AI REPRESENTATION OF MOON CITY AI GENERATED
செய்திகள்

"நிலவில் குடியேற ரெடியா?" - எலன் மஸ்க்கின் திட்டம்தான் என்ன? #Spacex #Elonmusk #mooncity

இந்தக் காலக்கட்டத்தில் சீனாவும் அமெரிக்காவுக்கு நிகராக தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்றுள்ளதால், போட்டி கடுமையாகியுள்ளது. 'ஆர்ட்டெமிஸ் III'என்ற விண்கலத்தில் விண்வெளி வீரர்களை நிலவுக்கு மீண்டும் அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

எம். குமரேசன்

நிலவில் அமையவுள்ள Moon city - க்கு 10 நாட்களுக்கு ஒருமுறை ராக்கெட் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், நிலவில் தனி நகரத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 'செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை அமைப்பதை விட, நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவதே யதார்த்தமானது' என்று எக்ஸ் தளத்தில் எலன் மஸ்க் பதிவிட்டுள்ளார். மேலும், தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது, 'நிலவில் நகரம் அமைக்கும் பணியை பத்து ஆண்டுகளுக்குள் செய்து விட முடியும். செவ்வாய் கிரகத்தை விட நிலவு, பூமிக்கு மிக அருகில் இருப்பதால், அங்கு அடிக்கடி விண்கலங்களை அனுப்ப முடியும் . நிலவிற்குச் செல்ல வெறும் 2 நாட்கள் மட்டுமே ஆகும்; ஆனால் செவ்வாய்க்குச் செல்ல 6 மாதங்கள் தேவை . இதனால், நிலவில் நகரத்தை அமைக்க முன்னுரிமை அளிப்பட்டுள்ளது. நிலவிற்கு 10 நாட்களுக்கு ஒருமுறை விண்கலங்களை ஏவ முடியும். ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே விண்கலங்களை அனுப்ப முடியும். இதனால், தொழில்நுட்ப ரீதியாக நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவது மிகவும் எளிது என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கருதுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு பதிலாக நிலவுக்கு முன்னுரிமை அளிப்பதே புத்திசாலித்தனமானது. அதேவேளையில், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் தொடர்ந்து எங்கள் நிறுவனம் செயல்படுத்திக் கொண்டிருக்கும். நிலவில் நகரத்தை அமைக்க 10 ஆண்டுகள் ஆகுமென்றால், செவ்வாய் கிரகத்தில் நகரத்தை கட்டமைக்க 20 ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கும்'

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக , கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் அமையவுள்ள நகரத்துக்கு' டெர்மினஸ்' என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் எலன் மஸ்க் அறிவித்திருந்தார். கடந்த 2020ம் ஆண்டில், '2026ம் ஆண்டுக்குள் செவ்வாய்கிரகத்துக்கு மனிதர்கள் பயணம் மேற்கொள்ள முடியுமெ'ன்று அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Astronaut in Moon

விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சிகளில் அமெரிக்காவுக்கு சீனாவிடமிருந்து போட்டி அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பை எலன் மஸ்க் வெளியிட்டுள்ளார். இதுவரை, நிலவுக்கு 6 முறை மனிதர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. 1969ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அமெரிக்கரான நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முறையாக கால் பதித்தார். கடந்த 1972 ம் ஆண்டு அமெரிக்காவின் அப்பல்லோ- 17 தான் நிலவுக்கு கடைசியாக அனுப்பப்பட்ட விண்கலம். டிசம்பர் 7 ம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலத்தில் யூஜின் செர்னன், ஹாரிசன் ஷ்மிட், ரொனால்ட் எவான்ஸ் ஆகியோர் பயணம் செய்தனர். நிலவில் டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கில் தரை இறங்கி, 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிலவின் மேற்பகுதியில் 30 கி.மீ வரை ரோவரில் பயணம் செய்து 110 கிலோ பாறை மாதிரிகளை சேகரித்தனர். இந்தப் பயணத்திற்குப் பிறகு, மனிதர்கள் நிலவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகி விட்டது. இதுவரை , 12 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்று வந்துள்ளனர். தற்போது, நிலவுதான் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கான நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் சீனாவும் அமெரிக்காவுக்கு நிகராக தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்றுள்ளதால், போட்டி கடுமையாகியுள்ளது. 'ஆர்ட்டெமிஸ் III'என்ற விண்கலத்தில் விண்வெளி வீரர்களை நிலவுக்கு மீண்டும் அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.