Kim Jong with his Daughter igiheofficial
செய்திகள்

வடகொரியாவின் அடுத்த அதிபர்? #northkorea #Kim Jong Un

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது காலத்துக்கு பிறகு, தனது மகளை வட கொரிய அதிபராக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம். குமரேசன்

வடகொரியா உலகில் தனிமையாக்கப்பட்ட ஒரு நாடு. கடுமையாக சட்டத்திட்டங்கள் கொண்ட நாடு. ஏழ்மையில் உழன்றாலும் தங்கள் தலைவரை தெய்வமாக கொண்டாடும் மக்கள் நிறைந்த பூமி. தன்னைத்தானே தனிமையாக்கிக் கொண்ட இந்த நாட்டுக்குள் வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேவேளையில், ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அதனால், ரஷ்யர்களுக்கு மட்டுமே இந்த நாட்டுக்கு சுற்றுலாப்பயணிகளாக சென்று வர அனுமதி உண்டு. பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து சில சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. வட கொரிய பயணத்தின் போது, மிகுந்த கட்டுப்பாட்டுடன் சுற்றுலாப்பயணிகள் நடந்த கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணத்தின் அட்டவணையை வடகொரிய அதிகாரிகள் வழங்குவார்கள். அதன்படி, வழிக்காட்டிகள் வடகொரிய நாட்டை ரஷ்ய பயணிகளுக்கு சுற்றிக் காட்டுவார்கள். அவர்கள் சுற்றிக்காட்டும் இடம் தவிர வேறெங்கும் போக அனுமதி இல்லை. அந்த அட்டவணையில் குறிப்பிடப்படும் விதிமுறைகள், வழிமுறைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும். இவைதான் அந்த நாட்டின் நடைமுறை.

வடகொரியாவின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். அனுகுண்டுகளைக் கூட பட்டாசு போல சோதித்துப் பார்க்கும் சர்வாதிகாரி. இதனால், பக்கத்து நாடான தென்கொரியாவுக்கு எப்போதும் வட கொரியா மீது ஒரு கண் உண்டு. தென்கொரிய உளவுத்துறைக்கு வட கொரியாவை உளவு பார்ப்பதுதான் உலகத்திலேயே முதன்மையான வேலை. 'வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன்னுக்கு உடல் நலம் சரியில்லை. விரைவில் இறந்து விடுவார் ' என்றெல்லாம் வதந்திகளை அவ்வப்போது தென்கொரிய உளவுத்துறை பரப்பி விடும். ஆனால், அதே வேளையில், கிம் ஜாங் உன் தனது பிரத்யேக ரயிலில் ரஷ்யாவுக்கு பயணித்துக் கொண்டிருப்பார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் விமானத்தில் செல்வதே இல்லை. வெளிநாட்டுக்கு அவர் பயணப்பட்டார் என்றால் அது, ரஷ்யா அல்லது சீனாவாக மட்டும்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட, தென்கொரிய எல்லையில் வைத்துத்தான் வட கொரிய அதிபரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விசித்திரமான செயல்பாடு கொண்ட ஒரு அதிபர்தான் கிம் ஜாங் உன். தற்போது, கிம் ஜாங் உன் தனக்கு பிறகு, தனது மகளை வட கொரிய அதிபராக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வடகொரிய அதிபர் ஆவார் என்று சொல்லப்பட்டது. கிம் யோ ஜாங் தற்போது கொரிய தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவில் முக்கியப் பதவியை வகிக்கிறார். இவரும், தன் சகோதரருடன் அரசியல் பயணங்கள் மேற்கொள்வது உண்டு.

Daughter accompanying her father at a public function

இந்த நிலையில், தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான யோன்ஹாப் வெளியிட்டுள்ள 'வடகொரிய அதிபரின் பல அரசியல் நிகழ்ச்சிகளில் கிம் ஜூ ஏ கலந்து கொள்கிறார். கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிம் ஜாங் உன் சீனாவுக்கு சென்றிருந்தார். அப்போது, அவரது மகளும் உடன் சென்றார். பெய்ஜிங்கில் சீன மற்றும் ரஷ்ய தலைவர்களை கிம்ஜாங் உன் சந்தித்த போது அவரின் மகள் உடனிருந்தார். தனது மகளை அடுத்த அதிபராக்கும் நோக்கத்துடன்தான், கிம்ஜாங் உன் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கிம் ஜூ ஏவை உடன் அழைத்து செல்கிறார். அதுமட்டுமல்ல, ஏவுகணை சோதனைகள் நடத்தும் போதும் கிம் ஜாங் உன்னுடன் மகள் இருக்கிறார். வடகொரியாவின் மிகுந்த மதிப்புக்குரிய குழந்தை என்று கிம் ஜாங் உன் தனது மகளை பற்றி கருதுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கிம் ஜூ ஏவுக்கு 13 வயதே இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. கிம் ஜாங் உன் மற்றும் அவரது மனைவி ரி சோல் ஜூ தம்பதிக்கு ஒரு மூத்த மகனும் உண்டாம். ஆனால், பொது வெளியில் அவர் தென்பட்டதே இல்லையாம். கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்க கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ராட்மேன், வடகொரியாவுக்கு சென்றார். அப்போது, வடகொரிய அதிபர் கிம் ஜாங்கையும் சந்தித்தார். இந்தத் தருணத்தில், குழந்தையாக இருந்த கிம் ஜூ ஏ- வுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படம்தான் கிம் ஜூ ஏ- வை வெளி உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. ஒரு வேளை, கிம் ஜூ ஏ வட கொரிய அதிபராக்கப்பட்டால், அந்த நாட்டில் மாற்றங்கள் ஏற்படுமா என்றெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.