Son and Father  keralakaumudi.com
செய்திகள்

மகனை காப்பற்ற சிறுத்தைப்புலியை கொன்ற தந்தை...

எனினும், ஒரு பாதுகாக்கப்பட்ட விலங்கு கொல்லப்பட்டுள்ளது. வனச்சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எம். குமரேசன்

மகனை காப்பாற்ற சிறுத்தைப்புலியை கொன்ற 60 வயது தந்தை மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் கிர் சோம்நாத் மாவட்டத்தில்தான் உலகப்புகழ்பெற்ற கிர் வனவிலங்குகள் பூங்கா உள்ளது. 544 சதுர கிலோமீட்டர் பரவியுள்ள இந்த வனவிலங்குகள் பூங்காவில் சிங்கங்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. சிங்கங்கள், சிறுத்தைப்புலிகள் அடிக்கடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வருவது வழக்கம். இதனால், மனித- விலங்கு மோதலும் அடிக்கடி இந்த மாவட்டத்தில் நடக்கும். கிர் வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியுள்ள உனா பகுதியில் கங்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுபாய் நாரண்பாய் (வயது 60). இவர்,கடந்த 28ம் தேதி இரவு தனது வீட்டின் முன் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுத்தைப்புலி ஒன்று இவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.

இதையடுத்து, சிறுத்தையுடன் பாபுபாய் போராட்டம் நடத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த பாபுபாயின் மகன் ஷர்துல் (வயது 27) வெளியே ஓடி வந்து பார்த்துள்ளார். தந்தை சிறுத்தையுடன் போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, சிறுத்தையை விரட்ட அவர் முயற்சித்தார். அப்போது, பாபுபாயை விட்டு விட்ட சிறுத்தைப்புலி ஷர்துல் மீது பாய்ந்து கடித்து குதற தொடங்கியது . ஷர்துலின் தாடையை கவ்விக் கொண்டு தாக்க தொடங்கியது. இதைப் பார்த்த தந்தை பாபுபாய் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து சிறுத்தையை சராமரியாக வெட்டினார். இதில், சிறுத்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. பின்னர், இருவரும் உனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாபுபாய்க்கு மட்டும் உடலில் 50 தையல்களுக்கு மேல் போடப்பட்டுள்ளது. இருவருக்கும் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

Babubhai was sleeping on this cot

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டு கிடந்த சிறுத்தைப்புலியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். அரிவாளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தற்காப்புக்காக நடந்த கொலை என்றாலும், 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி பாபுபாய் மற்றும் அவரின் மகன் ஷர்துல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரி பக்வத் கூறுகையில், 'எப்படியாகினிலும் ஒரு பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு கொல்லப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் உண்மை தெரியும். எனவே, விரிவான விசாரணைக்கு பின்னரே, ஒரு முடிவுக்கு வரமுடியும்' என்கிறார்.

இந்த சம்பவம் குறித்து பாபுபாய் கூறுகையில், 'நான் உறங்கிக் கொண்டிருந்த போது, என்னை சிறுத்தைப்புலி தாக்கியது. எனது அலறல் சத்தம் கேட்டு, வந்த எனது மகனையும் கொல்ல முயன்றது. நாங்கள் அதை விரட்டவே முயன்றோம். ஆனால், அந்த சிறுத்தைப்புலி விடாமல் எங்களை தாக்கியது. இதனால், வேறு வழியில்லாமல் அதை அரிவாளால் வெட்டிக் கொன்றேன் . பின்னர், வனத்துறையினருக்கும் போன் செய்து தகவல் கூறினேன் ''என்று தெரிவித்துள்ளார்.

மகனை காப்பாற்ற சிறுத்தைப்புலியை கொன்ற , பாபுபாய் இப்போது, அந்த பகுதியில் பிரபலமாகி விட்டார். குஜராத்தில் பரவலாக சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் 2,200 சிறுத்தைப்புலிகள் இருப்பதாக வனத்துறை கணக்கிட்டுள்ளது. இதனால், உணவு தேடி அடிக்கடி சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் வருவதும் அதிகரித்துள்ளது. அப்படி, வரும் சிறுத்தைப்புலிகளை குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கிராம மக்கள் அடித்துக் கொல்வது வாடிக்கையாக உள்ளது.