அயர்தல் என்றும் அணுகாதெனை உயர்தல் ஒன்றே ஒன்றும்! - வ.உ. சிதம்பரனார்
தமிழ்நாட்டு அரசின் சீரிய முயற்சியால் தமிழ் மின் நூலகம் (tamildigitallibrary.in) இப்போது மிகச் சிறப்புடன் பேணப்பட்டு வருகிறது.
இராபர்ட் கால்டுவெல், மு. வரதராசனார், பாரதிதாசனார், நாமக்கல் இராமலிங்கனார், சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, க. அன்பழகன், க.த. திருநாவுக்கரசு, செ.திவான், நெ.து.சுந்தர வடிவேலு, பொ.திருகூடசுந்தரனார், மா. ராசமாணிக்கனார், கா, அப்பாதுரை, ஞா. தேவநேசன் போன்ற எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்களின் ஆயிரக்கணக்கான நூல்கள், மின் நூலாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனையையும் PDF கோப்புகளாக நாம் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
தமிழ் மொழியியல் ஆய்வுகள், விடுதலை இயக்க வரலாறு, தமிழர் பண்பாடு, மொழிப்போர் இயக்க வரலாறு, திராவிட இயக்க வரலாறு முதலான தலைப்புகளில் நூல்கள் குவிக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இதழ்கள் தனியே சேகரிக்கப்பட்டுள்ளன.
கீழடி, ஆதிச்சநல்லூர் முதலான தொல்பழங்கால ஆய்வுத் தளங்களை முன்னிறுத்திய ஆவணங்கள், நூல்கள், புகைப்படங்கள் தனியே தொகுக்கப்பட்டுள்ளன. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் என பலருக்கும் விரிவான ஆதாரங்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
காலவோட்டத்தில் ஓலைச்சுவடிகளாகவும், காகிதங்களாகவும் அழிந்து போயிருக்கக்கூடிய பல அரிய நூல்கள் இப்போது டிஜிட்டல் வடிவில் நிலைத்திருக்கின்றன. பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், திருவாசகம், கலிங்கத்துப் பரணி, நாலடியார், முக்கூடற்பள்ளு முதலான நூற்றுக்கணக்கான தமிழ்க் களஞ்சியங்களின் ஓலைச்சுவடி வடிவம் அப்படியே ஸ்கேன் செய்யப்பட்டு காலத்தால் அழியாவண்ணம் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் தமிழர் நிலம், பண்பாடு சார்ந்த ஆய்வு மாணவர்கள் நூலகம், நூலகமாக ஏறி இறங்கி அரும்புத்தகங்களைக் கண்டடைவது, ஆய்வுத்தளங்கள் தோறும் சென்று வருவது என்று இத்தனைக் காலமாய் எத்தகையை சிரமமான பணியை மேற்கொண்டிருப்பார்கள் என்பதையும், இனி, அவற்றையெல்லாம் ஒருங்கே, ஒற்றைச் சொடுக்கில் அவர்களால் காணமுடியும் என்பது தமிழ் சார்ந்த ஆய்வுப்பணிகளில் எத்தகைய ஏற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
1930கள் மற்றும் 1965களில் நடந்த மொழிப்போர் குறித்த ஆவணங்கள், புத்தகங்கள், பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றுக்கென, தமிழ் மின் நூலகத்துடன் இணைந்த தனி இணையப்பக்கமே ‘உயிர் நிகர் தமிழ்’ (https://tamildigitallibrary.in/tamilpride) எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மொழிக்கான போராட்டங்கள் குறித்த செய்திகள் வெறும் வரலாறு மட்டுமே அல்ல, அவை நமது அடையாளத்தையும், சமூக மாற்றங்களையும் பதிவு செய்த காலக்கட்டங்கள். அந்தப் பதிவுகள் அனைத்தும் இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது எதிர்காலத் தலைமுறைகளுக்கான அத்தியாவசியமான வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை!