒரு சாதாரண வழக்கல்ல, அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகச் சாமானியப் பெண்கள் நடத்திய போராட்டம்! ஒற்றுமையும், உறுதியும் இருந்தால், எப்பேர்ப்பட்ட அதிகாரத்தையும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியும் என்பது அந்தப் பெண்கள் நமக்குச் சொல்லும் பாடம். ஓர் அரசியல் இயக்கம், மக்களின் துயரத்தில் எப்படித் துணை நிற்க வேண்டும் என்பதற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய வாச்சாத்திப் போராட்டம் ஒரு சிறந்த பாடம். இந்த ஆவணப்படத்துக்குப் பின்னால் இயங்கியுள்ள அத்தனைத் தோழர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.