Ishaan Tharoor Ishaan Tharoor X and WIkipedia
செய்திகள்

300 பேர் பணி நீக்கம்... அதிர்ச்சியில் வாஷிங்டன் போஸ்ட் ஊழியர்கள் #TheWashingtonPost

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வரலாற்றில் முதல் முறையாக 300 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அதில், இஷான் தரூரும் ஒருவர்.

எம். குமரேசன்

அமெரிக்காவின் மிகப் பெரிய பத்திரிகை நிறுவனங்களில் ஒன்று வாஷிங்டன் போஸ்ட். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து இந்த பத்திரிகை வெளியாகிறது. 1877ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகை அமெரிக்காவின் முகமாக பார்க்கப்பட்டது. புகழ் பெற்ற இந்தப் பத்திரிகை, தன் வரலாற்றில் முதன்முறையாக 300 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இந்த பத்திரிகையில்தான் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூர் சர்வதேச நிகழ்வுகள் குறித்து கட்டுரைகள் எழுதி வந்தார். தற்போது, இவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ள இஷான் தரூர், ''@washingtonpost-ல் இருந்து நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். பெரும்பாலான சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக என் நண்பர்களாகவும் சக ஊழியர்களாகவும் இருந்த அவர்களுக்காக எனது மனம் உடைந்து போனது. இவர்களுடன் பணியாற்றுவது மரியாதைக்குரிய விஷயமாகும்.

உலகத்தையும் , அமெரிக்காவின் பங்கையும் வாசகர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வகையில், 2017ம் ஆண்டு நான் WorldView என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்டில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். இந்தக் கட்டுரைகளை படித்த சந்தாதாரர்கள், மற்றும் வாசகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மற்றோரு பதிவில் வாஷிங்டன் போஸ்டின் காலியான அலுவலக அறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஷான், பிப்ரவரி 4ம் தேதியை 'மோசமான நாள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Ishaan Tharoor Post in X

வாஷிங்டன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் மட் முர்ரே கூறுகையில், ''வாசகர்களின் வாசிக்கும் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம். தொழில்நுட்ப மாற்றம் காரணமாக இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம். எல்லோருக்கும் எல்லாமுமாக ஒரு நிறுவனத்தால் எப்போதும் இருக்க முடியாது. நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்துக்கு பிறகு, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இ- மெயில் வாயிலாக தகவல் அனுப்பப்பட்டது'' என்கிறார்.

வாஷிங்டன் போஸ்ட் தனது விளையாட்டுப் பிரிவை முற்றிலும் நீக்கி விட்டது. அதோடு, மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கி வந்த நியூஸ் பீரோக்களை முற்றிலும் மூடியுள்ளது. கெய்ரோ பீரோ தலைவர் கிளாரி பார்க்கர் கூறுகையில், ''எங்களது குழுவின் அனைவரும் வேலையை இழந்துள்ளோம். இந்த முடிவை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று வேதனைப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் பேஸ்ட் பத்திரிகைக்காக உக்ரைன் சென்று போர்க்களச் செய்திகளை வெளியிட்டு வந்த செய்தியாளர் லிஸ்ஸி ஜான்சனும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

''வாஷிங்டன் போஸ்ட் கடந்த 150 ஆண்டுகளாக அமெரிக்க ஜனநாயகத்தை கட்டமைக்க பல்வேறுவிதங்களில் உறுதுணையாக இருந்தது. ஆனால், தற்போது இந்தப் பத்திரிகை தனது நற்மதிப்பை இழந்து நிற்கிறது '' என்று இந்த நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் செய்தியாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

The Washington Post - Office

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை 1877 ஆம் ஆண்டு வாஷிங்டன் நகரத்தில் ஸ்டில்சன் ஹட்சின்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. கடந்த 1889 ம் ஆண்டு முதல் 1933 வரை, பலரிடம் கைமாறியது. 1946ம் ஆண்டு யூஜீன் மேயர் என்பவர் இந்த பத்திரிகையை வாங்கி, தனது மருமகன் பிலிப் கிரஹாமிடம் ஒப்படைத்தார். இவர், தலைமையில் பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது. 1963ம் ஆண்டு மன அழுத்தம் காரணமாக கிரஹாம் தற்கொலை செய்துகொண்டர். தொடர்ந்து, இவரின் மனைவி கேத்தரின் கிரஹாம் பத்திரிகையை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டினார். இவர்களின் குடும்ப சொத்தாக இருந்த வாஷிங்டன் போஸ்ட் 2013 ம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு விற்கப்பட்டது. 250 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த பத்திரிகையை ஜெப் பெசோஸ் வாங்கினார். தற்போது, இந்த நிறுவனத்தின் 300 எடிட்டோரியல் ஊழியர்கள் உள்பட 30 சதவிகிதம் பேர் பணியை இழந்துள்ளனர். ஆனால், பணி நீக்கம் தொடர்பாக ஜெப் பெசோஸ் இதுவரை வாய் திறக்கவில்லை.